மீண்டும் நர்த்தகி!
திருநங்கை நர்த்தகி நடராஜனைப் பற்றி 3 வருடங்களுக்கு முன் இந்தப் பதிவை எழுதினேன். இந்த வருடம் ஆர்லாண்டோவில் நடைபெற்ற தமிழ் விழாவில் மீண்டும் அவருடைய நடனத்தைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது.
மேலும் அழகு கூடியவராய், மேலும் தமிழ் நெஞ்சங்களுக்கு நெருக்கமானவராய் ஆனார், 'சிலம்பும் தமிழும்' என்கிற தலைப்பில் அவர் ஆடிய சிலப்பதிகார நடனத்தின் மூலம்!
சூரிய ஒளியையும், நேரம் தவறாமல் வரும் மழையினையும் போற்றும் புகழ் பெற்ற சிலப்பதிகாரப் பாடலான "திங்களைப் போற்றுதுந் திங்களைப் போற்றுதும்" பாடலுக்கான நடனத்தைத் தொடர்ந்து, கண்ணகியின் ஆடம்பரமான திருமண வைபோகம். ஊரே வியக்கும் வண்ணம் நடந்த அந்தத் திருமணத்தின் நுணுக்கமான விசயங்களையும், அதனைத் தொடர்ந்து நிகழும் ஒரு காவியத்தையும், ஒரே ஒருவர் தன் கண்களாலும், கைகளாலும், உடல் அசைவுகளாலும் ஒரு பெரும் கூட்டத்திற்கு புரியவைத்திவிட முடியும் என்பது பிரமிக்க வைக்கும் உண்மை தான்! நான் சிலப்பதிகாரத்தைப் படித்ததில்லை. ஆனால் நர்த்தகியின் நடனம் முழு சிலப்பதிகாரத்தையும் அதன் இலக்கிய நயத்தையும் எனக்குப் புகட்டியது.
கண்ணகி-கோவலனின் திருமணம் முடிந்த கையோடு, வரம்பு மீறாத அந்த முதலிரவு காட்சிகள் அருமை! கோவலன் கண்ணாடியில் தன்னைப் பார்த்து சரி செய்துகொண்டு, தன் மேல் வாசனை திரவியம் தடவிக்கொண்டு முதலிரவுக்குச் செல்லும் காட்சி புன்னகையை வரவழைத்தது. ஒரு நொடியில் அச்சமும் நானமும் ஆட்கொண்ட கண்ணகியாகவும், அடுத்த நொடியில் கண்ணகியில் அழகில் மயங்கி மருகும் கோவலனாகவும் மாறி மாறி உணர்ச்சிகளை உதிர்த்து அசர வைத்தார் நர்த்தகி. கூட்டம் கட்டுண்டு கிடந்தது அவருடைய அபிநயத்தில்...
கோவலன் மாதவியைப் பார்த்தபின் அடையும் மனப்போராட்டங்களை நர்ததகி ஆடியது மற்றொரு உணர்ச்சிக் குவியல்! மாதவியின் பின்னால் கோவலன் போகும் போது, வீட்டில் கண்ணகி தனக்காகக் காத்திருப்பதை நினைத்து ஒரு நிமிடம் தயங்குகிறான், ஆனால் மாதவி "என்னுடன் வா" என்று தன் விழிகளால் அழைத்ததும், மறுபேச்சு பேசாமல் அவள் பின்னே செல்லும் காட்சி பார்க்கச் சுவை சொட்டியது.
பின்னால் கண்ணகி கோவலனுடன் மதுரைக்கு வருவதும், கோவலன் சூழ்ச்சியால் கொல்லப்படுவதும், கண்ணகி பாண்டிய மன்னனிடம் நீதி கேட்பதும், சிலம்பைத் தூக்கியடித்து தன் கணவன் நிரபராதி என்று நிரூபிப்பதும், தொடர்ந்து மதுரை எறிவதும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அதி அற்புத நடன வெளிப்பாடுகள்!
இறுதியாக 'இனம் வாழ மொழி காப்போம்! மொழி காக்க கைகோர்ப்போம்!' என்கிற தமிழ் விழாவின் சூளுரையில் அவர் நடனத்தை முடித்தபோது அரங்கம் எழுந்து நின்று வெகுநேரம் ஓயாது கைதட்டி மகிழ்ந்தது.
எனக்கு உண்மையில் உடம்பெல்லாம் புல்லரித்துப் போனது. நான் பொதுவாக அதிகம் உணர்ச்சிகளை வெளிகாட்டாதவள். உலகமே அழியப்போகும் நேரத்தில் கூட, "அப்படியா?" என்று மெதுவாகக் கேட்பேன் என்று என் கணவர் என்னைக் கிண்டல் செய்வார். ஆனால், நர்த்தகியின் நடனம் முடிந்தவுடன், செலுத்தப்பட்டவள் போல் நெராக மேடையின் பின் புறம் சென்றேன். அதற்குள் அங்கே நர்த்தகியை ஒரு சிறு கூட்டம் சூழ்ந்திருந்தது. பொறுமையாக் காத்திருந்து என் முறை வந்ததும், அவரே எதிர்பார்க்காத வண்ணம் அவரைக் கட்டி அணைத்து என் பாராட்டைத் தெரிவித்தேன்.
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை எழுதியபோது அதில் பின்னிப் பூட்டிவைத்த அழகான, சோகமான, வீரமான, கோபமான உணர்வுகளை எல்லாம் நர்த்தகி அன்று ஒவ்வொன்றாகக் கட்டவிழ்த்து மேடையில் தவழவிட்டார்! நர்த்தகியின் நடனத்திற்கு பலம் சேர்த்தார் சிலப்பதிகாரப் பாடல்களை கணீரென்று பாடிய பேராசிரியர் பாலசுப்ரமணியம். இந்த 'சிலம்பும் தமிழும்' நடனத்தை நர்த்தகி இந்தத் தமிழ் விழாவில் தான் முதன் முதலாக அரங்கேற்றினார் என்பது மற்றொரு சிறப்புச் செய்தி.