சமீபத்தில் நிதி உதவி கோரி எனக்கு அனுப்பப்பட்ட ஒரு மின் அஞ்சல், நான் பல வருடங்களாக மறந்துவிட்டிருந்த சில காட்சிகளை என் கண்முன் கொண்டு வந்தது.
சிறு வயதில் ரயில் பயணங்களின் போது, ரயில் நிலைய மரத்தடிகளில் ஒரு பெரிய நரிக்குறவர் கூட்டம் உட்கார்ந்திருப்பதை ஆச்சர்யத்தோடு பார்த்திருக்கிறேன். கைக்குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியவர் என்று எல்லா வயதினர்களும் அந்தக் கும்பலில் இருப்பார்கள். ஒரு ரயில் வந்து நின்றதும், ரயிலுக்கருகில் ஓடி வந்து பாசி-மணி-ஊசி விற்பார்கள். சிலர் பாட்டுபாடிக்கொண்டு நடனமாடுவார்கள். ரயில் மீண்டும் புறப்படும் போது ஜன்னல் வழியே தூக்கி எறியப்படும் சில்லரைகளைப் பொறுக்கிக்கொண்டு மீண்டும் அந்த மரத்தடிக்கு ஓடிவிடுவார்கள். அவர்களை நான் மறந்து போய் பல வருடங்கள் ஆகிறது.
அதேபோல், அவ்வப்போது அதிகாலைகளில் வீட்டின் முன் குடுகுடுப்பை சத்தமும் "நல்ல காலம் பொறக்குது" என்ற குரலும், அழகாய் அலங்காரம் செய்யப்பட்டு தலையாட்டிக்கொண்டுநிற்கும் பூம் பூம் மாடும் என் நினைவில் இருந்து மறைந்து பல வருடங்கள் ஆகிறது.
ஆனால் சில நல்ல உள்ளங்கள் அவர்களை மறக்கவில்லை. அந்த பாசிமணி ஊசியும் பூம் பூம் மாடும் எத்தனை காலம் தான் இவர்களுக்கு சோறு போடும்? இவர்களின் பிள்ளைகள் படித்து தலையெடுக்கவே முடியாதா? 'அடிப்படை கல்வி என்பது ஒவ்வொரு குழந்தையின் உரிமை' என்று ஐ.நா சபை கூறுகிறது. தமிழகத்தில் இருக்கும் எண்ணிலடங்கா ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடையில் இந்த நரிக்குறவர்களையும் பூம் பூம் மாட்டுக்காரர்களையும் படிக்கவைக்கவேண்டுமென்று நினைக்கும் சிலரும் இருக்கிறார்கள்.
பாசிமணி ஊசியும் பூம்பூம் மாடும் கைகொடுக்காததால் நாகப்பட்டிணம் போன்ற கடலோரப் பகுதிகளில் குடியேறி பிச்சையெடுத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தவர்களின் எஞ்சியிருந்த வாழ்க்கையையையும் அடித்துப் பறித்துக்கொண்டு போய்விட்டது நான்கு ஆண்டுகளுக்கு முன் வந்த சுனாமி! நிர்கதியாய் நின்றவர்களை 'வானவில்' என்றொரு தொண்டு நிறுவனம் அரவணைத்துக்கொண்டது. தெருவில் பிச்சையெடுத்துக்கொண்டிருந்த குழந்தைகளை வகுப்பறைக்குக் கொண்டு வந்தது. முதலில் இந்தக் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வானவில் முயற்சித்தபோது, "இவர்கள் திருடுபவர்கள், நாற்றமடிப்பவர்கள்..." என்றெல்லாம் சொல்லி பிறரால் ஒதுக்கப்பட்டார்கள். எனவே வானவில் நிறுவனமே இவர்களுக்கென்று விடுதி வசதியுடன் ஒரு பள்ளியைத் தொடங்கியது. தம் குழந்தைகளாவது படிக்கட்டும் என்று தம் நாடோடி வாழ்க்கையை பெற்றோர்கள் தொடர, தற்போது 103 நரிக்குறவர் மற்றும் பூம் பூம் மாட்டுக்காரர் இனத்தைச் சேர்ந்த குழந்தைகள் வானவில் பள்ளியில் படிக்கிறார்கள்.
வானவில் பள்ளி தொடங்கி மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. தர்மத்திற்கு சோதனை வராமல் இருக்குமா? ஆரம்பத்தில் நண்பர்கள், தெரிந்தவர்களின் நன்கொடைகளின் உதவியால் பள்ளி இயங்கிக்கொண்டிருந்தது. இந்த வருடம் ஒரு நிதி நிறுவனத்தில் வானவில் விண்ணப்பம் செய்தது. முதலில் ஒத்துக்கொண்ட அந்த நிதி நிறுவனம், கடைசி நேரத்தில் சில உட்பூசல்களினால் கையை விரித்துவிட, இன்று அந்த 103 குழந்தைகளும் மீண்டும் தெருவுக்கு வந்துவிடுவார்களோ என்கிற நிலமை ஏற்பட்டிருக்கிறது!
வானவில் மீண்டும் தன் நண்பர்களிடம் உதவிக்காக கரம் நீட்டியிருக்கிறது. வானவில் பள்ளியின் நிறுவனர்களில் ஒருவரான ரேவதி எனக்குப் பரிட்சயமானவர். இவர் ஒரு social activist. நான்கு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா வந்து எங்க ஊர் தமிழ்ச் சங்கத்தில் பேசியிருக்கிறார். சில திரைப்படங்களில் உதவி இயக்குனாராக பணிபுரிந்திருக்கிறார். சமுதாய நோக்குள்ள குறும்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார். இவரிடமிருந்து வானவில் பள்ளிக்காக உதவி கேட்டு வந்த மின்னஞ்சலை தான் இந்த பதிவில் முதல் வரியில் குறிப்பிட்டிருந்தேன். எனக்குத் தெரிந்தவர்களிடம் இந்தச் செய்தியை கொண்டுசெல்கிறேன் என்று ரேவதியிடம் சொல்லியிருந்தேன். ஆதலால் இந்தப் பதிவு.
வருங்காலத்தில், மரத்தடிகளில், தெருக்களில் நரிக்குறவர் மற்றும் பூம் பூம் மாட்டுக்காரர் குழந்தைகளைக் காணவில்லையென்றால், அவர்கள் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று பெருமைபட்டுக்கொள்வோம்.
சில வானவில் புகைப்படங்கள் இங்கே: http://picasaweb.google.com/revathi.work/VanavilPietrasik உங்களால் முடிந்த நிதி உதவியை இந்தப் பள்ளிக்குச் செய்யுங்கள். காசோலைகள் அனுப்பவேண்டிய முகவரி:
Vanavil Trust
9, Second Cross Street
Marai Malai Nagar
Nagapattinam
Tamilnadu 611001
India.
தொலை பேசி எண்: 914365-249411