அமீர் கானின் 'Taare Zameen Par' (Like Stars on the Earth) திரைப்படம் பார்த்தேன்...அதன் பாதிப்பிலிருந்து இன்னும் மீளவில்லை. டிசம்பர் 2007 ல் வெளிவந்த இந்தத் திரைப்படம், குழந்தைகளுக்குக் கிடைத்த அரிய பரிசு! பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு நல்ல பாடம்!
'கயாமத் சே கயாமதக்' என்கிற இந்தி படத்தில் கலக்கலாக அறிமுகமாகிய அமீர் கான், காதல் நாயனாக, மசாலா ஹீரோவாக, வில்லனாக, தாதாவாக, எல்லாமுமாக நடித்தார். ஒரு கட்டத்தில் இது போதுமென்று நிறுத்திக்கொண்டு, சமூகத்திற்கு ஏதாவது செய்யவேண்டுமென்று நினைத்ததால், இன்று நடிகர்,ஹீரோ என்பதையெல்லாம் தாண்டி ஒரு மனிதநேயமுள்ள மனிதராகத் உயர்ந்து நிற்கிறார்.
படிப்பு, வீட்டுப் பாடம், முதல் ரேங்க், கல்லூரி அட்மிஷன், என்று போட்டிகள் நிறைந்த உலகத்தில் குழந்தைகளிடம் இயற்கையாக இருக்கும் ரசனை, கற்பனா சக்தி, கலைத் திறன்கள் ஆகியவை எப்படி ஒடுக்கப்பட்டு அவர்கள் ஆட்டு மந்தைகள் போல் நடத்தப்படுகிறார்கள் என்பது 'Taare Zameen Par' திரைப்படத்தின் மையக் கருத்து.
குழந்தைகளுக்குப் பிடிக்கும் விசயங்களெல்லாம் பல சமையம் பெரியவர்களுக்கு அன்னியமாக இருக்கிறது. ஈஷான் என்கிற 8 வயது சிறுவனின் கற்பனை உலகம் மிக அழகானது. வண்ணங்கள், மீன்கள், நாய்குட்டிகள், பட்டங்கள், ஓவியம் தீட்டுவது - இதெல்லாம் அவனுக்கு மிகவும் பிடித்தவை. பள்ளிக்குப் போய் மணிக்கணக்காக பாடம் பயில்வதில் அவனுக்கு விருப்பம் இல்லை. காரணம், அவனுக்கு 'dyslexia' என்கிற ஒருவித வினோதமான பிரச்சினை இருக்கிறது. இந்த பிரச்சினை உள்ளவர்களுக்கு எண்களும் எழுத்துக்களும் சரியாக படிக்க முடியாது. இந்தக் குறையை சரியான பயிற்சியின் மூலம் சரிசெய்துவிடலாம். ஆனால் ஈஷானின் ஆசிரியர்களும் பெற்றோர்களும் அவன் சரியாகப் படிக்கவில்லை என்று அவனிடம் கடுமையாக நடந்துகொள்கிறார்களே தவிர, அவனுடைய பிரச்சினை என்னவென்று தெரிந்துகொள்ள அக்கறை காட்டவில்லை. தன் மகன் தேரமாட்டான் என்ற முடிவுக்கு வந்துவிட்ட தந்தை, ஈஷானை போர்டிங் ஸ்கூலுக்கு அனுப்புகிறார். தன் இயலாமையுடன், பெற்றோர்களையும் வீட்டையும் பிரிந்த சோகமும் ஈஷானைத் தொற்றிக்கொள்ள, அவன் மனம் வெறுத்துப்போய் நடமாடிக்கொண்டிருக்கிறான். அந்தப் பள்ளிக்கு தற்காலிக ஆசிரியாராக வரும் அமீர்கான், தன் சுலபமான கலகலப்பான பாடம் நடத்தும் முறைகளினால் குழந்தைகளைக் கவர்கிறார். ஈஷானின் நடவடிக்கைகளைக் கவனித்து அவன் மேல் அக்கறை கொண்டு, அவனுடைய குறை என்ன என்று கண்டுபிடிக்கிறார். ஈஷானின் பெற்றோர்களிடமும், பள்ளித் தலைவரிடமும் பேசி, ஈஷானுக்கு சற்று கூடுதல் பயிற்சியும் கால அவகாசமும் தேவை என்பதை அவர்களுக்குப் புரியவைக்கிறார். பிறகு ஈஷானுக்கு தனிப்பட்ட முறையில் படிக்கவும் எழுதவும் பயிற்சி அளித்து அவனது தன்னம்பிக்கையையும் தனித் திறன்களையும் மீட்டெடுக்கிறார். இது தான் கதை.
ஆனால் இந்தக் கதையை திரைப்படமாக இயக்கியிருப்பது அமீர்கானுக்கு ஒரு மிகப் பெரிய சவாலாக இருந்திருக்க வேண்டும். முதலில் ஈஷான் காதாபாத்திரத்திற்கு தர்ஷீல் சபாரி என்கிறச் சிறுவனை எப்படித் தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை. அந்தப் பெரிய கண்கள், அழகான தெற்றுபற்கள், 'மக்கு' என்று எல்லாரும் திட்டும் போது சுருங்கும் முகம்...தன்னை சுற்றிய அழகான உலகத்தில் தனக்குப் பிடித்தவைகளை பார்க்கும் போது மலர்ந்து பளிச்சிடும் முகம், தன் பெற்றோர்களை பிரிந்து சோகத்தில் வாடும் முகம்...என்று எத்தனை விதமான முகபாவங்கள்?! அபாரமான நடிப்பு!
'மேரி மா' (என் அம்மா) என்கிற சங்கர் மகாதேவன் பாடிய பாடல்...கேட்கும் போதெல்லாம் மனம் கரைகிறது. ஒரு சிறுவன் தன் மனதில் உள்ள பயங்களை எல்லாம் தனக்கு மிகவும் நெருக்கமான தன் அம்மாவிடம் சொல்கிறான் இந்தப் பாடல் மூலம். "என்னை ஏன் இவ்வளவு தொலை தூரம் அனுப்புகிறாய் அம்மா? நான் அவ்வளவு மோசமானவனா?" என்கிற வரிகள் நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.
அதே போல் 'தாரே சமீன் பர்' (பூமியின் நட்சத்திரங்களைப் போல) என்கிற பாடல் - இதுவும் சங்கர் மகாதேவன் பாடியது. பூமியில் இருக்கும் நட்சத்திரங்கள் போன்றவர்கள் குழந்தைகள். இவர்களை நாம் இழந்துவிடக் கூடாது என்கிற அர்த்தத்தில் அமைந்த பாடல் வரிகள் மிகவும் அருமை.
திரைப்படம் முழுவதுமே மனதைத் தொடும் காட்சிகளால் பின்னப்பட்டிருக்கின்றன, ஆனாலும் எனக்கு மிகவும் பிடித்த காட்சிகள் இவை.
* வீட்டுப்பாடம் செய்யாததால் வகுப்பிலிருந்து வெளியேற்றப்படும் ஈஷான், சுதந்திரமாக கால் போன போக்கில் நடந்து திரிந்து வெளியுலக நடப்புகளை அனுபவித்து ரசிக்கிறான். உதாரணத்திற்கு, வழியில் ஒருவர் தண்ணீர் பாட்டிலிலிருந்து தண்ணீரை அப்படியே மொடக் மொடக்கென்று லாவகமாக குடிப்பதை வியப்பாகப் பார்க்கும் ஈஷான், தானும் அப்படி செய்ய முயன்று, தன் முகம் முழுவதிலும் தண்ணீரை ஊற்றிக்கொள்கிறான் :-)
* ஈஷானுக்கு 'dyslexia' இருப்பதைப் புரிந்துகொள்ளும் அமீர்கான், அதனைப் பற்றி வகுப்பில் இருக்கும் மாணவர்களுக்கு விளக்கும் போது, அந்தப் பிரச்சினை ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின், தாமஸ் எடிசன் போன்றவர்களில் தொடங்கி அபிஷேக் பச்சன் உள்பட பல பிரபலங்களுக்கு இருந்திருக்கிறது, ஆனால் அவர்கள் அதனை கடந்து வாழ்க்கையில் வெற்றி பெற்றார்கள் என்று சொல்கிறார். அதனைக் கேட்டவுடன் ஈஷானின் தலை லேசாக நிமிரும். அவனுள் நம்பிக்கை துளிர் விடத் தொடங்குகிறது என்பதை விளக்கும்காட்சி.
* அதே 'dyslexia' பற்றி ஈஷானின் பெற்றோர்களிடம் அமீர்கான் விளக்கும் போது, ஈஷானின் தந்தை அதை நம்பாமல், "இல்லை! அவன் வேண்டுமென்றே தான் படிக்க மறுக்கிறான். அவன் திமிர் பிடித்தவன்" என்கிறார். உடனே அமீர்கான், ஜப்பானிய(சீன?) மொழியில் சில வார்த்தைகளைக் காட்டி "இதை படியுங்கள்" என்கிறார். தந்தை "இதை எப்படி என்னால் படிக்க முடியும்?" என்கிறார். "முடியும். படியுங்கள்" என்று மீண்டும் சொல்கிறார் அமீர்கான். "என்னால் படிக்க முடியாது" என்று கோபமாகச் சொல்கிறார் தந்தை. "இல்லை நீங்க படித்துத்தான் ஆகவேண்டும்" என்று மிரட்டுகிறார் அமீர்கான். அந்த கணத்தில் தந்தை தன் மகனின் நிலைமையை சட்டென்று புரிந்துகொள்கிறார். ஈஷான் வேண்டுமென்றே படிக்க மறுக்கவில்லை, அவனால் உண்மையிலேயே எழுத்துக்களையும் எண்களையும் எவ்வளவு வற்புறுத்தினாலும் படிக்க முடியாது என்பதை அழகாய் பெற்றோர்களுக்குப் புரிய வைக்கிறார் அமீர்கான்.
* அமீர்கான் பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நடத்தும் அந்த ஓவியப் போட்டிதான் திரைப்படத்தின் highlight! ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்றாக உட்கார்ந்து ஓவியம் வரைகையில் அவர்களிடையே இருந்த இடைவெளியும் வித்தியாசங்களும் குறைகின்றன. ஈஷானின் ஓவியத்திற்கு முதல் பரிசு அறிவிக்கப்படும் போது கூச்சத்துடன் முன்னே வரும் ஈஷான், தன் ஆசிரியர் அமீர்கான் ஈஷானையே ஓவியமாக வரைந்திருப்பதைப் பார்த்து உதடுகள் துடிக்க உணர்ச்சி வசப்படுகிறான். அத்தனைப் பெரிய கூட்டத்தில் அவன் பாராட்டப்படும்போது, நொருங்கிப்போயிருந்த அவனுடைய தன்னம்பிக்கை மீண்டும் துளிர்விட, ஓடிச் சென்று அமீர்கானை கட்டி அணைத்துக்கொள்கிறான். நெஞ்சை உருக்கும் காட்சி.
* இறுதிக் காட்சி சித்திரமாக நம் மனதில் பதிகிறது. சதா தன் மகனைத் திட்டிக்கொண்டிருந்த தந்தை, அமீர்கானின் அன்பாலும் பயிற்சியாலும் ஒரு நல்ல மாணவனாக உருவாகியிருக்கும் ஈஷானைப் பார்த்து தன் தவறை உணர்ந்து அமீர்கானின் கைகளைப் பற்றிக்கொண்டு அழுகிறார். மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிய ஈஷான் விடுமுறைக்கு பெற்றோர்களுடன் தன் வீட்டுக்குச் செல்கிறான். காரில் சென்று ஏறும் முன், ஓடி வந்து அமீர்கானை கட்டி அணைத்து செய்கையினால் தன் நன்றியைத் தெரிவிக்கிறான்.
நமது தமிழ்ப்பட நாயகர்கள் இந்தத் திரைப்படத்தைப் பார்த்து வெட்கித் தலைகுனிய வேண்டும். அறிவாளுடன் ஓடுவது, தெருச்சண்டை போடுவது, துப்பாக்கியை ஸ்டைலாகப் பிடிப்பது, கவர்ச்சிக் கன்னிகளுடன் குத்தாட்டம் போடுவது போன்றவைகளிலேயே மூலை தேங்கிக் கிடக்கும் இவர்களுக்கு எங்கே ஒரு 8 வயதுச் சிறுவனின் நுன்னிய உலகத்தைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியும்? விஜய், அஜீத், சூர்யா போன்ற முன்னனி நாயகர்கள், முதல் காட்சியிலேயே தங்கள் வீரத்தை எப்படி அதிரடியாக பறைசாற்றலாம், அறிவாளுடனா அல்லது துப்பாக்கியுடனா என்று திட்டமிடுகையில், அமீர்கான் இந்தப் படத்தில் பாதிக்குமேல் தான் அறிமுகமாகிறார். எனக்கும் விஜய்யின் நடனம் பிடிக்கும், ரஜினி ஸ்டைல் பிடிக்கும். இப்போது நரேனின் (சித்திரம் பேசுதடி, பள்ளிக்கூடம், அஞ்சாதே) பரம விசிறி நான். வார இறுதிகளில் நண்பர்களுடன் நிறைய தமிழ்ப் படங்கள் பார்ப்பதுண்டு. ஆனால் 'Taare Zameen Par' போன்ற ஒரு படத்தை தமிழில் யாருமே எடுக்கவில்லையே என்கிற ஆதங்கம் எழுவதை தவிர்க்கமுடியவில்லை.
அமீர்கான் மட்டுமல்ல, 'சக் தே இந்தியா' (Chak De India) என்கிற திரைப்படத்தில் நடித்த ஷாரூக்கானும் மிகுந்த பாராட்டுக்குறியவர். ஹாக்கி அணித் தலைவராக வரும் ஷாரூக், முதல் காட்சியிலேயே 'துரோகி' பட்டத்துடன் அணியிலிருந்து வெளியேற்றப்படுகிறார். சில வருடங்கள் சென்ற பின், பெண்கள் தானே? என்று அலட்சியப்படுத்தப்பட்ட தேசிய பெண்கள் ஹாக்கி அணியை தன் கடுமையான பயிற்சியினால் உலகக் கோப்பையை வெல்ல வழி நடத்துகிறார். 'Provoked' என்கிற ஆங்கிலத் திரைப்படமொன்றில் கணவனால் கொடுமை படுத்தப்பட்ட, இரு குழந்தைகளின் தாயான பஞ்சாபி பெண்ணாக உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கிறார். இதே ஐஸ்வர்யா ராய், doom2 படத்தில் என்னமாய் நடனமாடி அசத்தியிருக்கிறார்? இப்படி இரண்டு முற்றிலும் சம்பந்தமேயில்லாத கதாபாத்திரத்திரங்களில் நடித்து இரண்டிலும் வரவேற்பை பெறுவதற்கு உண்மையிலேயே திறமை இருந்தால் தான் முடியும். தன் நடிப்புத் திறமையில் நம்பிக்கையற்றவர்கள்தான் 'பஞ்ச்' டயலாக்கிலும், வெட்டி பந்தாவிலும் நேரத்தை செலவழிக்கிறார்கள். இதை தமிழ் பட ஹீரோக்கள் உணர்வார்களா?