Tuesday, December 27, 2005
விமானம் எந்தன் அபிமானம்
எனக்கு இன்றும் விமானங்கள் என்றால் ஒரு தனி ஈர்ப்பு உண்டு. அதுவும் தரை இறங்கும் விமானங்களைப் பார்த்து ரசிப்பது என்றால், எனக்கு மிகவும் பிடித்த விசயம்.
நான் பிறந்து வளர்ந்த சிதம்பரத்திற்கும் விமானங்களுக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது. எப்போதாவது அந்த வழியாகப் பறந்து செல்லும் ஹெலிகாப்டர்களின் சப்தத்தைக் கேட்டு வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து அதை அண்ணாந்து வேடிக்கைப் பார்த்தது நினைவில் இருக்கிறது. காலப்போக்கில் எனக்கும் விமானங்களுக்கும் உள்ள இடைவெளி குறைந்துகொண்டே வந்தது.
நான் பத்தாவது படிக்கும் போது அக்கா திருமணம் ஆகி அமெரிக்கா செல்லும்போது அவளை வழியனுப்ப குடும்பத்தாருடன் சென்னை விமான நிலையம் சென்றோம். அப்போது தான் நான் முதன்முதலில் ஒரு விமான நிலையத்தைப் பார்த்தேன். அக்கா நம்மை விட்டு பிரியப்போகிறாளே என்று அம்மா, அப்பா, அண்ணன்களெள்ளாம் பிழியப் பிழிய அழுதுகொண்டிருக்க, நான் மட்டும் கண்ணாடிச் சுவற்றிற்கு வெளியே தரை இறங்கும் விமானங்களை பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு அக்கா ஒவ்வொரு முறை வரும்போதும் போகும்போது மீனம்பாக்கத்துக்கு குதூகலத்துடன் செல்வேன். "ஏண்டி, நீ நான் வரும்போது சந்தோஷமா இருக்க, போகும்போதும் சந்தோஷமா இருக்கியே, எப்படி?" என்று அக்கா பல முறை கேட்டிருக்கிறாள்.
பின்னர் கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு அமெரிக்கா செல்ல விசாவுக்குக் காத்திருந்த நாட்களில், மைலாப்பூரில் தங்கியிருந்த வீட்டிற்கு மேலே அடிக்கடிப் பறக்கும் விமானங்களைப் பார்க்கும்போதெல்லாம், "நானும் இதேமாதிரி ஒரு விமானத்தில் சீக்கிரம் பறக்கப் போகிறேன்" என்று சொல்லி என் தோழிகளை வெறியேற்றியிருக்கிறேன்.
அமெரிக்கா வந்த பிறகு விமானங்கள் சர்வசாதாரணமாகி விட்டன. உள்ளூர் விமானங்களில் போவதும் வருவதுமாக இருந்தாலும், அதன் மேலுள்ள ஈர்ப்பு மட்டும் இன்னும் குறையவில்லை. வாசிங்டன் டிசிக்கு வந்தபிறகு, என்னுடைய இந்த ரசிப்புத்தன்மைக்காகவே வடிவமைத்தது போல் ஒரு இடத்தைக் கண்டுபிடித்தேன்! ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தின் மிக அருகில் ஒரு பூங்கா இருக்கிறது. அங்கே நின்று கொண்டு பார்த்தால் ரன்வேயிலிருந்து புறப்படும் விமானங்கள், தரையிறங்கும் விமானங்களை மிக அருகில் பார்க்கலாம். நாம் நின்று கொண்டிருக்கையில், தலைக்கு மேலே உருமும் சப்தத்துடன் தரையிறங்கும் விமானங்களைப் பார்க்க ரொம்ப த்ரில்லிங்காக இருக்கும். குழந்தைகள் சற்று பயப்படுவார்கள். இதைப் பார்ப்பதற்காகவே மக்கள் கூட்டமாக இங்கே வருவார்கள். நான் நிற்கும் போது, எனக்குப் பின்னால் விமானம் தாழ்வாக பறப்பது போல் ஒரு புகைப்படம் எடுக்க எவ்வளவோ முயன்றும் என் கணவரால் முடியவில்லை! காமிராவை க்ளிக்குவதற்குள் விமானம் விரைவாகக் கடந்து சென்றுவிடுகிறது!
இதெல்லாம் பத்தாதென்று, இப்போது வாசிங்டன் டிசி வட்டாரத்தில் உள்ள மற்றொரு சர்வதேச விமான நிலையத்தின் அருகில் குடி வந்தாகிவிட்டது! இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. இப்போது விமானங்கள் என் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டன. தினம் அலுவலகத்திற்கு நானும் என் கணவரும் விமான நிலையத்தை ஒட்டிய சாலையில் காரில் செல்வோம். எங்கள் கூடவே விமானங்களும் பயணிக்கும். காருக்கு எதிரே மிகத் தாழ்வாகப் பறந்து தரையிறங்கும். பார்க்கவே ரம்மியமான காட்சியாக இருக்கும். இந்த விமானங்களினால் மற்றுமொரு நன்மையும் உண்டு எங்களுக்கு. முன்பெல்லாம் இந்தக் கார் பயணத்தின் போது குடும்ப விசயமாக எனக்கும் என் கணவருக்கும் காரசாரமாக விவாதம் நடக்கும். இப்பொழுதெல்லாம் "அதோ பார் US Airways போகிறது" என்று கணவர் சொல்ல, "உங்களுக்கென்ன கண் தெரியலையா? அது American Airlines" என்று நான் சொல்ல, விவாதம் சற்று வேறுவிதமாக நடக்கிறது!!! இது நன்மை. நன்மை இல்லாத ஒன்றும் நடந்தது. இரண்டு நாட்களுக்கு முன் தனியாக நான் கார் ஓட்டிக்கொண்டு அலுவலகம் செல்கையில், காருக்கு மேலே தரையிறங்கிக்கொண்டிருந்த ஒரு விமானத்தை பாராக்கு பார்த்துக்கொண்டே, சாலையில் சிவப்பு விளக்கைக் கவனிக்காமல் விளக்குக் கம்பத்தைக் கடந்து சென்றுவிட்டேன்.நல்ல வேளையாக குறுக்கே யாரும் வரவில்லை!. ஆனால் சிவப்பு விளக்கைக் கடந்து சென்றதற்காக என் காரை படம் பிடித்து, புகைப்படத்துடன் அபராதம் கட்டச்சொல்லி வீட்டுக்கு நோட்டீஸ் வந்துவிட்டது!
ஹம்ம்ம்ம்...எது எப்படியிருந்தாலும் தரையிறங்கும் விமானங்களின் அழகே தனி தான்!
பி.கு: நான் இவ்வளவு ரசிக்கும் விமானங்களில், பயணிக்க எனக்கு அறவே பிடிக்காது. சரியான போர்!
Monday, December 12, 2005
தவமாய் தவமிருந்து
ஒரு பாசமான தந்தையின் வாழ்க்கை வரலாற்றை மூன்றரை மனி நேரப் படச் சுருளில் அடைத்து நம் இதயத்தில் சொருகியிருக்கிறார் சேரன். இதுவரை வெளிவந்திருக்கும் சேரனின் படங்களிலேயே சினிமாத்தனம் மிகவும் குறைவாக உள்ள படம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். சேரனின் கிராமம், வீடு, ஹாஸ்டல், வாழ்க்கை எல்லாமே கிட்டே போய் தோட்டுவிடலாம் போல் நிஜத்துக்கு அவ்வளவு அருகில்!
நடிகர் சேரனை விட இயக்குனர் சேரன் தான் படம் முழுக்க மிளிர்கிறார். உணர்ச்சிபூர்வமான, துயரமான சில காட்சிகளில் கண்களில் கண்ணீர் வரச் செய்கிறாரே தவிர, அந்தக் காட்சியிலேயே வெகு நேரம் நம்மை உழலவிடாமல், சட்டென்று அடுத்தக் காட்சிக்கு சென்றுவிடுகிறார். அத்தனை கதாபாத்திரங்களையும் மிகையில்லாமல் ஆனால் மனதைத் தொடுகிற மாதிரி நடிக்க வைத்ததற்கே சேரனுக்கு ஒரு விருது கொடுக்கலாம்.
ராஜ் கிரண்!!! எப்படிச் சொல்வது? படத்தைப் பார்த்தால் தான் உங்களுக்குத் தெரியும். அவர் இல்லையென்றால் இந்தப் படமே இல்லை. மனிதர் என்னமாய் நடித்திருக்கிறார்!. தேசிய விருது சேரனுக்கு கிடைக்கிறதோ இல்லையோ ராஜ் கிரணுக்கு கட்டாயம் கிடைக்கும். இவருடைய முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாலே போதும்...அது ஒரு தனி திரைப்படம் போல இருக்கும்.
ராஜ் கிரண் தன் இரு மகன்களையும் வைத்து அழைத்துப்போகும் அந்த சைக்கிள் பயணம் மிக அழகு! அந்தச் சைக்கிளும் அவர் வாழ்க்கையில் கூடவே வருகிறது. பள்ளிக்கூட சுற்றுலாவிற்கு போகவேண்டும் என்று மகன் அடம்பிடிக்க, பணம் இல்லாத காரணத்தால் சுற்றுலாவிற்கு அனுப்பமுடியாவிட்டாலும், மகன்களைச் சமாதானப்படுத்துவதற்காக அந்தே சைக்கிளில் தன் குடும்பத்தைக் கூட்டிக்கொண்டு சொந்தச் சுற்றுலா போவாரே, அதைப் பார்க்கவே ஆசையாக இருந்தது. அரிசி பருப்பெல்லாம் எடுத்துக்கொண்டு போய், வெட்ட வெளியில் அடுப்பு வைத்து சமைத்துச் சாப்பிட்டு, நுங்கு சீவி ஓலையில் வைத்துச் சாப்பிட்டு, பிறகு அதே நுங்கில் சக்கரம் செய்து ஓட்டி, ஆற்றில் குளித்து...ஆஹா! எத்தனை டாலர்கள் செலவு செய்து ப்ளோரிடாவும், லாஸ் வேகாஸ¤ம் போனாலும் அந்த மாதிரி வருமா? மகன்கள் டீன் ஏஜ் வயது வந்த பிறகும் அதே சைக்கிளில் பயணம் தொடர்கிறது. "அப்பா பாலிடெக்னிக் படிக்கனும்ப்பா" என்று மூத்தமகன் சொன்னவுடன், கவலையும் யோசனையும் படர்ந்த முகத்துடன் "பாலிடெக்னிக் சேர என்னப்பா செய்யனும்? யாரப் பார்க்கனும்?" என்று பொறுப்பான தந்தையாக ராஜ் கிரண் கேட்கும் போது பலருக்கு தம் அப்பாக்கள் கண்களில் வந்து நிற்பது உறுதி. சேரன் இன்ஜினீரிங் கல்லூரிக்குச் செல்லும் போதும் தொடர்கிற அந்தச் சைக்கிள் பயணத்தில் ஒரே ஒரு மாற்றம். சேரன் சைக்கிளை ஓட்ட, ராஜ் கிரண் பின்னால் அமர்ந்திருக்கிறார். பிள்ளைகள் வளர்ந்த பின் அவர்களுடைய ஆசைகளும் கணவுகளுமே அவர்களுக்குப் பெரிதாகப் படும், பெற்றோர்களை விட்டு அவர்கள் விலகிச் செல்லத் தொடங்கிவிடுவார்கள் என்பதை உணர்த்தும்விதமாக ஒரு காட்சியில், சேரனுக்கு மற்ற மாணவர்களைப்போல் தானும் ஹாஸ்டலில் தங்கி படிக்கவேண்டும் என்கிற ஆசை மனதில் விழுந்துவிட, அன்று மாலை தந்தையை சைக்கிளில் உர்காரவைத்து ஓட்டும்போது, தந்தையின் சுமை அதிகமாகத் தெரிய, மூச்சிரைக்க சைக்கிளை ஓட்டுவார். மூத்த பிள்ளை வேலைக்குச் செல்லத் தொடங்கிய பிறகு, அந்தச் சைக்கிள் பயணம் நின்று போய்விடுகிறது. கடைசியில் ராஜ் கிரண் இறந்தபிறகு அவருடைய வீட்டிற்கு வரும் அவருடைய மூத்த மகன், ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அந்தச் சைக்கிளை வாஞ்சையுடன் துடைத்துச் சுத்தம் செய்யும் காட்சி மனதைப் பிசைந்தது.
தன் கணவனும் மகன்களும் தான் உலகமே என்று நினைக்கும் ஒரு சராசரி அம்மாவாக ராஜ் கிரணுக்கு இணையாக நடிப்பில் அசத்தியிருக்கிறார் சரண்யா. ஓடிப்போன சேரனும் அவர் மனைவியும் ஊருக்கு மீண்டும் வந்து தம் குடும்பத்துடன் இணைவது யதார்த்தமாக இருக்கிறது. ஊரே கூடி நின்று அவர்களைத் தூற்றி ஊரை விட்டு ஒதுக்கிவைக்கும் சினிமாத்தனம் தவிர்க்கப்பட்டு, கோபித்துக்கொண்டு கதவைச் சாத்திவிடும் சரண்யாவை ஊர்ப்பெண்கள் சமாதானப்படுத்துவது இயல்பாக இருக்கிறது.
சேரனைப் போலவே நானும் இன்ஜினீரிங் படிக்கும் போது ஹாஸ்டலில் தங்கிப் படிக்க ஏங்கியது, கல்லூரித் தோழிகளுடன் வீட்டில் சமைத்துச் சாப்பிட்டது, என்னுடைய அண்ணனும் அண்ணியும் தனிக்குடித்தனம் போகிறோம் என்று எங்கள் வீட்டை விட்டுப் போனபோது நொறுங்கிப் போன என் பெற்றோர்கள், நானும் என் கணவரும் ஒரு முறை ஊரில் செகண்ட் ஷோ கிளம்பியபோது, "இந்த நேரத்துக்கு சினிமா போகலைன்னா என்ன?" என்று என் மாமியார் கேட்டது... இந்த மாதிரி என் வாழ்க்கையில் நடந்த பலவற்றை காட்சிகளாக இந்தத் திரைப்படத்தில் பார்த்ததால் என்னை இந்தப் படத்துடன் மிகச் சுலபமாகத் தொடர்புப் படுத்திக்கொள்ள முடிந்தது.
ராஜ் கிரணுடைய மிகை இல்லாத அபாரமான நடிப்புக்கு பல காட்சிகளை உதாரணமாகச் சொல்லலாம். கல்லூரிக்குக் கிளம்பும் சேரனுக்கு பணம் கொடுக்க சைக்கிளை அடமானம் வைக்கச் சொல்லி ராஜ் கிரண் சொல்ல, "இருக்கற ஒரு சைக்கிளையும் அடமானம் வச்சிட்டு ஆத்திர அவசரத்துக்கு என்ன செய்வீங்க? என்று அவரைக் கடிந்து கொள்ளும் சரண்யா, வெளியே சென்று சில நிமிடங்களில் பணத்துடன் திரும்பி வந்து, அந்தப் பணத்தை சேரனிடம் கொடுத்துவிட்டு, மீண்டும் பாத்திரம் கழுவும் தன் வேலையைத் தொடர்வார். 'இவளுக்கு திடீரென்று பணம் எப்படிக் கிடைத்தது' என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு யோசையுடன் சரண்யாவைப் பார்க்கும் ராஜ் கிரணுக்கு, சரண்யாவின் வெறுமையான காதுகள் உண்மையை உணர்த்த, தன் மனைவியை பணித்த கண்களுடன் பெருமையாக ஒரு பார்வைப் பார்ப்பார். அவ்வளவுதான். அவள் கைகளைப் பிடித்துகொண்டு, "நீ எனக்கு மனைவியாக வருவதற்கு நான் என்ன தவம் செய்தேன்" என்று வசனம் பேசும் வேலையெல்லாம் இல்லை! இன்னொரு காட்சியில் தன் மகன் இரவு விபச்சார விடுதிக்குச் சென்று வந்திருக்கிறான் என்று தெரிந்தும், அவனை ஒன்றும் கேட்காமல், அவன் செண்ட் அடித்து, பெளடர் போட்டு அலங்கரித்துக் கொண்டு செல்வதை செய்வதறியாமல் தவிப்புடன் பார்த்துக்கொண்டிருப்பார். சம்பளப் பணத்தில் இரண்டாயிரம் ஏன் குறைகிறது என்று படுத்திருக்கும் தன் மகனிடம் கேட்க, அவன் தன் நண்பனுக்கு மருத்துவச் செலவுக்கு கொடுத்துவிட்டதாகத் சொல்ல, "என்னப்பா..." என்று மீண்டும் அவனை கெள்விக் கேட்கத் தொடங்கும் போது மகன் சட்டென்று போர்வையை இழுத்து மூடிக்கொள்ள, நீங்கள் எல்லையைத் தாண்டுகிறீர்கள் என்று தன் வளர்ந்த பிள்ளை உணர்த்துகிறான் என்று புரிந்துகொண்டு, நாகரீகம் கருதி வார்த்தைகளை விழுங்கி அமைதியாகிவிடுவார்.
இந்தப் படத்தில் ஒரு அரிய உத்தி ஒன்றை சேரன் கையாண்டிருக்கிறார். பெற்றோர்களைத் தியாகிகளாகவும், பிள்ளைகளைத் துரோகிகளாகவும் காட்டாமல், இரண்டு பக்கமும் நியாயம் இருப்பது போல் காட்சிகளை அமைத்திருப்பார். உதாரணமாக, சேரன் தன் பெற்றோர்களிடம், வேலை விஷயமாக கோயம்புத்தூர் செல்கிறேன் என்று பொய் சொல்லிவிட்டு கருவுற்றிருக்கும் தன் காதலியுடன் சென்னைக்கு 'எஸ்கேப்' ஆகும் காட்சி. ராஜ் கிரணும் சரண்யாவும் ஏமாற்றப்படுகிறார்களே என்று நம் மனம் பதைத்தாலும், சேரனின் சூழ்நிலையிலும் நியாயம் இருக்கிறது என்று தோன்றும். அதே போல் படுக்கை அறையில் கணவனுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் மூத்த மறுமகளை சரண்யா "ஏய் இங்க வாடி...வந்து இந்த வெங்காயத்தை உரிச்சிக்குடு. அப்படியென்ன தான் புருஷனோட குசுகுசுன்னு பேசிவியோ தெரியலை" என்று சொல்லும் போது, அந்த மறுமகளின் எரிச்சலிலும் ஒரு நியாயம் தெரியும்.
சரி! இப்ப குறைகளுக்கு வருவோம். குறைகள் மிகக் குறைவு தான் என்னைப் பொருத்தவரையில். இரண்டாம் பாதியில் தோய்வு தெரிகிறது. சேரனும், அவர் மனைவியும் சென்னையில் பிழைக்கச் சிரமப்படுவதை ஒரு பாடலில் நீண்ட நேரம் காட்டியிருக்கிறார். இன்ஜினீரிங் படித்த சேரன் வண்டியிழுப்பது கொஞ்சம் சினிமாத்தனம். பிற்பகுதியில் சேரன், மனைவி, குழந்தைகள், சேரனின் பெற்றோர்கள் எல்லோரும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது "they lived happily ever after" என்று முடியும் fairy tale போல் இருக்கிறது. தன் குழந்தைகள் தாத்தா பாட்டியின் அரவணைப்பில் வாழ வேண்டும் என்பதற்காக தன் மனைவியையும் குழந்தையையும் கிராமத்தில் தன் பெற்றோர்களிடம் விட்டுவிட்டு தான் மட்டும் மதுரைக்குச் சென்று தங்கி வேலைக்குப் போகச் சேரன் முடிவெடுப்பதும், அதில் தன் மனைவி வசந்திக்கும் முழு ஒப்புதல் உண்டு என்று அவர் சொல்வதும் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஒரு பெண், தன் புருஷன் தன்னோடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, தன் மாமனார் மாமியாரின் அன்பு தனக்கும் தன் குழந்தைகளுக்கும் கிடைத்தால் போதும் என்று நினைத்தால், அந்தப் பெண்ணைப் பார்த்து நான் ஆச்சர்யப்படுவேன். It's too good to believe. என்னால் அப்படி நினைக்கமுடியாது. படத்தின் பிற்பகுதியைப் பற்றி எனக்கும் என் கணவருக்கு இன்னும் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அதைப் பற்றி பிறகு தனி பதிவாக எழுதுகிறேன்.
Subscribe to:
Posts (Atom)