Tuesday, March 01, 2005

'காதல'் திரைப்படம் எனது பார்வையில்



கடந்த இரண்டு மாதங்களாகவே காதல் திரைப் படத்தைப் பற்றி நிறைய விமரிசனங்களை படிக்க நேரிட்டது. படத்தை பார்ப்பதற்கு முன்பே நண்பர்களிடையே கருத்துப் பறிமாற்றங்களும் வாக்குவாதங்களும் முழு மூச்சில் நடந்து கொண்டிருந்தது. எங்க ஊர் இந்தியக் கடைகளில் எப்படா 'காதல்' வீடியோ காசெட் வரும் என்று ஆவலாகக் காத்திருந்தோம். ஒரு வழியாக அந்த ஆசை நிறைவேறியது.

என்னுடைய திரை விமரிசனத்தை எழுதுவதற்கு முன், எந்த மாதிரி சூழ் நிலையில் இந்தப் படத்தைப் பார்த்தோம் என்பதையும் எழுதவேண்டும். இதையும் சேர்த்து படிக்க விரும்புபவர்கள் Part One னில் இருந்து தொடங்குங்கள். 'காதல்' விமர்சனத்தை மட்டும் படிக்க விரும்புபவர்கள் Part Two விற்கு சென்று விடுங்கள்.

Part One

ஒரு சனிக்கிழமை இரவு 'காதல்' பார்ப்பதற்காகவே ஒரு நண்பர் வீட்டில் மூன்று குடும்பங்கள் குழுமினோம். எல்லா நண்டு சிண்டுகளையும் sleep over என்று வேறு ஒரு வீட்டிற்கு அனுப்பிவிட்டோம். கோழிக் குழம்பு, மீன் குழம்பு, தக்காளி சாதம் என்று இரவு உணவை முடித்துக் கொண்டு நண்பர் வீட்டு பேஸ்மெண்டில் இருக்கும் 53 அங்குல டிவியின் முன் அமர்ந்தோம். இந்த நண்பர் வீட்டு பேஸ்மென்டுக்கு 'Omni Bus' என்று பெயர் வைத்திருக்கிறோம். நம்ம ஊர் deluxe Omni Bus பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நன்றாக சாய்ந்து வசதியாக உட்காரக்கூடிய இருக்கைகள், மெல்லிய இருட்டில் லேசான கலர் விளக்குகள், வீடியோவில் திரைப் படம் அல்லது பாடல் காட்சிகள் - இப்படித்தான் இருக்கும் நண்பர் வீட்டு பேஸ்மென்ட்! அமைதியான சனிக்கிழமை இரவு, அருமையான உணவு, அன்பான நண்பர்கள் - ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்ப்பதற்கு இதைவிட ஒரு நல்ல சூழ்நிலை அமையுமா?

திரைப்படம் தொடங்கியது. ஒரு நண்பருக்கு சினிமாவில் சுத்தமாக ஆர்வம் கிடையாது. அதுவும் காதலை மையமாக வைத்து எடுக்கப் படும் சினிமாக்களை வெறுப்பவர். நீங்கள்ளாம் படம் பாருங்கள், நான் என்னுடைய லாப் டாப்பில் என்னுடைய வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னவர், சில நிமிடங்களில் லாப் டாப்பை மூடி வைத்துவிட்டு படத்தை பார்க்கத் தொடங்கினார். இந்த ஸீன் சூப்பரா இருக்கும்...இப்ப பாருங்க என்ன நடக்குதுன்னு என்று அவ்வப்போது கத்திக் கொண்டிருந்த, படத்தை முன்பே பார்த்துவிட்ட இன்னொரு நண்பரை சற்று அடக்கி வைக்க வேண்டியிருந்தது. ஒவ்வொருவரும் எழுந்து பாத்ரூம் போகும்போதும் படம் அப்படியே ஸ்டில் செய்யப்பட்டது. நடு நடுவே சூடாக காபி போட ஒரு குழு எழுந்து சென்றது. இத்தனை கலாட்டாக்களுக்கு நடுவில் நான் 'காதல்' திரைப்படம் பார்த்தேன்.

Part Two

'காதல்' ஏற்கனவே பல முறை அரைத்த மாவு தான். பணக்காரக் காதலி - ஏழைக் காதலன் - காதலியின் வீட்டில் எதிர்ப்பு என்ற பழைய மாவுதான். ஆனால் நல்ல அரிசியையும் நல்ல உளுந்தையும் வைத்து, கலப்படம் செய்யாமல் வித்தியாசமாக, சுவையாக அரைத்திருக்கிறார்கள்.

அழகி, ஆட்டோகிராப் போன்ற படங்களின் வரிசையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதை வருடிய ஒரு படம்! எந்தவிதமான commercial compromise ம் செய்யப்படாத, சினிமாத்தனம் சற்றும் இல்லாத மிக யதார்த்தமான படம்! எனக்கு என்ன ஒரு ஆச்சரியம் என்றால், பாலாஜி சக்திவேல் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர். ஆனால் சங்கரின் பகட்டான பாணியையும் சிட்னியின் அழகையும், உலக அதிசயங்களயும், கம்ப்யூட்டர் கிராபிக்ஸையும் நம்பாமல் மதுரை மெக்கானிக் கடையையும், சென்னை மேன்சன்(Mansion) வாழ்க்கையையும் தத்ரூபமாகக் காட்டி, தன்னுடைய தனித்துவத்தை 'காதல்' திரைப்படத்தின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். சாதாரணமானவர்களுக்காக, சாதாரணமானவர்களைப் பற்றி எடுக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த படம் இது.

ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் இயக்குனரின் உழைப்பு ஒளிர்கிறது. கதாநாயகியின் அப்பா, சித்தப்பா, பாட்டி, மெக்கானிக் கடை சிறுவன் போன்ற கதாபாத்திரங்களை மிகக் கவனத்துடன் செதுக்கியிருக்கிறார்.

சந்தியா! 10ஆம் வகுப்பு படிக்கும் ஒரு பெண்ணுக்குள் இப்படி ஒரு தேர்ந்த முதிர்ச்சியான நடிப்புத் திறனா? சற்றே கஜோலின் சாயல்...உயரம் கம்மி, சற்று பருமனான தோற்றம், மாநிறம்! களையான முகம், உணர்ச்சிகளைக் கொட்டும் கண்கள்! பள்ளி முடிந்து வீடுக்கு வந்தவுடன், அப்பாவை அழைத்துக் கொண்டு வந்து வீட்டுக்கு எதிரே இருக்கும் தள்ளுவண்டிக் கடையில் 'ஜிகிர் தண்டா' வாங்கிக் குடிக்கும் மிக யதார்த்தமான பெண்! தனது ஸ்கூட்டியில் தோழியை அழைத்துக் கொண்டு வேண்டுமென்றே பரத்தின் மெக்கானிக் கடைக்கு வந்து அவரை 'சைட்' அடிப்பது, பரத்தின் கடையைத் தாண்டி பள்ளிக்குச் செல்லும் போதெல்லாம் அவரைத் திரும்பிப் பார்த்து லேசாக புன்னகைப்பது, ஓடிப்போய் திருமணம் செய்துக் கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்துவது போன்ற காட்சிகளில் காதல் கொடுக்கும் அந்த அசட்டுத்(குறுட்டு?) தைரியத்தால் உந்தப்படும் ஒரு இளம் பெண்னை அருமையாகச் சித்தரித்திருக்கிறார். முகம் முழுக்க அப்பிய கவலையுடன், நகத்தைக் கடித்துக் கொண்டு, அவஸ்தையுடன் சென்னை வீதிகளில் பரத்துடன் வீடு தேடி அலையும் காட்சிகளில் மனதைத் தொடுகிறார். ஒரு இளம் பெண் தெருவில் தனியாக நின்றால் அவளை ஆண்கள் எப்படியெல்லாம் பார்க்கிறார்கள், பேசுகிறார்கள் என்னும் கசப்பான உண்மையை பார்க்க முடிகிறது.

டான்ஸராக இருந்து நடிகனாக உருவாக தனக்குக் கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தை திறமையாகப் பயன்படுத்தியிருக்கிறார் பரத். க்ரீஸ் படிந்த அழுக்குச் சட்டையை அனிந்து கொண்டு மதுரை வீதியில் மெக்கானிக் கடை வைத்திருக்கும் ஒரு வாலிபனை அப்படியே கண்முன் நிறுத்துகிறார். சந்தியாவின் ஸ்கூட்டியை அவர் test drive செய்யும் காட்சியில் அவர் ஒரு உண்மையான மெக்கானிக்கை பைக் ஓட்டச் சொல்லிப் பார்த்தபின் நடித்திருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். தோள்களைக் குறுக்கிக் கொண்டு, கால்களை 180 டிகிரியில் பரத்திக் கொண்டு பரத் பைக் ஓட்டுவது ரொம்ப தத்ரூபம். நம்ம ஊர் மெக்கானிக் எல்லாம் அப்படித்தான் பைக் ஓட்டுவார்கள் என்று நண்பர்கள் கூட்டம் சொன்னது! பரத்தும் சந்தியாவும் மதுரையிலிருந்து சென்னை செல்லும் அந்த பஸ் பயணம் ஒரு கவிதை! 'உனக்கென இருப்பேன்' பாடல் கேட்கும் போது இதயம் கனக்கிறது.

அந்த மெக்கானிக் கடைச் சிறுவனை மறக்கவே முடியாது. 'சரிங்ணே' (சரிங்கண்னே) என்று அவன் சொல்லும் அழகே தனி! பரத்தின் வீட்டை காட்டுகிறேன் என்று சொல்லி அந்த வெள்ளை வேட்டி-சட்டைக் கும்பலை சுற்ற வைத்து அலைக்கழிக்கும் காட்சியில் குறும்பு கொப்பளிக்கிறது.


ஆரமபத்தில் இருந்து அழகாக, யதார்த்தமாக நகர்ந்துகொண்டிருக்கும் கதையின் இறுதிக் காட்சியில் சாதி வெறி தலை விரித்தாடுகிறது! முகமெல்லாம் அம்மை தழும்புடன் பிராந்தி கடை முதலாளியாக மகளின் மேல் உயிரையே வைத்திருக்கும் அப்பா தன் மகள் வேறு சாதியைச் சேர்ந்தவனைத் திருமணம் செய்துகொண்டுவிட்டாள் என்று தெரிந்ததும் அவளை இழுத்து வந்து அடித்து, தாலியை அறுக்கச் சொல்லி, அந்த இளைஞனின் மேல் பாறாங்கல்லை போட்டுக் கொல்லத் தயங்காத சாதி வெறிப் பிடித்தவராக இருக்கிறார். கதாநாயகியின் சித்தப்பா - ஆரம்பக் காட்சிகளிலும், கதாநாயகியைத் தேடி அலையும் காட்சிகளிலும் பொறுமையைக் கடைபிடித்தவர், கடைசியில் அவளை இழுத்து வந்து தன் அண்ணன் முன் தள்ளி "இப்ப உன் கோவத்தை காட்டு அண்ணே" என்று சொல்கிறார். பெண்களெல்லாம் சேர்ந்து சந்தியாவை அடிக்கிறார்கள்! அவள் கட்டியிருந்த புடவையை உருவித் தூக்கி எறிகிறார்கள்! பெண்களுக்குக் கூட இந்த அளவு சாதி வெறி இருக்குமா? நம்புவது சற்று
கடினமாக இருக்கிறது. பரத்தை ஆண்களெல்லாம் மூர்க்கமாக அடிப்பதைப் பார்த்து "அப்பா, நீங்க என்ன சொன்னாலும் செய்யறேம்ப்பா" என்று கதறும் சந்தியா, பரத்தின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தன் தாலியைக் கழற்றி தூக்கியெறிந்துவிட்டு மனம் உடைந்து மயங்கி விழும் சந்தியா, சில வருடங்கள் கழித்து பைத்தியமாகிவிட்ட தன் காதலனை சந்திக்க நேரிடும் போது, "முருகா! நான் தப்பு பண்ணிட்டேன் முருகா! நீ நல்லாயிருப்பேன்னு தானே நான் அன்னைக்கு அப்படி செஞ்சேன்? நீ இப்படி ஆகிட்டியே முருகா! நாம என்ன பாவம் செஞ்சோம்? காதலிச்சது தப்பா?" என்று கதறும் சந்தியா - இறுதிக் காட்சிகள் முழுவதும் தன் நடிப்பால் சந்தியா எல்லோரையும் உருக்குகிறார். Omni Busஸின் லேசான வெளிச்சத்தில் பார்த்தபோது எல்லார் கண்களிலும் கண்ணீர். மேக்கப் கலையாமல் முகம் கோணாமல் அழும்போது கூட நளினத்தைக் கடைபிடிக்கும் கதாநாயகிகளே! உள்ளத்தில் இருந்து அழும் இந்தச் சின்னப் பெண்ணைப் பாருங்கள்! நடிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!

இது வெறும் காதல் கதைதானா? இல்லை!

சாதியின் பிடியில் சிக்கிக் கொண்ட நம் சமூக அவலங்களின் கதை...
நட்பின் நெருக்கத்தைப் பற்றிய கதை...
பெற்றோர்கள்-பிள்ளைகள் முக்கியமான டீன் ஏஜ் பிள்ளைகளுக்கிடையே உள்ள communication gap பற்றிய கதை...
சென்னை கலாசாரத்தைப் பற்றிய கதை...
எதிர்காலக் கனவுகளுடன் சென்னை மேன்சன்களில் தங்கியிருக்கும் தமிழ் நாட்டு இளைஞ்சர்களைப் பற்றிய கதை...

இந்தப் படத்தை இன்னும் பார்க்காத ஒரு நண்பர் சொன்னார் - "பத்தாவது படிக்கும் பொண்ணுக்கு காதல் ஒரு கேடா? ஒரு பொண்ணு வீட்டை விட்டு ஓடிப் போய்விட்டால் அந்தக் குடும்பமே சின்னா பின்னாவாகிவிடுகிறதே! அந்த வேதனை எப்படிப் பட்டது! இந்த மாதிரி படம் எடுப்பவர்களின் பொண்ணும் பொண்டாட்டியும் ஓடிப் போகனும்!" என்று. படத்தைப் பார்த்த பிறகு அவருடைய கருத்து மாறுமா என்று தெரியவில்லை.

ஒரு நல்ல படம், அதைப் பார்த்து முடித்த பிறகும் நினைவில் பல நேரம் தேங்கி நிற்கும். அப்படிப்பட்ட படம் தான் 'காதல்'. என்னதான் நம் நாடு தொழில் நுட்பத்திலும் விஞ்ஞானத்திலும் முன்னேறியிருந்தாலும், சாதி மத சம்பந்தப்பட்ட விசயங்களில் மட்டும் மனிதனின் மனம் 300 வருடங்கள் பின் தங்கியே இருப்பது ஏன்? காதல் வயப்படுபவர்களின் விதி இந்த சாதி மத சமூக நிலைபாட்டுடன் பின்னிப் பினையப் பட்டிருப்பது கொடுமை! சாதி என்கிற ஒரே காரணத்தினால் பிரிக்கப்பட்டு, வாழ்க்கையின் சந்தோசங்களைப் பறிகொடுத்த எல்லா காதலர்களுக்காகவும் நான் வேதனைப்படுகிறேன்.

படத்தை பார்த்து முடித்த பிறகு என் மனதில் எழுந்த சில கேள்விகள்:

1. பரத் மதுரை தமிழ் பேசுகிறார். அவரைப் போலவே மதுரையில் வாழும் சந்தியா ஏன் மதுரை தமிழ் பேசவில்லை? ஒருவேளை கான்வென்ட்டில் படிக்கும் பெண் என்பதால் இருக்குமோ?

2. கையில் பணம் இல்லை, வீடு உடனே பிடிக்கவேண்டும், அதற்கு முதலில் திருமணம் உடனே செய்யவேண்டும் - இப்படி இருக்கும்போது யாராவது ப்யூட்டி பார்லர் சென்று மேக்கப் போட்டுக்கொள்வார்களா?

3. காதலிப்பவர்கள் எவ்வளவு vulnerable ஆக இருக்கிறார்களோ, அப்படியே அவர்களுடைய நண்பர்களும் இருக்கிறார்களே, அது ஏன்? சந்தியாவின் பள்ளித் தோழி எதற்காக சித்தப்பாவிடன் உண்மையை உளர வேண்டும்? பரத்தின் நண்பன் எதற்காக சித்தப்பாவை அவர்கள் வீட்டுக்கு அழைத்து வர வேண்டும்?

4. பைத்தியமாகிவிட்ட பரத்தைப் பார்த்து சந்தியா கதறும் காட்சியில், அதை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கும் சந்தியாவின் கணவர் தன் கையிலிருந்த குழந்தையை சந்தியாவிடம் கொடுக்கிறாரே, அதற்கு என்ன அர்த்தம்? உனக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறதம்மா என்று சந்தியாவுக்கு ஞாபகப்படுத்துகிறாரா?