முதல் முதலாக என் வலைப்பதிவில் என்ன எழுதலாம் என்று யோசித்த போது, தற்போது சூடாகப் பேசப்படும் சங்கராச்சாரியாரின் கொலை வழக்குப் பற்றி என் கருத்துக்களை எழுதலாம் என்று தோன்றியது. பிறகு ஆரம்பிக்கும் போதே ஒரு சிக்கலான விஷயத்தைப் பற்றி எழுதவேண்டாமென தோன்றியதால், முதலில் என்னைப்பற்றி எழுதுகிறேன்( நானும் ஒரு சிக்கலான கதாபாத்திரம் என்பது வேறு விஷயம்! போகப்போக தெரிந்துகொள்வீர்கள்.)
நான் தாரா. கணவருடன் வாசிங்டன் டிசியில் வசிக்கிறேன். வெள்ளை மாளிகைக்கு அடுத்த தெருவில் இருக்கிறது வேலை பார்க்கும் அலுவலகம். அதில் எனக்கு ரொம்ப பெருமை. ஆனால் சில முக்கிய தினங்களில் வெள்ளை மாளிகையை சுற்றி போக்குவரத்துத் தடை போடும்போது, காரில் சுற்றி சுற்றி வெகு தூரத்தில் காரை பார்க் செய்துவிட்டு குளிரில் நடந்து அலுவலகத்துக்குச் செல்லும் போது, அந்த பெருமை கோபமாக மாறும்.
எனக்கு தனிமையும் அமைதியும் மிகவும் பிடிக்கும். எனக்கு பிடித்த நேரம்...சனிக்கிழமைகளில் காலை வேலை. வேலைக்கு செல்லவேண்டும் என்ற பதட்டம் இல்லாமல் நிதானமாக எழுந்து, பல் துலக்கிவிட்டு சூடான காபியை உறிஞ்சிக்கொண்டு இணையத்தில் மேய்வது பிடிக்கும்.
இணையம் எனக்கு போதி மரம் போல. அதில் தேடி நான் கற்றுக்கொண்டவை ஏராளம்...ஏராளம்.
தொலை தூரக் கார் பயணம் பிடிக்கும். அமெரிக்காவின் சுத்தமான நீண்ட நெடுஞ்சாலைகளில் பாட்டுகேட்டுக்கொண்டு, பேசிக்கொண்டு, சண்டை போட்டுக் கொண்டு, அங்கங்கே McDonald's, Burger King, Waffle House, என்று எல்லாவகை உணவகங்களிலும் சாப்பிட்டுகொண்டே நானும் என் கணவரும் எந்த மூலைக்கு வெண்டுமானாலும் சளைக்காமல் காரில் பயணம் செய்வோம்.
நாவல்கள் படிப்பது பிடிக்கும். கல்லூரி நாட்களில் ஒரு நாவலை எடுத்தால் சோறு தண்ணி கூட இல்லாமல் அதை படித்து முடித்துவிட்டு தான் மறுவேலை பார்ப்பேன். Sydney Sheldon, John Grisham, Robin Cook - இவர்களின் நாவல்கள் அனேகமாக எல்லாவற்றையும் படித்திருக்கிறேன். ஜெயகாந்தனின் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்', சுஜாதாவின் 'பிரிவோம் சந்திப்போம்', வைரமுத்துவின் 'கள்ளிக்காட்டு இதிகாசம்' போன்ற தரமான கதைகள் இப்போது படிக்க முடியவில்லையே என்று ஏங்குகிறேன்.
நிறைய தமிழில் எழுதவேண்டும் என்று ஆசை. அதற்கு ஒரு தளமாக இந்த வலைப்பூ கிடைத்ததில் மகிழ்ச்சி. இந்த வலைப்பூவில் எழுதுவதன் மூலம் என் கருத்தை ஒத்த நன்பர்கள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையில் என் எண்ணச்சிறகுகளை நீட்டி, இணைய வீதியில் பறக்கிறேன்.