Wednesday, May 16, 2012

வாசிப்பும் வசதியும்


"I have always imagined that paradise will be a kind of library" - Jorge Luis Borges

  சொர்க்கம்(Paradise/Heaven) என்பது இந்தப் பிரபஞ்சத்திலேயே மிக அழகான மகிழ்ச்சிகரமான ஒரு பிரதேசம் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. இவர் எந்த அளவு புத்தகங்களை நேசித்திருந்தால் அந்த மிக மகிழ்ச்சிகரமான பிரதேசம் ஒரு நூலகம் போல் இருக்கும் என்று கற்பனை செய்திருப்பார்?!  இதைப் படித்ததும் என் தலையில் நானே ஒரு குட்டுப் போட்டுக்கொண்டேன்!  இன்னமும் சிறுபிள்ளைத்தனமாக சொர்க்கம் என்றால் அழகிய சோலைவனம், நீர்வீழ்ச்சி, பறவைகள், தேவதைகள், அருசுவை உணவு - இவை தான் நினைவுக்கு வருகிறது!  ஒவ்வொருவருக்கும் எது அதிகமான மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பதைப் பொறுத்து தான் சொர்க்கத்தைப் பற்றியதான அவர்களுடைய கற்பனை இருக்கும் என்று நினைக்கிறேன்.

பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் என் கைகளுக்காகவே படைக்கப்பட்ட ஒரு பொருள் புத்தகம் என்பது போல் எப்போதும் கையில் ஒரு புத்தகத்துடனே திரிந்துகொண்டிருப்பேன். அம்மா போடும் சூடான பக்கோடாவை சுவைத்துக்கொண்டு புத்தகங்களை மேய்வது, இரவு படுக்கையில் படுத்துக்கொண்டே சில நிமிடங்கள் புத்தகம் படித்துவிட்டு அப்படியே தூங்கிப்போவது, இரயிலில் செல்லும்போது சன்னலோரத்தில் உட்கார்ந்துகொண்டு புத்தகம் படிப்பது, படித்து முடித்த புத்தகத்தை தோழிகளிடம் கொடுத்து அவர்களிடம் வேறு புத்தகம் வாங்கிப் படிப்பது என்று சுகமான புத்தக அனுபவங்கள் நிறைய இருந்தது. எங்கள் வீட்டில் அப்பாவின் அறையிலும், முன்னறையிலும் பெரிய அலமாரிகளில் நிறைய புத்தகங்கள் இருக்கும். ஆனால் கடந்த பல வருடங்களாக எனது புத்தக வாசிப்பு வெகுவாக குறைந்து விட்டது.

இப்பொழுதெல்லாம் எனக்கு வேண்டியதை இணையத்திலேயே படித்துவிடுகிறேன். பற்றாததற்கு, இப்போது மின் புத்தகங்கள், amazon kindle, Apple ipad போன்ற நவீன வாசிப்பு வசதிகள் பிரபலமாகிவிட்டன. அச்சு புத்தகங்களின் மீதான கவனம் குறையத் தொடங்கிவிட்டது.  சமீபத்தில் ஒரு கிருத்துவத் திருமணத்தில், திருமணம் நடத்தி வைத்தப் பாதிரியாரின் கையில் பைபிளுக்குப் பதிலாக "ஐ பாட்" இருந்ததைப் பார்த்து நான் திகைத்துப் போனேன்!  ஒரு புனித நூலுக்கே இப்படி ஒரு நிலமையிருக்கும் போது, எதிர்காலத்தில் அச்சு புத்தகங்களே இல்லாமல் போய்விடுமோ என்கிற பயம் தோன்றுகிறது.

என் இரண்டரை வயது மகள் புகழ்மதிக்கு புத்தகத்தின் கடைசி பக்கத்தைத் திருப்பினால் அது புத்தகத்தின் முடிவு என்று புரியவில்லை!  கடைசி பக்கத்தைத் திருப்பிய பிறகும் "அடுத்த பக்கம் திருப்பு" என்று அடம் பிடிக்கும் அவளிடம், இன்னும் சில வருடங்களில், புத்தகப் பக்கங்களைத் திருப்பும் இந்தப் பிரச்சினையே உனக்கு இருக்காது என்று எப்படிச் சொல்வேன்?!


புதிய தொழில் நுட்பங்கள் நம்மைக் கவர்ந்திழுக்கும் போது, அதனுடன் மல்லுக்கு நிற்க முடியவில்லை.  முன்பெல்லாம் எங்கேயாவது சில நிமிடங்கள் காத்திருக்க நேர்ந்தால், ஒரு புத்தகத்தை எடுத்து படிப்பது வழக்கம்.  இப்போது கைகள் தானாக ஐபேடை(ipad) தேடுகின்றது மின் அஞ்சல், முகப்புத்தகம் அல்லது மின் நூல்கள் படிக்க!  புத்தகப் பக்கங்களைத் திருப்பும் அந்த உணர்வை கூட இழக்கவேண்டியதில்லை ஐபேடில்! அந்த மின் புத்தகப் பக்கங்களின் முனையை விரலால் தள்ளி பக்கங்களைத் திருப்பும் உணர்வை பெற முடிகிறது, திருப்பும் போது "சரக்" என்ற அந்த காகிதச் சத்தம் கூட வருகிறது.  எப்படி இதற்கெல்லாம் அடிமை ஆகாமல் இருக்க முடியும்?!

நாம தான் இப்படி ஆகிவிட்டோமென்றால் குழந்தைகளின் நிலை என்ன?  சிறு வயதிலிருந்தே எனக்கும் புத்தகங்களுக்கும் இருந்த ஒரு பந்தம் என் மகளுக்கு இல்லாமல் போய்விடுமோ என்று ஒரு கேள்வி இருக்கிறது.  அப்படி என்ன அவள் புத்தகங்கள் இல்லையென்றால் இழந்துவிடப் போகிறாள்?  பெரிதாக ஒன்றும் இல்லை.  அவள் அறிவு எந்த விதத்திலும் குறைந்துபோய்விடப்போவதில்லை.  ஆனால் சில பாரம்பரியமான அனுபவங்களை இழப்பாள். அந்த ரோட்டோர பழைய புத்தகக் கடைகளை அவள் பார்க்கவே முடியாது...மடங்கிப் போன ஒரு காகிதத்தை நேர் படுத்த கணமான புத்தகங்களை அதன் மேல் வைத்து "வெயிட் போட" தெரியாது...புத்தகப் பக்கங்களின் நடுவே மயில் இறகையும், பூக்களையும் வைத்து மூடி வைக்கத் தெரியாது...அவள் வீட்டு முன்னறையை அலங்கரிக்க புத்தக அலமாரிகள் இருக்காது...ஒரு புத்தகத்தில் அவளுடைய கையெழுத்திட்டு பரிசு கொடுக்க முடியாது...

இங்கே அமெரிக்காவில் நான் பார்க்கும், படிக்கும் விசயங்கள் மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது.  இங்கே வீட்டிலும் பள்ளியிலும், குழந்தைகளுக்கு அச்சு புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை பெற்றோர்களும் ஆசிரியர்களும் வலியுறுத்தி வருகின்றனர். பெற்றோர்கள் என்னேரமும் ஐ பாட், ஐ போன் சகிதம் திரிந்துகொண்டிருந்தாலும், தம் பிள்ளைகளுக்கு தினம் இரவு நேரங்களில் நல்ல கதை புத்தகங்கள் படிக்கிறார்கள். அந்த அச்சு புத்தகங்களை தம் குழந்தைகள் தொட்டு, பக்கங்களைத் திருப்பும் போது, ஒரு புது உலகத்தைத் தொடும் உணர்வு அந்தக் குழந்தைகளுக்கு ஏற்படும் என்று நம்புகிறார்கள். வண்ணங்கள், வடிவங்கள், மிருங்கங்கள் போன்றவற்றை அச்சு புத்தகங்களை பார்த்தே குழந்தைகள் கற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் நான் படித்த ஒரு கட்டுரையில், "படங்கள் நிறைந்த ஒரு அச்சுப் புத்தகத்தை மின் வடிவமாக மாற்றுவதில் என்ன இழப்பு இருக்க முடியும்?" என்ற கேள்வி எழுப்பப்பட்டது.  அதற்கு பதிலளித்த Junko Yokota என்கிற சிகாகோவைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் சொன்ன பதில் - "புத்தகத்தின் அளவும் வடிவமும் கூட அதனைப் படிக்கும் பொது உண்டாகும் உணர்வுபூர்வமான மற்றும் அறிவுபூர்வமான அனுபவத்தின் ஒரு பகுதியாகிறது. உதாரணத்திற்கு, அகலமான பக்கங்களை பரந்த நிலப் பரப்புகளை வர்ணிக்க பயன்படுத்தலாம். நீல வாக்கில் இருக்கும் பக்கங்களை உயரமான கட்டிடங்களைப் பற்றிய கதைகளுக்கு பயன்படுத்தலாம்.  எல்லாவற்றையும் சுருக்கி ஒரு மின் வடிவத்திற்குள் சட்டென்று அடைத்துவிட்டால் அது அர்த்தமற்றதாகப் போய்விடும்"




அச்சு புத்தகங்கள், மின் புத்தகங்கள் இரண்டுமே குழந்தைகளுக்கு முக்கியம் என்றும் பல நிபுணர்கள் கருதுகிறார்கள். "Raising a Reader" என்கிற நிறுவனத்தின் இயக்குனர் Gabrielle E.Miller என்கிற பெண்மணி, "ஒரு குழந்தை எப்போது ஒரு அச்சு புத்தகத்தை படித்து மகிழ வேண்டும் என்பதும், எப்போது ஒரு புதிய நவீன வாசிப்பு வசதியை பயன்படுத்த வேண்டும் என்பதும் பெற்றோர் கையில் தான் இருக்கிறது.  உதாரணத்திற்கு, 15 அச்சு புத்தகங்களை ஒரு விடுமுறைக்கு செல்லும் போது பெட்டியில் வைத்து எடுத்துச் செல்ல முடியாது, ஆனால் Kindle ஒன்றை எடுத்துச் செல்லலாம்.  அதே சமையம், தண்ணீர் தொட்டியில் விளையாடிக்கொண்டிருக்கும் ஒரு குழந்தையிடம் kindle ஐ தூக்கிக் கொடுக்க முடியாது.  ஆனால் வினைல்(vinyl) புத்தகத்தைக் கொடுக்கலாம். இப்படி இரண்டு புத்தக வடிவங்களுக்கும் பயன்பாடு இருக்கிறது" என்கிறார். 

புத்தகங்களை இழக்க மனம் இல்லை, அதே சமையம் நவீன வாசிப்பு வசதிகளையும் புறக்கணிக்க முடியாது. பொறுமையாக யோசித்துப் பார்க்கையில், இரு தரப்பு கருத்துக்களுமே சரி என்று எனக்குப் படுகிறது. மறைந்து வரும் அச்சு புத்தக வாசிப்பின் பக்கம் மனம் சாய்ந்தாலும், தொழில் நுட்ப ரீதியாக அதி வேகமாக வளர்ந்து வரும் உலகத்தில் வாழ்ந்துகொண்டு, ஒரு நவீன வசதியை குழந்தைகளிடமிருந்து மறைப்பது சரியல்ல. குழந்தைகள் வாசிக்கிறார்கள் என்பதே முக்கியம்.  அச்சு புத்தகமா, மின் புத்தகமா என்று நாம் கட்சி பிரிக்கவேண்டிய அவசியம் இல்லை. கற்றலில் புதிய வழி முறைகள் இருப்பதும், அவற்றை குழந்தைகளுடன் சேர்ந்து பரிசோதனை செய்வதும்கூட ஒரு உற்சாகமான அனுபவம் தான்! மேலும், ஒரு புத்தகத்தின் உண்மையான மதிப்பு, அதன் உள்ளடக்கத்தில் இருக்கிறது.

மனம் சமாதானமாகிவிட்டாலும், எனக்கு ஒரே ஒரு வருத்தம் எஞ்சியிருக்கிறது.  இன்னும் 50 வருடங்கள் சென்ற பின்னர், Jorge Luis Borges போல சொர்க்கம் என்பது நூலகம் பொல் இருக்கும் என்று சொல்லும் அளவு  புத்தகங்களை நேசிப்பவர்கள் யாரேனும் இருப்பார்களா?! 



















8 comments:

ராமலக்ஷ்மி said...

/புத்தகங்களை இழக்க மனம் இல்லை, அதே சமையம் நவீன வாசிப்பு வசதிகளையும் புறக்கணிக்க முடியாது. பொறுமையாக யோசித்துப் பார்க்கையில், இரு தரப்பு கருத்துக்களுமே சரி என்று எனக்குப் படுகிறது./

இரண்டு தரப்பினையும் மிக அழகாக அலசியிருக்கிறீர்கள்.

ஹுஸைனம்மா said...

//I have always imagined that paradise will be a kind of library//

ஆஹா, இப்படியும் ஒருத்தர் உண்டா, கிட்டத்தட்ட என்னைப் போலவே?! :-)))

இறந்தபின் சொர்க்கத்துக்குப் போனால், ஆண்டவன்கிட்ட ஒரு லைப்ரரி வேணும்னு கேக்கணும்னு நினைப்பதுஇண்டு. இப்ப வாசிக்க/வாங்க முடியாத்தையெல்லாம் அப்பப் படிச்சுத் தீர்க்கணும்னு!! (என்ன இப்படிச் சிரிக்கிறீங்க? :-))))) )

Anonymous said...

Puthaga anubavam athu entha roobathil vandalum, kakitha puthagam padipathu pola oru sugam, kanavu, karpanai matrum thirupti erpadathu.

Karunaji
Chennai

தாரா said...

ராமலஷ்மி - மிக்க நன்றி

தாரா

தாரா said...

ஹோஸைனம்மா - நிஜமாவே நீங்க அப்படி ஒரு புத்தக விரும்பியா?

தாரா

துளசி கோபால் said...

நல்ல தெளிவான பதிவு தாரா.

குழந்தைகள் புத்தகங்களை வாசிப்பதும் நேசிப்பதும் இங்கே அதிகமாகவே உள்ளது. இதை அனுபவபூர்வம் உணர்ந்துள்ளேன்.

இங்குள்ள குழந்தைகள் நூலகத்தில் 13 வருடங்கள் பணியாற்றியதில், புத்தகங்களோடு உறவாடும் வாய்ப்பு தேவைக்கும் அதிகமாகவே கிடைத்தது.

Arasu said...

மிக அருமையான பதிவு தாரா. ”சொர்க்கம் என்றிருந்தால் அதில் நூலகம் இருக்கவேண்டும்” என்ற மொழியை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

நூலகமும், அதனருகே உணவகமும், படித்த புத்தகத்தைப் பற்றிப் பேச நண்பர்களும் இருந்துவிட்டால் .... சொர்க்கத்தை பூவுலகிலேயே படைக்கலாமே.

தாரா said...

அரசு அண்ணன் - நூலகம், உணவகம், நண்பர்கள்!!! கேட்கவே ஆசையாக இருக்கிறதே! மிக்க நன்றி.

தாரா.