Monday, September 11, 2006

ஒன்பது பதினொன்று! (9/11)

இன்றோடு நியூயார்க்கில் உலக வர்த்தக மைய கோபுரங்களின் மீது தீவிரவாத தாக்குதல் நடந்து 5 வருடங்களாகிவிட்டன. இன்று காலை Washington Post Radio கேட்டுக்கொண்டே காரில் செல்கையில் "9/11 அன்று தீவிரவாத தாக்குதல் நடந்த போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்? உங்களின் கதையை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்" என்று அறிவித்து தொலைபேசி எண் கொடுத்தார்கள். பலரின் கதைகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன். நடுவில் இந்தியர் ஒருவர் பேசினார். "உலகத்திலேயே அமெரிக்கா தான் பாதுகாப்பான நாடு என்று நினைத்திருந்தேன். நான் இங்கே நன்றாக கால் ஊன்றியவுடன் என் குடும்பத்தை இங்கே அழைத்து வந்துவிடவேண்டுமென்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த தீவிரவாத தாக்குதலினால் என் நம்பிக்கை குலைந்துவிட்டது. என் எதிர்காலத்தை நினைத்து பயந்தேன்" என்றார்.

என் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன...அப்போது நான் எங்கே இருந்தேன்? எப்படி உணர்ந்தேன்?

2001 ஆண்டு பாதி கடந்தவுடன் நான் வேலையில் இருந்த நிறுவனத்தில் என்னுடைய ஒப்பந்தம் முடிந்தது. அதற்கு முன் நான் அமெரிக்காவில் வேலை பார்த்த நான்கு வருடங்களில், ஒவ்வொரு ஒப்பந்தமும் முடியும் முன்பே அடுத்த வேலை கிடைத்துவிடும். அந்த கர்வத்தினாலும் நான்கு வருடங்கள் உழைத்துவிட்ட சலிப்பினாலும், சற்று ஓய்வெடுக்கலாமென்று ஒரு மாதமாக எந்த வேலைக்கும் விண்ணப்பிக்கவே இல்லை. இரண்டாவது மாதத்திலிருந்த மெதுவாக விண்ணப்பிக்கத் தொடங்கினேன். எங்கிருந்தும் அழைப்பு வரவேயில்லை! சில நாட்கள் கழித்து என் கணவருக்கும் வேலை முடிந்துவிட்டது. லேசாக பதட்டமும் பயமும் தொற்றிக்கொண்டது. கொஞ்சம் வெளியுலகைப் பார்த்தபோது தான் நிலைமை புரியத்தொடங்கியது. 2001 ஆண்டின் அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சி அப்போதுதான் நிகழ்ந்துகொண்டிருந்தது. 'Tech bubble' உடைந்தது...Dot.com நிறுவனங்கள் சரிந்தன...Enron, Worldcom போன்ற நிறுவனங்களின் மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்தன...

நானும் கணவரும் விடாமல் வேலைக்கு விண்ணப்பித்துக்கொண்டிருந்தோம். சேமிப்பில் இருந்த பணமும் கொஞ்ச கொஞ்சமாகக் கரையத் தொடங்கியிருந்தது. தூக்கமும் நிம்மதியும் எங்களை விட்டு தொலைதூரம் சென்றுவிட்டிருந்தது. இப்படியிருக்கும் போது தான் செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி வாசிங்டனில் ஒரு பெரிய 'job fair' நடக்கவிருந்தது. அதற்குச் செல்வதற்காக ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் காத்திருந்தேன். செப்டம்பர் 10 அன்று பின்னிரவில் வழக்கம் போல் இணையத்தில் வேலை வாய்ப்புகள் தேடி களைத்த பின் படுக்கைக்குச் சென்றேன். மறு நாள் காலை (செப்டம்பர் 11) 9:30 மணியளவில் தொலைபேசி மணி எங்களை எழுப்பியது. கணவரின் நண்பர் பதட்டத்துடன், "சீக்கிரம் தொலைகாட்ச்சியை போட்டுப் பார்! நியூயார்க்கில் தீவிரவாதத் தாக்குதல் நடந்திருக்கிறது" என்றார். தூக்கக் கலக்கத்தில் ஒன்று புரியாமல் எழுந்து சென்று தொலைக்காட்சியைப் போட்டுப் பார்த்தோம். விமானங்கள் உலக வர்த்தக மைய கோபுரங்களின் மேல் ஒன்றன் பின் ஒன்றாக மோதி வெடித்த காட்சியை காட்டிக்கொண்டிருந்தார்கள்.

நிலைமையின் தீவிரம் புரிகையில் அதிர்ச்சியாக இருந்தது. இரட்டை கோபுரங்கள் உடைந்து சரிந்த போது, கூடவே என்னுடைய எதிர்காலமும், வாழ்க்கையும் உடைந்து சிதறியது போல் உணர்ந்தேன். ஏற்கனவே அமெரிக்கப் பொருளாதாரம் நொடிந்து போயிருக்கையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் இந்தத் தீவிரவாதத் தாக்குதல்! இதிலிருந்து எப்போது அமெரிக்கா வெளியே வருவது? எப்போது பொருளாதார நிலை சீராவது? எப்போது எனக்கு வேலை கிடைப்பது? கவலை தோய்ந்த முகத்துடன் அன்று முழுவதும் தொலைக்காட்சியின் முன்பு அமர்ந்திருந்தோம் இருவரும். தன்னிரக்கத்திலேயே மூழ்கிப்போயிருந்த எங்களுக்கு, அந்தத் தீவிரவாத தாக்குதலினால் உயிரிழந்தவர்களுக்காக அனுதாபப்படுவதற்கு கூட சில நாட்கள் ஆனது! தாக்குதல் நடந்த இடத்திலிருந்து அமெரிக்க அதிபர் புஷ் பேசுகையில் "We will rebuild New York City!" என்று முழங்கினார். பின் வந்த மாதங்களில் நாங்களும் கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு எங்கள் வாழ்க்கையை "rebuild" செய்தது ஒரு தனி கதை!

Friday, September 08, 2006

சென்ற வாரச் சிந்தனைகள் - 1

பர்தா பெண்

சென்ற வாரம் நான் வழக்கமாக புருவம் திருத்திக்கொள்ளச் செல்லும் அழகு நிலையத்திற்குச் சென்றிருந்தேன். அங்கிருக்கும் பெரிய கண்ணாடியின் முன் அமர்ந்திருந்த போது, எனக்குப் பின்னால் ஒரு பெண் நின்றிருப்பது கண்ணாடி வழியே தெரிந்தது. மிக அழகாக இருந்தாள். இந்தி நடிகை ப்ரீதி ஜிந்தாவின் சாயல் தெரிந்தது. பளபளப்பான கரிய கூந்தலில் லேசான சிவப்புச் சாயம். கூந்தல் சீராக அழகாக வெட்டப்பட்டிருந்தது. ஜீன்ஸ் மற்றும் டாங்க் டாப் அணிந்திருந்தாள். எவ்வளவு அழகாக இருக்கிறாள் என்று பொறாமைப்பட்டுக் கொண்டே புருவங்களை திருத்திக்கொள்ள கண்களை மூடிக்கொண்டேன். சில நிமிடங்கள் சென்றபின் கண்களைத் திறந்து மீண்டும் கண்ணாடி வழியே பார்த்தபோது அந்த அழகான பெண் வெளியே செல்லத் தயாராகிக் கொண்டிருந்தாள். முதலில் ஒரு கருப்புத் துணியை எடுத்து தன் கூந்தலில் போர்த்தி, மூடி, கழுத்தின் கீழ் இழுத்து பொத்தான் அணிந்துகொண்டாள். பின் ஒரு நீளமான கருப்பு அங்கியை உடம்பின் மேல் அனிந்து கழுத்திலிருந்து உள்ளங்கால் வரை பொத்தானிட்டுக்கொண்டாள்! அவளுடைய பளபளப்பான கரிய கூந்தலும், அழகிய தேகமும் ஒரு நிமித்திற்குள் பர்தாவினுள் ஒளிந்து கொண்டன! பர்தா வழக்கத்தைப் பற்றி பலர் பேசியும், எழுதியும் ஆகிவிட்டது. புதிதாகச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆனாலும் மனம் வருத்தப்பட்டது. பெண்கள் பர்தா அணிந்துகொள்வதன் உண்மையான காரணம், பெண்களை அடிமையாக்கவோ, இழிவுபடுத்தவோ அல்ல, மாறாக அவர்களின் புற அழகைத் தாண்டி அவர்களின் அறிவையும் மனதையும் ஆண்கள் பார்க்கவேண்டும் என்பதற்காகவே என்று பல விளக்கங்கள் கூறுகின்றன. அப்ப ஆண்களின் மேல் நம்பிக்கை இல்லையென்று ஆகாதா? ஒரு அழகானப் பெண் பர்தாவினுள் ஒளிந்திருக்கையில் அவளை கண்ணியமாகவும் அறிவுப்பூர்வமாகவும் பார்க்கும் ஆண்கள் நிறைய பேர் இருக்கலாம். ஆனால் அவள் பர்தா போடாவிட்டாலும் அவளை கண்ணியமாகவும் அறிவுப்பூர்வமாகவும் பார்ப்பது தானே ஆண்களுக்கு உண்மையான பெருமை?

தமிழ்த் தொலைகாட்சித் தொடர்களில் ஆண்கள்

தமிழ் ஊடகங்களில், முக்கியமாக தொலைக்காட்சித் தொடர்களில் பெண்கள் எப்படி தவறாக, தரம் தாழ்ந்து சித்தரிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றி நிறைய படித்தும், எழுதியும், கேட்டும், விவாதித்தும் சலித்து விட்டது. அப்பாவிடம் சென்ற வாரம் ஒரு நாள் மீண்டும் தொலைக்காட்சித் தொடர்களில் பெண்களின் சித்தரிப்பு பற்றி நான் மீண்டும் கோபப்படுகையில், அப்பா சொன்னது:

பெண்கள் மட்டும் தான் தவறாகச் சித்தரிக்கப்படுகிறார்களா? ஆண்களும் தான் தவறாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். ஒரு அப்பாவின் கோணத்திலிருந்து இந்தத் தொடர்களைப் அலசிப் பார். உதாரணமாக, 'செல்வி' தொடரில் எல்லா அப்பா கதாபாத்திரங்களும் பொறுப்பற்ற தெண்டமான அப்பாக்களாக இருக்கிறார்கள். செல்வியின் அப்பா - குடிகாரர், குடும்பத்தை காப்பாற்ற முடியாத கையாலாகாதவர். ஜி ஜேவின் அப்பா - சதா கோவில், குளம் என்று செல்லும், குடும்பத்தில் எந்த வித ஆளுமையும் இல்லாதவர். 'மலர்கள்' தொடரில் சண்முகத்தின் அப்பா - மனைவி செய்யும் அநியாயங்களை எதிர்த்துக் கேட்ட திராணியற்றவர். கற்பகத்தின் அப்பா - தன்மானம் இல்லாதவர், பணத்துக்காக எதையும் செய்பவர்.

அப்பாக்கள் மட்டுமா? கணவன்மார்களை எடுத்துக்கொள். ஒன்றிரண்டு கணவன் கதாபாத்திரங்களைத் தவிர, மற்றவரெல்லாம் இரண்டு கல்யாணம் செய்துகொள்வது, கள்ளக் காதல் வைத்துக்கொள்வது, குடிப்பது, மனைவியைக் கொடுமைப்படுத்துவது என்று சித்தரிக்கப்படுகிறார்கள்.

உண்மைதான்! நான் பெண்களின் பார்வையிலேயே பார்த்துக்கொண்டிருந்ததால் மற்ற கதாபாத்திரங்களை அவ்வளவாக கவனிக்கவில்லை! ஆனால் ஆனால் இப்படிப்பட்ட சித்தரிப்பிற்கு ஆண்கள் எந்த வகையிலாவது எப்போதாவது எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்களா?