Sunday, May 20, 2012

அவள் ஏன் சமூகவியலைத் தேர்ந்தெடுத்தாள்?

சமூக சேவை பலர் பல வகையில் செய்கிறார்கள்.  சிலர் தொண்டு நிறுவனங்களுக்கோ, தனிப்பட்ட நபருக்கோ பணம் அனுப்புவார்கள்.  சிலர் ஒரு தொண்டு நிறுவனத்தில்,  சில மணி நேரங்கள் வேலை செய்வார்கள்.  சிலர் ஒரு சம்பவத்தின் போது அந்த இடத்திற்கே நேரில் சென்று அங்கே வேண்டிய உதவிகள் செய்வார்கள்.  ஆனால், இந்தச் சமூகச் சேவையையே முறையாகப் பயின்று, பட்டம் பெற்று வாழ்நாள் முழுவதும் சமூகச் சேவை செய்வதென்று ஒருவர் முடிவெடுப்பது என்பது என்னைப் பொறுத்தவரை பெரிய விசயம்.   உண்மையிலேயே சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை உடையவர்கள் தான் இப்படி ஒரு எதிர்காலத்தைத் தேர்ந்தெடுப்பார்கள்.

அப்படி ஒரு தேர்வை, அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த  என் அக்கா மகள் செய்தபோது, குடும்பத்தில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது.  மற்ற இரு பிள்ளைகளைப் போல் மருத்துவம் படிக்காமல் சமூகவியலை படித்து என்ன செய்யப் போகிறாள்?  காலம் பூராக குறைந்த சம்பளத்திற்குத் தானே வேலைக்குப் போகமுடியும்? என்றெல்லாம் குடும்பத்தினர் வருந்தினார்கள்.  ஆனால் அக்கா மகள் தன் முடிவில் திடமாக இருந்தாள்.  சமூகவியல் தான் தனக்குச் சரியான துறை என்று மனதிற்குத் தோன்றுகிறது என்றும்,  எனவே அந்தப் பாதையில் தான் செல்ல விரும்புகிறேன் என்றும் சொல்லிவிட்டாள்.  இப்போது சமூகவியலில் முதுகலைப் பட்டம் படித்து முடிக்கவும் போகிறாள்.

எனக்கு அவளை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது.  ஏன் அவள் காலம் பூராக சமூகப் பணி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தாள்?  அவளிடமே கேட்டு அதனை ஒரு பதிவாகப் போடலாம் என்று தோன்றியது.

இதோ அவளிடம் ஒரு கேள்வி - பதில் அமர்வு.

கேள்வி: சிறு வயதிலிருந்தே இந்த சமூக சேவை உணர்வு உனக்கு இருந்ததா?

பதில்: இருந்தது என்று தான் நினைக்கிறேன். சிறு வயதிலேயே மற்றவர்களின் உணர்வுகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பேன்.  பள்ளியில் என் நண்பர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால்,  முதலில் என்னை நாடித் தான் வருவார்கள்.  அவர்கள் மனம் விட்டுப் பேசுவதை நான் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்பேன்.  அவர்களின் சிக்கலான சூழ்நிலைகளில் அவர்களுக்குத் தோள் கொடுப்பதில் என் பங்கை நான் என்றுமே பெருமையாக நினைப்பதுண்டு.  என்னிடம்  நிறைய அன்பு இருக்கிறது.  அன்பிற்காக ஏங்கும்  மற்றவர்களிடம் அதனை பகிர்ந்துகொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

கேள்வி: சமூகத்தில் எந்தப் பிரிவினருக்காக நீ உதவ நினைக்கிறாய்?

பதில்: எனது இளம் வயதில் என் மீது அன்பும் அக்கறையும் காட்ட எனக்கு ஒரு நல்ல குடும்பம் இருந்தது.   ஆனால் பெற்றோர்களின் வழிநடத்தல் இன்றி, எந்தவிதமான இலக்கும் இன்றி அந்த முக்கியமான ஆனால் ஆபத்தான பருவ வயதை தனியாக கடந்து சென்றுகொண்டிருக்கிறார்கள் பல இளம் வயதினர்.  அவர்கள் மிகத் தனிமையாகவும், இந்தச் சமூகத்திற்கு வேண்டப்படாதவர்களாகவும் உணர்கிறார்கள்.  யாரேனும் ஒருவர் அவர்களின் மீது சிறு அக்கறை காட்டினாலே, அவர்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.   அவர்களை நல்லவழியில் நடத்திச் செல்ல, அவர்களுக்கென்று ஒரு எதிர்காலம் இருக்கிறது என்பதை விளக்க, அவர்களுடைய இலக்குகளும் கனவுகளும் கூட தகுதியுடையவை என்பதைக் புரியவைக்க நம்பிக்கையான ஒருவர் தேவை. இந்த பலவீனமான இளம் பருவத்தினருக்கு நான் ஆலோசகராக(counselor) இருக்க விரும்புகிறேன்.

கேள்வி: சமூகப் பணியே உனது வாழ்க்கைத் தொழிலாக இருக்கவேண்டும் என்ற முடிவை எடுப்பது எந்த அளவு சிரமமாக இருந்தது?

பதில்: அமெரிக்க இந்தியக் குடும்பங்களில் பிள்ளைகள் மருத்துவம் அல்லது பொறியியலையே மேற்படிப்பாக படிக்க வேண்டும் என்றே இன்னமும் எதிர்பார்க்கப்படுகின்றது.  இந்த எதிர்பார்ப்புகளை மீறி நான் விரும்பியதைப் படிக்கவேண்டும் என்பதை முடிவு செய்வது மிகக் கடினமாகத் தான் இருந்தது. பள்ளி இறுதி ஆண்டு மற்றும் இளங்கலை வருடங்களில், நான் மருத்துவக் கல்லூரிக்குத்தான் என்னை வலுகட்டாயமாக தயார் படுத்திக்கொண்டிருந்தேன்.  ஆனால் அது எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை.  அறிவியலில் எனக்குப் பெரிதாக ஆர்வம் இருக்கவில்லை.  அறிவியல் கல்வியும் மக்களுக்குச் சேவை செய்ய உதவும் என்றாலும், நான் விரும்பியது நேரடியாக, உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதையே.   பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் எதிர்பார்ப்புகளைத் தாண்டி, என் மனதிற்குப் பிடித்ததை, எனக்கு சரி என்று பட்டதை செய்ய மிகுந்த மனோதிடமும் துணிவும் தேவைப்பட்டது.  நான் இந்த முடிவை எடுத்ததால் சிலர் மனதை புன்படுத்தியிருக்கலாம், ஆனால் பலர் வாழ்க்கையில் என் முடிவு ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

கேள்வி: MSSW(Master of Science in Social Work) என்கிற பட்டம் வாங்கியவர்கள் எந்த மாதிரியான பணியில் ஈடுபடுவார்கள்?


பதில்: சமூகப் பணியாளர்களில் இரண்டு வகை உண்டு.  ஒன்று, நேரடிச் சேவைகளில்(Direct Services) ஈடுபடுபவர்கள்.  இவர்கள் தமது வாடிக்கையாளர்களின் அன்றாடப் பிரச்சினைகளை சந்திக்க உதவுகிறார்கள்.  அதாவது வேலை தேட, அரசு உதவிக்கு விண்ணப்பிக்க, அவர்களது நிதி நிலமையை சரிசெய்ய போன்றவற்றிற்கு ஒரு திட்டம் வகுத்து தருகிறார்கள்.  பின்னர் அந்த திட்டத்தை வாடிக்கையாளர்கள் சரியாக கடைபிடிப்பதற்கும் தொடர்ந்து உதவுகிறார்கள்.

மற்றொரு வகையான சமூகப் பணி, மருத்துவம் சார்ந்த சேவை(clinical services).  இந்தத் துறையில் பணிபுரிபவர்கள், வாடிக்கையாளர்களுக்கு மனநலம் சம்மந்தப்பட்ட சிகிச்சை அளிக்கிறார்கள்.  இந்தச் சேவையை அவர்கள் ஒரு தனி நபருக்கோ, அல்லது ஒரு குடும்பத்திற்கோ செய்கிறார்கள்.  பலர் பள்ளிகளில் மனநல ஆலோசகர்களாகவும் பணிபுரிகிறார்கள்.

கேள்வி: குழந்தைகளின் நலனுக்காக எந்த வகையில் இந்தச் சமூகப் பணியாளர்கள் உதவ முடியும்?

பதில்: வீட்டிலேயே வன்முறைக்கு உட்படுத்தப்படும் குழந்தைகளை பாதுகாக்கும் அரசு நிறுவனங்களில் நிறைய சமூகப் பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். சிக்கலான குடும்பச் சூழலில் வளரும் குழந்தைகளை இவர்கள் கண்கானித்து அந்தக் குடும்பத்தில் சிக்கலை ஆசோசனை மூலம் போக்கிவிடலாமா அல்லது அந்த குடும்பத்திலிருந்து குழந்தையைப் பிரித்து பாதுகாப்பில் வைக்கவேண்டுமா என்று அந்த அரசு நிறுவனத்திற்கு சிபாரிசு செய்வார்கள்.  இப்படி குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வளர்ப்புப் பெற்றோர்களை(foster parents) அடையாளம் கண்டு, அந்தப் பெற்றோர்களிடம் குழந்தைகளை ஒப்படைக்கிறார்கள்.

மேலும், ஒவ்வொரு பள்ளியிலும், குறைந்தபட்சம் ஒரு சமூகப் பணியாளர் குழந்தைகளுக்கான மனநல ஆலோசகராக வேலை செய்வார்.

கேள்வி:  சமூகப் பணியாளர்கள் தம் பணியில் சந்திக்கக்கூடிய சவால்கள் என்ன? 

பதில்: சமூகப் பணிகளில் தேவைகள் மிக அதிகப்படியாக இருக்கும், ஆனால் அந்தப் பணிகளைச் செய்யும் ஆட்கள் குறைவாகத் தான் இருப்பார்கள்.  அதனால் பணி அழுத்தம் கூடுதலாக இருக்கும்.  மேலும், வாழ்க்கையில் பல வகையில் பாதிக்கப்பட்ட நபர்களுடன் வேலை செய்வதால், அது உணர்வு பூர்வமாகவும் ஒரு சவாலாக இருக்கும்.  தமது சொந்த வாழ்க்கையில் சிக்கல்கள் இருப்பவர்களுக்கு, இந்த சமூகப் பணியில் ஈடுபடுவது ஒரு மிகப் பெரிய சவால்.  இந்தத் துறையில் பணியில் இருப்பவர்களுக்கு ஊதியம் குறைவாகவே இருக்கும்.  உண்மையிலேயே சமூகச் சேவை செய்வதில் முழு உடன்பாடும் ஆர்வமும் இருப்பவர்களால் மட்டுமே இந்தப் பணிகளில் ஈடுபட முடியும்.

கேள்வி: ஒரு முழு நேர சமுகப் பணியாளராக மாற நீ தயாரா?

பதில்: முழு மனதுடன் தயார்.  எப்படா படிப்பை முடித்துவிட்டு இந்தச் சமூகத்துடன் ஒன்றரக் கலக்கலாம் என்று ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.  இந்தப் பூமியில் வாழ்பவர்கள் ஒவ்வொருவரும் மாறுபட்டவர்கள்.  ஆனால் எல்லோரும் சமமாகவும் நியாயமாகவும் நடத்தப்படவேண்டியவர்கள். என்னுடைய பொறுமை, திறந்த மனப்பான்மை, புரிந்துணர்வு, சமூக அக்கறை போன்ற குணங்களெல்லாம், என்னை ஒரு சிறந்த சமூகப் பணியாளராக உருவாக்கும் என்று நம்புகிறேன்.
                      --------------------------------------------------------------------------------

நான் பார்த்து வளர்ந்த என் அக்கா மகள், இவ்வளவு பொறுப்பாகப் பேசுவதைக் கேட்டு எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.  அதிக ஊதியம் கிடைக்காது, விலை உயர்ந்த காரோ செல்பேசியோ வைத்துக்கொள்ள முடியாது, ஏசி அறையில் ஜம்மென்று அமர்ந்து வேலை செய்ய முடியாது...இதெல்லாம் தெரிந்தும், மக்களுக்கு சேவை செய்வதையே தன் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் அவள், என் குடும்பத்தில் ஒருத்தி என்று சொல்லிக்கொள்ளவே எனக்குப் பெருமையாக இருக்கிறது.


1 comment:

Diva said...

Excellent! Appreciate her very much. Rare to find such girls.