நான் வலைப்பூ தொடங்கி ஒரு மாதம் ஆகிறது. இந்த அனுபவம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. வெளிப்படையாக எதையும் பேசுவதற்கு எப்போதுமே எனக்குத் தயக்கம் உண்டு. ஆனால் எழுதும்போது மட்டும் ஏனோ சுதந்திரமாக வார்த்தைகள் ஓடி வருகின்றன. மனதில் தேங்கியிருக்கும் எண்ணங்களை தயங்காமல் வலைப்பூவில் அவிழ்த்து விடுவதால் மனம் இப்போது லேசாக இருக்கிறது. இந்த ஒரு மாதத்தில் நான் கற்றுக் கொண்ட விஷயங்கள் ஏராளம். யூனிகோட் எழுத்துருவம், HTML code editing போன்றவற்றை தெரிந்து கொண்டேன். பொது அறிவு நிச்சயமாக அதிகரித்திருக்கிறது. இப்போதெல்லாம் நான் செய்திகளைப் படிப்பதே இல்லை. நான்கைந்து வலைப் பதிவுகளை படித்தாலே உலக நடப்புகள் எல்லாமே தெரிய வருகிறது. மற்றவர்களின் அனுபவங்கள், எண்ண ஓட்டங்கள், பின்னூட்டங்கள் - இவைகளை மிகவும் ரசித்துப் படிக்கிறேன். என் வலைப் பதிவுகளில் யாராவது பின்னூட்டம் எழுதிவிட்டால் சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போகிறேன், நான் எழுதியதையும் சிலர் படிக்கிறார்களே என்று. நினைப்பதை எழுதுவதாலும், எழுதுவதற்கு முன் சிந்திப்பதாலும், நல்ல பொழுதாக கழிகிறது. முன்பெல்லாம் என் கணவர் தொலைபேசியில் நண்பர்களுடன் பேச ஆரம்பித்துவிட்டால் நான் நொந்து போய் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக்கொண்டிருப்பேன். இப்போது இருக்கவே இருக்கிறது என் வலைப்பூ. அவர் எத்தனை நேரம் பேசினால் எனக்கென்ன?
திரு காசி அவர்களுக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். உலகெங்கும் வாழும் ஆர்வம் மிக்க தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கினைத்து தமிழ்மணம் என்ற இணைய தளத்தில் ஒரு வலைப் பதிவாளர்கள் சமுதாயத்தையே உருவாக்கியிருப்பது அவர் செய்த மகத்தான சாதனை. தமிழ் மணத்தில் எனக்குமிகவும் பிடித்தது, 'வாசகர்' பகுதியில் இருபது நிமிடங்களுக்கு ஒரு முறை அன்று புதிதாக எழுதப்பட்ட வலைப் பதிவுகளைத் திரட்டி வெளியிடப்படும் பட்டியல். இந்தப் பட்டியல் மட்டும் இல்லாவிட்டால் என் வலைப் பதிவு யார் கண்ணிலும் பட்டிருக்காது. யார் வருகையும் இல்லாமல் அழுது வடிந்து கொண்டிருக்கும் இன்னேரம். tamilblogs என்ற கூட்டுக் குழுமத்தின் மூலம் காசி, முத்து, பாரி, பத்ரி போன்றவர்கள் வலைப் பதிவாளர்களுக்கு பல நவீன யுத்திகளை கற்றுக் கொடுப்பதும் மிகவும் பாராட்டப் படவேண்டிய சேவை. திரு காசி உருவாக்கிவிட்ட இந்த வலைப் பதிவாளர் சமுதாயத்தின் முழு சக்தியை இந்த சுனாமி நிகழ்வுக்குப் பிறகு பார்க்க முடிகிறது. மின்னல் வேகத்தில் தகவல் பறிமாற்றம், நிவாரண நிதி திரட்டல், உதவிகளை ஒருங்கிணைத்தல் என்று அசத்திவிட்டார்கள். Last, but not the least ...சுனாமியினால் நடந்த கொடூர சேதத்தை செய்திகளில் மட்டுமே பார்த்தும், கேட்டும் செய்வதறியாமல் தவித்துக் கொண்டிருந்த தமிழ் வலைப்பதிவாளர்களின் பிரதிநிதியாக அவர்களின் கைகளாகவும், கால்களாகவும் இருந்து நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று உதவிகளைச் செய்த திரு.ரஜினி ராம்கியைப் பாராட்ட என்னிடம் வார்த்தைகள் இல்லை.
சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், இந்த வலைப் பதிவு சமுதாயத்தில் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
8 comments:
வாழ்த்துக்கள்.
நானாக இருந்தால், இந்தப் பதிவுக்கு, "அய்யய்யோ..அய்யய்யோ..பிடிச்சிருக்கு" என்று பெயர் வைத்திருப்பேன்.
வலைப்பதிவு என்பதை அங்கங்கே வளைப்பதிவு என்று எழுதி இருக்கிறீர்கள். தெரிந்தா..?? இல்லை தெரியாமலா..?
ஒரு எழுத்துப் பிழையை திருத்தப் போய், நிறைய எழுத்துப் பிழைகள் கண்ணில் பட்டது. டிந்தவரை திருத்தியிருக்கிறேன். இப்ப பிடிச்சிருக்கா?
தாரா.
அடடே...அதை நான் குறையா சொல்லலீங்க.
என்னுடைய பதிவிலேயே ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள் வருவதுண்டு. ஆனா, சில இடங்கள்ளே பிழையையே,விஷயத்தோடு செய்யப்பட்டதுன்னுடுவாங்க
as Microsoft says the bugs in its software are "features" :-)
படித்தேன் என்று தெரிவிக்க இந்த பின்னூட்டம். தொடர்ந்து எழுதுங்கள்!
Continue your posts. we all here to read, even if it worse than my writing. :-)
akkinikunchu
தாரா தொடர்ந்து உங்கள் எண்ணங்களை இணைய உறவுகளுடன் பகிர்ந்திட வாழ்த்துக்கள். நான் உங்களை விட கற்றுக்குட்டிங்க தமிழ் வலைப்பகுதிக்கு வந்து 2 கிழமை தான் ஆகிறது.
எங்களுக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு...உங்க எழுத்து, நடை ..தொடர்ந்து எழுதுங்க !
என்னங்க இவ்ளோ விடயம் எழுதுனவங்க... ரொம்ப நாளா எழுதறதேயில்லை (அல்லது அடிக்கடி எழுதுவதில்லை)?
இன்னிக்கு ஷொபனாவின் பரதநாட்டியம் - redefinedஆரம்பித்து ரொம்ப நேரம் உங்கள் பதிவில் செலவிட்டேன். எழுத நிறைய விடயமிருக்கிறது உங்களிடம்.... தொடர்ந்து நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள். நன்றி.
Post a Comment