Thursday, April 28, 2005

அட! அமெரிக்காவிலும் பால்நிலை பாகுபாடு! (gender discrimination)



என்னுடைய மேலாலளர் நேற்று நடந்த கூட்டத்தில் "நம்முடைய அணிக்கு ஒரு புது பொறியாளரை நாளை தொலைபேசி மூலம் தேர்வு செய்ய இருக்கிறேன்" என்றார். உடன் வேலை பார்க்கும் இந்தியர் ஒருவர் "அவர் ஆணா, பெண்ணா?" என்று கேட்டார். மேலாளர் சிரித்துகொண்டே "எனக்குத் தெரியாது, இந்தக் கேள்வியை நீங்கள் கேட்பதும் சரியல்ல. அவர் ஆணா பெண்ணா, கருப்பரா, வெள்ளையரா, இந்தியரா, சீனரா என்பதைப் பார்த்து நாங்கள் தேர்வு செய்வதில்லை. We follow Equal Employment Opportunity policy" என்றார். உண்மைதான், ஒரு அமெரிக்கர் அந்த வேலைக்கு விண்ணப்பித்திருந்தால், பெயரை வைத்து அவர் ஆணா பெண்ணா என்பதைக் கண்டுபிடித்து விடலாம். ஆனால் இந்திய மற்றும் சீனப் பெயர்களை வைத்து அதைக் கண்டுபிடிப்பது கடினம். அவர்கள் நேர்முகத் தேர்வுக்கு வரும்போதோ அல்லது அவர்களுடன் தொலைபேசியில் பேசும்போதோ தான் தெரிந்துகொள்ள முடிகிறது. அமெரிக்காவில் உள்ள விண்ணப்ப தாள்களிலும், Sex, Race போன்றவற்றை 'Optional Information' என்கிற பகுதியில் தான் கேட்கிறார்கள். விருப்பபட்டால் இந்தத் தகவல்களை பூர்த்தி செய்யலாம். கட்டாயம் எதுவும் கிடையாது. இது பாராட்டப்பட வேண்டிய விசயம் என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் இதெல்லாம் சும்மா கண் துடைப்பு என்கிறார் மேலாளரிடன் கேள்வி கேட்ட இந்தியர். "ஏனிப்படி சொல்கிறீர்கள்?" என்று கேட்டபோது, "வேலைக்கு ஆள் எடுக்கும் போது பாகுபாடின்றி எடுக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் வேலையில் இருப்பவர்களை எந்தவித பாகுபாடின்றி நடத்துகிறார்களா என்று யோசித்துப் பாருங்கள்" என்றார். நான் யோசித்துப் பார்த்ததில், எங்கள் அலுவலகத்தில் அப்படி ஒன்றும் பிரச்சினை இருப்பதாகத் தோன்றவில்லை. அதை அவரிடம் சொன்னபோது, "இந்த அலுவலகத்தை விடுங்கள். நீங்கள் கூகிளில் போய் 'gender discrimination law suits' என்று தேடிப் பாருங்கள், ஆச்சரியப்படுவீர்கள்" என்றார். மதிய உணவு இடைவேளையில் தேடியபோது, கூகிள் துப்பிய செய்திகளைப் படித்து ஆச்சரியப்பட்டுத் தான் போனேன்.

Walmart - உலகத்திலேயே மிகப் பெரிய Retail நிறுவனம் மற்றும் அமெரிக்கவிலேயே மிக அதிகமான பணியாளர்களைக் கொண்ட நிறுவனம். 2004 ஆம் ஆண்டில் Walmart இல் வேலை செய்யும் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஆறு பெண்கள் தாம் பால் நிலை பாகுபாட்டுக்கு(gender discrimination) உட்படுத்தப்பட்டதாக வழக்குத் தொடர்ந்தனர். அதே வேலையைச் செய்யும் ஆண்களைவிட பெண்களுக்கு குறைவாக சம்பளம் கொடுக்கப்பட்டது என்றும், பணியாளர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்களாக இருந்தபோதும், பதவி உயர்வுகள் ஆண்களுக்கே கொடுக்கப்பட்டது என்றும், மேலிடத்துப் பணியாளர்களில் 14 சதவிகிதம் மட்டுமே பெண்கள் என்பதும் இவர்களது வாதம். பெண்கள் பொதுவாக பதவி உயர்வுகளில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதும், சில வேலைகளுக்கு பெண்கள் தகுதியானவர்கள் அல்ல என்பதும் Walmart இன் எதிர் வாதம்.

Boeing - மேலே சொல்லியிருக்கும் அதே போன்ற ஒரு வழக்கை சமரசம் செய்வதற்கு Boeing நிறுவனம், 29,000 பெண் பணியாளர்களுக்கு $72 மில்லியன் நஷ்ட ஈடாக வழங்கியிருக்கிறது.

Morgan-Stanely - Wall Street நிறுவனமான Morgan Stanley இல் வழக்கமான பதவி உயர்வு, குறைந்த சம்பள குற்றச்சாட்டுக்களுடன், குழந்தைப் பேறு விடுமுறை (Maternity Leave) எடுக்கும் பெண்களுக்கு சம்பள உயர்வும், முக்கியப் பொறுப்புகளும் மறுக்கப்படுகின்றன என்றும், ஆண்கள் குழுவாக வெளியில் செல்லும் போது அந்தக் குழுவில் பெண்களை சேர்த்துக்கொள்ள மறுக்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

Yale, United Airlines என்று இந்தப் பிரபல நிறுவனங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

வல்லரசான அமெரிக்காவிலேயே பெண்களுக்கு இந்த நிலையா என்று வியப்பாக இருந்தது. ஆனால் ஒரு விசயத்தை கவனிக்க வேண்டும். பதவி உயர்வு, சம்பள உயர்வு இவையெல்லாம் பெண்களுக்கு அடிப்படைப் பிரச்சினைகள் கிடையாது. அடுத்தக்கட்ட பிரச்சினைகள் தான். அமெரிக்காவில் வாழும் பெண்கள் அடிப்படை பிரச்சினைகளை எப்போதோ தாண்டி வந்து அடுத்தக்கட்டத்து பிரச்சினைகளுக்காக போராடி வருகிறார்கள். தமிழ் நாட்டுப் பெண்கள் அடிப்படை பிரச்சினைகளான கல்வி, வேலைவாய்ப்பின்மை இவற்றிற்கே இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.நகரங்களில் வீட்டுக்கு வீடு பெண்கள் வேலைக்குப் போகிறார்கள். குடும்பத்தைக் காப்பாற்ற ஏதாவது ஒரு வேலை கிடைத்தாலே போதும் என்கிறநிலை இருக்கும்போது, அடுத்த கட்டமான பதவி உயர்வு, பால்நிலை பாகுபாடு பற்றியெல்லாம் அவர்கள் சிந்திப்பார்களா என்றுதெரியவில்லை. இந்தப் பெண்கள் பால்நிலை பாகுபாட்டிற்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்கு வேலை வாய்ப்பும் பதவி உயர்வும் பொறுப்புகளும் மறுக்கப்படும் போது, எத்தனை ஆற்றல், எத்தனை சக்தி வீணாகப் போகிறது?

ஆனால் சும்மா சும்மா தமிழ் நாட்டில் பெண்களுக்கு அது இல்லை இது இல்லை என்று சொல்வதற்கு அலுப்பாக இருக்கிறது. பெண்களுக்குத் தேவையான சட்ட திட்டங்கள், பாதுகாப்புகள், உதவி அமைப்புகள் எல்லாமே இருக்கின்றன. இல்லாதது விழிப்புணர்ச்சி மட்டும் தான். பால்நிலை சமத்துவம்(gender equality) ஒரு சமூக நீதியாகவும் ஒரு நாட்டின் பலமாகவும் மாற தேவையானதெல்லாம் விழிப்புணர்ச்சி! விழிப்புணர்ச்சி! விழிப்புணர்ச்சி!

Thursday, April 21, 2005

சில கவிதை வரிகளில் ஒரு சிறிய பாடம்...

எண்ணக் குமிழ்கள் வலைப் பதிவை இன்று பார்த்தபோதுதான் இது 'கவிதை மாதம்' என்று தெரிய வந்தது. இது தெரியாமலேயே, சில நாட்களுக்கு முன் ஒரு கவிதையை எழுதி கையை சுட்டுக் கொண்டேன் தெரியுமா? Shirley Chrisholm இன் quotation ஒன்றை படிக்க நேர்ந்த போது, அதை அப்படியே தமிழில் ஒரு புதுக் கவிதை மாதிரி எழுதினால் என்ன என்று தோன்றவே, கட கடவென்று சில வரிகள் எழுதினேன். எழுதும்போதே தெரிந்தது கவிதை சரியில்லை என்று. சரி பிறகு சில மாற்றங்கள் செய்து சீர் படுத்தலாம் என்று நினைத்துக்கொண்டு அதை என் கணவருக்கு அனுப்பி கருத்து கேட்டேன். அவர் சும்மா இருக்க முடியாமல் இன்னொரு நண்பருக்கு அனுப்பி அவருடைய கருத்தைக் கேட்க, அந்த நண்பர் "கேணத்தனமான, அர்த்தமற்ற கவிதை" என்று பின்னூட்டம் கொடுக்க, எனக்கு முகத்தைக் கொண்டுபோய் எங்கே வைத்துக்கொள்வதென்றே தெரியவில்லை! சரி இனி கவிதை எல்லாம் எழுதி risk எடுக்கக் கூடாது என்று அன்றே முடிவுசெய்துவிட்டேன். இந்த சம்பவம் கவிதை மாதத்தில்நடந்தது தற்செயலான ஒன்று!

Charles Buckowski எழுதிய 'So you want to be a writer' கவிதைக்கான சுட்டியை சுந்தரமூர்த்தி வலைப்பதிவில் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றிகள் பல. படிப்பதற்கு ஒரு கவிதை போல் இல்லாவிட்டாலும் அந்தக் கவிதையில் சில வரிகள் எனக்காகவே எழுதப்பட்டவை போல் இருக்கிறது. ஒரு சிறிய பாடத்தையும் கற்றுக்கொண்டேன்.

//if it doesn't come bursting out of you
in spite of everything,
don't do it.
unless it comes unasked out of your
heart and your mind and your mouth
and your gut,
don't do it.
if you have to sit for hours
staring at your computer screen
or hunched over your
typewriter
searching for words,
don't do it.//

ஆரமபத்தில் வாரம் ஒரு வலைப்பதிவாவது எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக எதுவும் எழுதவில்லை. என்ன எழுதுவது, எதைப் பற்றி எழுதுவதென்று தெரியவில்லை. ஆனால் ஏதாவது எழுதவேண்டும் என்கிற தவிப்பும், தொடர்ந்து எழுதாவிட்டால் வலைப்பூ உலகம் என்னை மறந்துவிடுமே என்கிற பயமும் மனதில் இருந்துகொண்டே இருக்கிறது. எத்தனையோ நாட்கள் கணிணியின் முன் அமர்ந்து ஏதாவது இன்று எழுதியே ஆகவேண்டும் என்று என் சிந்தனையை விரட்டியிருக்கிறேன். ம்ஹ¥ம்! கதை பெயரவில்லை. Charles Buckowski சொல்வதைப் பார்த்தால், மனதிலிருந்தும் இதயத்திலிருந்தும் தானாகவே ஏதாவது எழுதத் தோன்றும் வரை, வலைப்பதிவுகளில் கொட்டிக் கிடக்கும் பல நல்ல சுவையான, சூடான விசயங்களைப் படித்து உள்வாங்கிக்கொண்டு அமைதியாக காத்திருப்பது நல்லதென்று புரிகிறது.

Tuesday, March 01, 2005

'காதல'் திரைப்படம் எனது பார்வையில்



கடந்த இரண்டு மாதங்களாகவே காதல் திரைப் படத்தைப் பற்றி நிறைய விமரிசனங்களை படிக்க நேரிட்டது. படத்தை பார்ப்பதற்கு முன்பே நண்பர்களிடையே கருத்துப் பறிமாற்றங்களும் வாக்குவாதங்களும் முழு மூச்சில் நடந்து கொண்டிருந்தது. எங்க ஊர் இந்தியக் கடைகளில் எப்படா 'காதல்' வீடியோ காசெட் வரும் என்று ஆவலாகக் காத்திருந்தோம். ஒரு வழியாக அந்த ஆசை நிறைவேறியது.

என்னுடைய திரை விமரிசனத்தை எழுதுவதற்கு முன், எந்த மாதிரி சூழ் நிலையில் இந்தப் படத்தைப் பார்த்தோம் என்பதையும் எழுதவேண்டும். இதையும் சேர்த்து படிக்க விரும்புபவர்கள் Part One னில் இருந்து தொடங்குங்கள். 'காதல்' விமர்சனத்தை மட்டும் படிக்க விரும்புபவர்கள் Part Two விற்கு சென்று விடுங்கள்.

Part One

ஒரு சனிக்கிழமை இரவு 'காதல்' பார்ப்பதற்காகவே ஒரு நண்பர் வீட்டில் மூன்று குடும்பங்கள் குழுமினோம். எல்லா நண்டு சிண்டுகளையும் sleep over என்று வேறு ஒரு வீட்டிற்கு அனுப்பிவிட்டோம். கோழிக் குழம்பு, மீன் குழம்பு, தக்காளி சாதம் என்று இரவு உணவை முடித்துக் கொண்டு நண்பர் வீட்டு பேஸ்மெண்டில் இருக்கும் 53 அங்குல டிவியின் முன் அமர்ந்தோம். இந்த நண்பர் வீட்டு பேஸ்மென்டுக்கு 'Omni Bus' என்று பெயர் வைத்திருக்கிறோம். நம்ம ஊர் deluxe Omni Bus பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நன்றாக சாய்ந்து வசதியாக உட்காரக்கூடிய இருக்கைகள், மெல்லிய இருட்டில் லேசான கலர் விளக்குகள், வீடியோவில் திரைப் படம் அல்லது பாடல் காட்சிகள் - இப்படித்தான் இருக்கும் நண்பர் வீட்டு பேஸ்மென்ட்! அமைதியான சனிக்கிழமை இரவு, அருமையான உணவு, அன்பான நண்பர்கள் - ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்ப்பதற்கு இதைவிட ஒரு நல்ல சூழ்நிலை அமையுமா?

திரைப்படம் தொடங்கியது. ஒரு நண்பருக்கு சினிமாவில் சுத்தமாக ஆர்வம் கிடையாது. அதுவும் காதலை மையமாக வைத்து எடுக்கப் படும் சினிமாக்களை வெறுப்பவர். நீங்கள்ளாம் படம் பாருங்கள், நான் என்னுடைய லாப் டாப்பில் என்னுடைய வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னவர், சில நிமிடங்களில் லாப் டாப்பை மூடி வைத்துவிட்டு படத்தை பார்க்கத் தொடங்கினார். இந்த ஸீன் சூப்பரா இருக்கும்...இப்ப பாருங்க என்ன நடக்குதுன்னு என்று அவ்வப்போது கத்திக் கொண்டிருந்த, படத்தை முன்பே பார்த்துவிட்ட இன்னொரு நண்பரை சற்று அடக்கி வைக்க வேண்டியிருந்தது. ஒவ்வொருவரும் எழுந்து பாத்ரூம் போகும்போதும் படம் அப்படியே ஸ்டில் செய்யப்பட்டது. நடு நடுவே சூடாக காபி போட ஒரு குழு எழுந்து சென்றது. இத்தனை கலாட்டாக்களுக்கு நடுவில் நான் 'காதல்' திரைப்படம் பார்த்தேன்.

Part Two

'காதல்' ஏற்கனவே பல முறை அரைத்த மாவு தான். பணக்காரக் காதலி - ஏழைக் காதலன் - காதலியின் வீட்டில் எதிர்ப்பு என்ற பழைய மாவுதான். ஆனால் நல்ல அரிசியையும் நல்ல உளுந்தையும் வைத்து, கலப்படம் செய்யாமல் வித்தியாசமாக, சுவையாக அரைத்திருக்கிறார்கள்.

அழகி, ஆட்டோகிராப் போன்ற படங்களின் வரிசையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதை வருடிய ஒரு படம்! எந்தவிதமான commercial compromise ம் செய்யப்படாத, சினிமாத்தனம் சற்றும் இல்லாத மிக யதார்த்தமான படம்! எனக்கு என்ன ஒரு ஆச்சரியம் என்றால், பாலாஜி சக்திவேல் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர். ஆனால் சங்கரின் பகட்டான பாணியையும் சிட்னியின் அழகையும், உலக அதிசயங்களயும், கம்ப்யூட்டர் கிராபிக்ஸையும் நம்பாமல் மதுரை மெக்கானிக் கடையையும், சென்னை மேன்சன்(Mansion) வாழ்க்கையையும் தத்ரூபமாகக் காட்டி, தன்னுடைய தனித்துவத்தை 'காதல்' திரைப்படத்தின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். சாதாரணமானவர்களுக்காக, சாதாரணமானவர்களைப் பற்றி எடுக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த படம் இது.

ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் இயக்குனரின் உழைப்பு ஒளிர்கிறது. கதாநாயகியின் அப்பா, சித்தப்பா, பாட்டி, மெக்கானிக் கடை சிறுவன் போன்ற கதாபாத்திரங்களை மிகக் கவனத்துடன் செதுக்கியிருக்கிறார்.

சந்தியா! 10ஆம் வகுப்பு படிக்கும் ஒரு பெண்ணுக்குள் இப்படி ஒரு தேர்ந்த முதிர்ச்சியான நடிப்புத் திறனா? சற்றே கஜோலின் சாயல்...உயரம் கம்மி, சற்று பருமனான தோற்றம், மாநிறம்! களையான முகம், உணர்ச்சிகளைக் கொட்டும் கண்கள்! பள்ளி முடிந்து வீடுக்கு வந்தவுடன், அப்பாவை அழைத்துக் கொண்டு வந்து வீட்டுக்கு எதிரே இருக்கும் தள்ளுவண்டிக் கடையில் 'ஜிகிர் தண்டா' வாங்கிக் குடிக்கும் மிக யதார்த்தமான பெண்! தனது ஸ்கூட்டியில் தோழியை அழைத்துக் கொண்டு வேண்டுமென்றே பரத்தின் மெக்கானிக் கடைக்கு வந்து அவரை 'சைட்' அடிப்பது, பரத்தின் கடையைத் தாண்டி பள்ளிக்குச் செல்லும் போதெல்லாம் அவரைத் திரும்பிப் பார்த்து லேசாக புன்னகைப்பது, ஓடிப்போய் திருமணம் செய்துக் கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்துவது போன்ற காட்சிகளில் காதல் கொடுக்கும் அந்த அசட்டுத்(குறுட்டு?) தைரியத்தால் உந்தப்படும் ஒரு இளம் பெண்னை அருமையாகச் சித்தரித்திருக்கிறார். முகம் முழுக்க அப்பிய கவலையுடன், நகத்தைக் கடித்துக் கொண்டு, அவஸ்தையுடன் சென்னை வீதிகளில் பரத்துடன் வீடு தேடி அலையும் காட்சிகளில் மனதைத் தொடுகிறார். ஒரு இளம் பெண் தெருவில் தனியாக நின்றால் அவளை ஆண்கள் எப்படியெல்லாம் பார்க்கிறார்கள், பேசுகிறார்கள் என்னும் கசப்பான உண்மையை பார்க்க முடிகிறது.

டான்ஸராக இருந்து நடிகனாக உருவாக தனக்குக் கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தை திறமையாகப் பயன்படுத்தியிருக்கிறார் பரத். க்ரீஸ் படிந்த அழுக்குச் சட்டையை அனிந்து கொண்டு மதுரை வீதியில் மெக்கானிக் கடை வைத்திருக்கும் ஒரு வாலிபனை அப்படியே கண்முன் நிறுத்துகிறார். சந்தியாவின் ஸ்கூட்டியை அவர் test drive செய்யும் காட்சியில் அவர் ஒரு உண்மையான மெக்கானிக்கை பைக் ஓட்டச் சொல்லிப் பார்த்தபின் நடித்திருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். தோள்களைக் குறுக்கிக் கொண்டு, கால்களை 180 டிகிரியில் பரத்திக் கொண்டு பரத் பைக் ஓட்டுவது ரொம்ப தத்ரூபம். நம்ம ஊர் மெக்கானிக் எல்லாம் அப்படித்தான் பைக் ஓட்டுவார்கள் என்று நண்பர்கள் கூட்டம் சொன்னது! பரத்தும் சந்தியாவும் மதுரையிலிருந்து சென்னை செல்லும் அந்த பஸ் பயணம் ஒரு கவிதை! 'உனக்கென இருப்பேன்' பாடல் கேட்கும் போது இதயம் கனக்கிறது.

அந்த மெக்கானிக் கடைச் சிறுவனை மறக்கவே முடியாது. 'சரிங்ணே' (சரிங்கண்னே) என்று அவன் சொல்லும் அழகே தனி! பரத்தின் வீட்டை காட்டுகிறேன் என்று சொல்லி அந்த வெள்ளை வேட்டி-சட்டைக் கும்பலை சுற்ற வைத்து அலைக்கழிக்கும் காட்சியில் குறும்பு கொப்பளிக்கிறது.


ஆரமபத்தில் இருந்து அழகாக, யதார்த்தமாக நகர்ந்துகொண்டிருக்கும் கதையின் இறுதிக் காட்சியில் சாதி வெறி தலை விரித்தாடுகிறது! முகமெல்லாம் அம்மை தழும்புடன் பிராந்தி கடை முதலாளியாக மகளின் மேல் உயிரையே வைத்திருக்கும் அப்பா தன் மகள் வேறு சாதியைச் சேர்ந்தவனைத் திருமணம் செய்துகொண்டுவிட்டாள் என்று தெரிந்ததும் அவளை இழுத்து வந்து அடித்து, தாலியை அறுக்கச் சொல்லி, அந்த இளைஞனின் மேல் பாறாங்கல்லை போட்டுக் கொல்லத் தயங்காத சாதி வெறிப் பிடித்தவராக இருக்கிறார். கதாநாயகியின் சித்தப்பா - ஆரம்பக் காட்சிகளிலும், கதாநாயகியைத் தேடி அலையும் காட்சிகளிலும் பொறுமையைக் கடைபிடித்தவர், கடைசியில் அவளை இழுத்து வந்து தன் அண்ணன் முன் தள்ளி "இப்ப உன் கோவத்தை காட்டு அண்ணே" என்று சொல்கிறார். பெண்களெல்லாம் சேர்ந்து சந்தியாவை அடிக்கிறார்கள்! அவள் கட்டியிருந்த புடவையை உருவித் தூக்கி எறிகிறார்கள்! பெண்களுக்குக் கூட இந்த அளவு சாதி வெறி இருக்குமா? நம்புவது சற்று
கடினமாக இருக்கிறது. பரத்தை ஆண்களெல்லாம் மூர்க்கமாக அடிப்பதைப் பார்த்து "அப்பா, நீங்க என்ன சொன்னாலும் செய்யறேம்ப்பா" என்று கதறும் சந்தியா, பரத்தின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தன் தாலியைக் கழற்றி தூக்கியெறிந்துவிட்டு மனம் உடைந்து மயங்கி விழும் சந்தியா, சில வருடங்கள் கழித்து பைத்தியமாகிவிட்ட தன் காதலனை சந்திக்க நேரிடும் போது, "முருகா! நான் தப்பு பண்ணிட்டேன் முருகா! நீ நல்லாயிருப்பேன்னு தானே நான் அன்னைக்கு அப்படி செஞ்சேன்? நீ இப்படி ஆகிட்டியே முருகா! நாம என்ன பாவம் செஞ்சோம்? காதலிச்சது தப்பா?" என்று கதறும் சந்தியா - இறுதிக் காட்சிகள் முழுவதும் தன் நடிப்பால் சந்தியா எல்லோரையும் உருக்குகிறார். Omni Busஸின் லேசான வெளிச்சத்தில் பார்த்தபோது எல்லார் கண்களிலும் கண்ணீர். மேக்கப் கலையாமல் முகம் கோணாமல் அழும்போது கூட நளினத்தைக் கடைபிடிக்கும் கதாநாயகிகளே! உள்ளத்தில் இருந்து அழும் இந்தச் சின்னப் பெண்ணைப் பாருங்கள்! நடிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!

இது வெறும் காதல் கதைதானா? இல்லை!

சாதியின் பிடியில் சிக்கிக் கொண்ட நம் சமூக அவலங்களின் கதை...
நட்பின் நெருக்கத்தைப் பற்றிய கதை...
பெற்றோர்கள்-பிள்ளைகள் முக்கியமான டீன் ஏஜ் பிள்ளைகளுக்கிடையே உள்ள communication gap பற்றிய கதை...
சென்னை கலாசாரத்தைப் பற்றிய கதை...
எதிர்காலக் கனவுகளுடன் சென்னை மேன்சன்களில் தங்கியிருக்கும் தமிழ் நாட்டு இளைஞ்சர்களைப் பற்றிய கதை...

இந்தப் படத்தை இன்னும் பார்க்காத ஒரு நண்பர் சொன்னார் - "பத்தாவது படிக்கும் பொண்ணுக்கு காதல் ஒரு கேடா? ஒரு பொண்ணு வீட்டை விட்டு ஓடிப் போய்விட்டால் அந்தக் குடும்பமே சின்னா பின்னாவாகிவிடுகிறதே! அந்த வேதனை எப்படிப் பட்டது! இந்த மாதிரி படம் எடுப்பவர்களின் பொண்ணும் பொண்டாட்டியும் ஓடிப் போகனும்!" என்று. படத்தைப் பார்த்த பிறகு அவருடைய கருத்து மாறுமா என்று தெரியவில்லை.

ஒரு நல்ல படம், அதைப் பார்த்து முடித்த பிறகும் நினைவில் பல நேரம் தேங்கி நிற்கும். அப்படிப்பட்ட படம் தான் 'காதல்'. என்னதான் நம் நாடு தொழில் நுட்பத்திலும் விஞ்ஞானத்திலும் முன்னேறியிருந்தாலும், சாதி மத சம்பந்தப்பட்ட விசயங்களில் மட்டும் மனிதனின் மனம் 300 வருடங்கள் பின் தங்கியே இருப்பது ஏன்? காதல் வயப்படுபவர்களின் விதி இந்த சாதி மத சமூக நிலைபாட்டுடன் பின்னிப் பினையப் பட்டிருப்பது கொடுமை! சாதி என்கிற ஒரே காரணத்தினால் பிரிக்கப்பட்டு, வாழ்க்கையின் சந்தோசங்களைப் பறிகொடுத்த எல்லா காதலர்களுக்காகவும் நான் வேதனைப்படுகிறேன்.

படத்தை பார்த்து முடித்த பிறகு என் மனதில் எழுந்த சில கேள்விகள்:

1. பரத் மதுரை தமிழ் பேசுகிறார். அவரைப் போலவே மதுரையில் வாழும் சந்தியா ஏன் மதுரை தமிழ் பேசவில்லை? ஒருவேளை கான்வென்ட்டில் படிக்கும் பெண் என்பதால் இருக்குமோ?

2. கையில் பணம் இல்லை, வீடு உடனே பிடிக்கவேண்டும், அதற்கு முதலில் திருமணம் உடனே செய்யவேண்டும் - இப்படி இருக்கும்போது யாராவது ப்யூட்டி பார்லர் சென்று மேக்கப் போட்டுக்கொள்வார்களா?

3. காதலிப்பவர்கள் எவ்வளவு vulnerable ஆக இருக்கிறார்களோ, அப்படியே அவர்களுடைய நண்பர்களும் இருக்கிறார்களே, அது ஏன்? சந்தியாவின் பள்ளித் தோழி எதற்காக சித்தப்பாவிடன் உண்மையை உளர வேண்டும்? பரத்தின் நண்பன் எதற்காக சித்தப்பாவை அவர்கள் வீட்டுக்கு அழைத்து வர வேண்டும்?

4. பைத்தியமாகிவிட்ட பரத்தைப் பார்த்து சந்தியா கதறும் காட்சியில், அதை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கும் சந்தியாவின் கணவர் தன் கையிலிருந்த குழந்தையை சந்தியாவிடம் கொடுக்கிறாரே, அதற்கு என்ன அர்த்தம்? உனக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறதம்மா என்று சந்தியாவுக்கு ஞாபகப்படுத்துகிறாரா?