Monday, July 16, 2007

பெட்னா(FeTNA)வும் சில விளக்கங்களும்

பெட்னா விழாக்களைப் பற்றியும், பெட்னா நிர்வாகத்தைப் பற்றியும் சிலர் என்னுடைய முந்தைய பதிவில் சில கேள்விகள் எழுப்பியிருந்தனர். வாசன் என்கிற பதிவரைப் பாராட்டுகிறேன். பெட்னா பற்றிய தனது வருத்தங்களை மிகவும் நாகரீகமாக எழுதியிருந்தார். ஆனால் சில அனாமதேய, அநாகரீகமான பின்னூட்டங்கள் படிப்பதற்கு வேதனையாக இருந்தது. தொடர்ந்து 4 வருடங்களாக பெட்னா விழாக்களுக்குப் போய்வருவதாலும், 2004 ஆம் ஆண்டு பால்டிமோரில் நடந்த பெட்னா விழாவில் வேலை செய்ததாலும், ஓரளவு இந்த விழா ஏற்பாடுகள் எப்படி ஒருங்கிணைக்கப்படுகின்றன என்பதை நான் அறிவேன். அந்த சிறு அனுபவத்தின் அடிப்படையில் சில விளக்கங்கள் அளிக்க விரும்புகிறேன். நான் எதையும் நியாயப்படுத்தவில்லை. ஆனால், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட, எனக்குத் தெரிந்த சில உண்மைகளை மட்டுமே இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். .

முதலில் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். பெட்னா நிர்வாகிகளும், விழா ஏற்பாடுகளில் உதவுபவர்களும், நம்மைப் போலவே அமெரிக்காவில் முழு நேர வேலையில் இருப்பவர்கள். இவர்களுக்கும் குடும்பப் பொறுப்புகள் இருக்கின்றன. ஒரு முழு நேர "Event Co-ordinator" ஆக இருப்பவரிடன் உள்ள செயலாற்றும் திறமையை இவர்களிடம் எதிர்பார்ப்பது தவறு. அலுவல், குடும்பம் இவற்றுக்கப்புறம் எஞ்சியிருக்கும் நேரத்தில் இவர்கள் ஒருங்கிணைக்கும் விழாவில் குறைகளே இருக்கக்கூடாது என்று எப்படி எதிர்பார்க்கமுடியும்?

குற்றச்சாட்டு 1: தமிழ்நாட்டிலிருந்து விழாவுக்கு வருகிறார்கள் என்று விளம்பரப்படுத்தப்படும் பிரமுகர்களில், பாதி பேர் விழாவுக்கு வருவதில்லை.
இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. விழாவிற்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு இந்தப் பிரமுகர்களுக்கு பெட்னா அழைப்பு அனுப்பும் போது, எல்லாரும் ஒத்துக்கொள்வார்கள். பெட்னாவும் தன் அறிவிப்புகளிலும், இணையதளத்திலும் இவர்களின் பெயர்களை அறிவிக்கும். இடையில் அந்த மூன்று மாதக் காலத்தில் என்னென்னவோ நடக்கும். உதாரணத்திற்கு, இந்த வருடம் இறையன்பு வருவதாக இருந்தார். ஆனால் விழாவிற்கு ஒரு மாதத்திற்கு முன் அவர் காரில் செல்லும்போது விபத்து நடந்து எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது. லக்ஷ்மன் ஸ்ருதி வருவதாக இருந்தது. ஆனால் அவர்கள் குழுவிற்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டது. சனிக்கிழமை அன்று விழா. புதன் இரவு தான் இந்த விசா மறுக்கப்பட்ட விசயம் நிர்வாகிகளுக்குத் தெரிகிறது. அதற்குப் பிறகு முட்டி மோதி நியூஜெர்சியில் உள்ள "ஜெர்ஸி ரிதம்ஸ்" என்கிற இசைக்குழுவை ஏற்பாடு செய்தார்கள். அந்த இசைக்குழுவில் இருப்பவர்களெல்லாம் படிக்கும், வேலைக்குப் போகும் தமிழ் இளைஞர்கள். இரண்டே நாட்களில் இரவு பகல் பாராமல் பயிற்சி செய்து அரங்கத்தில் அசத்தினார்கள். இப்படி கடைசி நேரச் சறுக்கல்களும் சமாளிப்புகளும் ஒவ்வொரு விழாவிலும் வழக்கமாக நடந்துவருகிறது. இதைத் தவிர்க்க முடியாது. ஆனால், நிர்வாகிகள் வராதவர்களின் பெயர்களை இணையதளத்திலிருந்து எடுத்துவிடவேண்டும். இந்த வருடம், லியோனி, சேரன், திலகவதி ஆகியோரின் படங்கள்/பெயர்களை அகற்றியவர்கள், லக்ஷ்மன் ஸ்ருதி மற்றும் இறையன்புவின் படங்கள்/பெயர்களை அகற்றத் தவறிவிட்டார்கள். TANA இணையதளத்தைப் பார்த்தீர்களென்றால், அங்கே "Important Announcement" என்று கொட்டை எழுத்தில் போட்டு, அதில் ஒரு நடிகர் விழாவுக்கு வரமுடியாது போனதை தெரிவித்திருந்தார்கள். இது போல் பெட்னா செய்திருக்கவேண்டும். இது கட்டாயம் தவறுதான்.

குற்றச்சாட்டு 2: சினிமாக்காரர்களை பெட்னா எதற்காக அழைக்கவேண்டும்?
நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, சினிமா நம் வாழ்க்கையில் இரண்டரக் கலந்த ஒன்று. சினிமா இல்லாத தமிழ்ச் சமுதாயம் இருக்க முடியாது. எந்த ஒரு அமைப்பிலும், அனைத்துச் சாராரையும் திருப்திப் படுத்தும் வகையில் தான் நிகழ்ச்சிகளை அமைக்க வேண்டும். புதியவர்களையும், இளைஞர்களையும் எப்படி பெட்னாவுக்கு வரவழைப்பது? சினிமா நடிகர்/நடிகைகள் வந்தால், நிறைய பேர் விழாவுக்கு வருவார்கள் என்கிற ஒரு நப்பாசையில் தான் ஒவ்வொரு வருடமும் சினிமாத்துறையிலிருந்து நடிகரோ, நடிகையோ, இயக்குனரோ அழைக்கப்படுகிறார்கள். 2004 பால்டிமோர் விழாவிற்கு வந்திருந்த நடிகர் விவேக்கை பார்ப்பதற்காகவே அவருடைய நிகழ்ச்சி இருக்கும் நாளன்று மட்டும் ஒரு நாள் டிக்கட் வாங்கிக்கொண்டு விழாவுக்கு நிறைய பேர் வந்தார்கள். வந்தவர்கள் மற்ற சில நிழ்ச்சிகளையும் இருந்து பார்த்துவிட்டுத் தான் போனார்கள். அதனால், மக்களை வரவைப்பதற்கும், அப்படியே மற்ற நிகழ்ச்சிகளை அவர்கள் பார்க்கவேண்டுமென்பதற்காகவும் தான் சினிமா நடிக/நடிகையரை பெட்னா அழைத்து வருகிறது. பெட்னா மட்டுமல்ல TANA என்கிற தெலுங்கு அமைப்பு(இந்த வருடம் இலியானாவை அழைத்திருக்கிறார்கள்!), மலையாளம், கன்னட அமைப்புகள் கூட மக்களை ஈர்ப்பதற்கு இந்த உத்தியைத்தான் கையாள்கின்றன. இதில் தவறு ஒன்றும் இல்லையென்பது என் கருத்து.

என் பதிவில் அனானி குறிப்பிட்டது போல் S.J சூரியா போன்றவர்களுக்கு காசு செலவழித்து அழைத்து வருவது வருத்தப்படவேண்டிய விசயம். நான் கேள்விப்பட்டது என்னவென்றால், S.J சூர்யா விழாவுக்கு வருவதைத் தடுத்து நிறுத்த பல தமிழ் ஆர்வலர்கள் கடுமையாக முயற்சி எடுத்தார்கள், ஆனால் அது தோல்வியில் முடிந்தது. என்னிடம் கூட ஒருவர், நீங்கள் பெண்களின் சார்பாக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எனக்கு அன்று அந்தத் துணிவு இல்லை. என்னைப் போல பயந்துகொண்டு, ஏன் வம்பு என்று கேள்வி கேட்காமல் பலர் இருந்துவிடுவதால் தான் தமிழ் அமைப்புகள் வளர முடியாது இருக்கின்றன. S.J சூர்யா மேடையில் ஏறியபோது அவருக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது என்றும் கேள்விப்பட்டேன். அதனால் சினிமா நடிகர்/நடிகைகளை அழைக்கும் விசயத்தில் பெட்னா மேலும் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

குற்றச்சாட்டு 3: பெட்னாவின் முன்னாள் இயக்குனரை எப்.பி.ஐ பிடித்துக்கொண்டு போய்விட்டது.
எப்.பி.ஐ பிடித்துக்கொண்டு போனதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிட மாட்டார். இந்த அடிப்படை புரிந்துணர்வு கூட நம்மவர்களிடம் இல்லையென்பது சற்று ஏமாற்றமாக இருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்று நீதிமன்ற விசாரணையின் மூலம் நிரூபிக்கப்படும் வரை அவர் குற்றமற்றவர் என்றே அனுமானித்துக் கொள்ள வேண்டும் என்கிற நெறி அமெரிக்க சட்டங்களில் வற்புறுத்தப்படுகிறது. முன்னாள் பெட்னா நிர்வாகி குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுவிட்டாலும் கூட, அதற்காக பெட்னாவை பழி சொல்வது எந்த வகையில் நியாயம்? "Guilty By Association" என்று கேளிவிப்பட்டிருக்கிறீர்களா? அதற்கு, விக்கியிலிருந்து சில உதாரணங்களை இங்கே கொடுக்கிறேன்.

1. பில் க்ளிண்டன் டெமாக்ரடிக் அணியைச் சேர்ந்தவர். பில் கிளிண்டன் தன் மனைவிக்குத் துரோகம் செய்தவர். அதனால் டெமாக்ரடிக் அணியைச் சேர்ந்த அனைவரும் மனைவிக்குத் துரோகம் செய்தவர்கள் என்று சொல்ல முடியுமா?

2. ஹிட்லர் சைவ உணவு சாப்பிடுபவர். ஹிட்லர் ஒரு கொடுங்கோலன். அதனால் சைவ உணவு சாப்பிடுபவர்களெல்லாம் கொடுங்கோலர்கள் என்று சொல்ல முடியுமா?

3. நீங்கள் XYZ என்கிற நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள். அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரை எப்.பி.ஐ பிடித்துக்கொண்டு போய்விட்டது. அதனால் அந்த நிறுவனமே தவறானதாகிவிடுமா? அந்த நிறுவனத்திலிருந்து நீங்கள் உடனே ரஜினாமா செய்துவிடுவீர்களா?

அதே போல,பெட்னாவின் முன்னாள் நிர்வாகி ஒருவர் இருக்கிறார். அவர் அமெரிக்க அரசாங்கத்தால் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். அதனால் பெட்னா என்கிற அமைப்பே குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா? யோசித்துப்பாருங்கள்!.

இங்கே வாசிங்டனில் எங்களிடையே வாழ்ந்த, அனைவரும் நன்கு அறிந்த ஒரு தமிழர், NASA வில் வேலைப்பார்த்த இன்ஜினியர்! சில மாதங்களுக்கு முன் எப்.பி.ஐ யினால் கைது செய்யப்பட்டார். காரணம், 16 வயதிற்கு குறைவாக இருந்த ஒரு பெண்ணுடன் தகாத முறையில் இணையத்தில் அளவளாவியது, மற்றும் கள்ளத்தனமாக அந்தப் பெண்ணை சந்தித்தது. அவருக்கு ஐந்து வருட சிறை தண்டனை அளிக்கப்பட்டது. அவருக்கு மனைவி, பிள்ளைகள் எல்லாம் இருக்கிறார்கள். அவர் குற்றவாளி என்பதற்காக, எங்க ஊர் தமிழர்கள் அவருடைய குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிடவில்லை, அவர் வேலைப் பார்த்த NASA வை பழி சொல்லவும் இல்லை!.

ஒருவர் குற்றவாளி என்பதற்காக அவரைச் சுற்றி இருப்பவர்களும் குற்றவாளிகள் என்று நினைக்கும் குறுகிய மனப்பான்மையை தயவு செய்து மாற்றிக்கொள்ளுங்கள்.

குற்றச்சாட்டு 4: TNF/fetna இரண்டு அமைப்புகளும் தனித்தனியாக விழா நடத்துகின்றன
பெட்னாவின் குறிக்கோள் என்னவென்று முன்பு எனக்குப் புரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் பெட்னா விழாவிற்கு கிட்டத்தட்ட 200,000 டாலர்கள் செலவழிக்கப்படுகிறது. சென்ற ஆண்டு நியூயார்க்கில் நடந்த விழாவுக்கு கிட்டத்தட்ட 400,000 செலவானது என்று கேள்விப்பட்டேன். இவ்வளவு பணத்தையும் ஒரு ஆடம்பரமான விழாவில் வாரி இறைத்து ஏன் கரியாக்கவேண்டும்? இவ்வளவு பணத்தையும் கொண்டு தமிழ்நாட்டில் எத்தனை ஏழைகளுக்கு உதவலாம் என்று என் கணவரிடம் பலமுறை விவாதித்திருக்கிறேன். அவரும், மற்ற சில நண்பர்களும் எனக்களித்த விளக்கம் - பெட்னா தொண்டு நிறுவனம் அல்ல. அதன் குறிக்கோள் தமிழ்க் கலையையும் இலக்கியத்தையும் வளர்ப்பது மட்டுமே. இங்கிருந்தபடி தமிழ்நாட்டில் தொண்டு செய்வதற்கு TNF போன்ற வேறு சில அமைப்புகள் இருக்கின்றன. பெட்னாவிற்கு நன்கொடை கொடுக்கும் தமிழ் ஆர்வலர்கள் பலர் TNF க்கும் நன்கொடை கொடுக்கின்றார்கள்.

TNF தமிழ்நாட்டுடன் மட்டுமே தொடர்புடைய ஒரு அமைப்பு. ஆனால் பெட்னாவின் குறிக்கொள் விசாலமானது. தமிழ்நாடு மட்டுமல்லாது உலகத் தமிழர்களின் கலையையும் இலக்கியத்தையும் வளர்க்கும் அமைப்பு. இப்படி முற்றிலும் வெவ்வேறு குறிக்கோள்களைக் கொண்ட இரு அமைப்புகள் ஒன்றாகச் சேர்ந்து விழா எடுப்பது சரியா அல்லது தனித்தனியாக விழா எடுப்பது சரியா என்று எனக்குத் தெரியாது. தமிழர்களின் ஒற்றுமையில், அனானிகளுக்கு இருக்கும் அக்கறை இந்த இரு பெரும் அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு இருக்காது என்று நினைக்கிறீர்களா? அவர்கள் தனித்தனியாக விழா எடுக்க முடிவெடுத்ததற்கு ஒரு வலுவான காரணம் இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழ் இளைஞர்களப் பற்றி சொல்லவேண்டியதில்லை. அவர்கள் சுயமாகச் சிந்திப்பவர்கள். பெற்றோர்கள் எந்த முடிவையும் அவர்கள் மேல் தினித்துவிட முடியாது.
NTYO - National Tamil Youth Organization அமைப்பைச் சேர்ந்த அமெரிக்கத் தமிழ் இளைஞர்கள், 2004 ஆண்டில் இருந்து பெட்னா விழாக்களுக்கே போவது என்று முடிவு செய்தது ஏன் என்று, அந்த அமைப்பின் தலைவர், NTYO இணையதளத்தில் எழுதியிருக்கும் கடிதத்தைப் படித்துப் பாருங்கள். "The biggest event that TNF, FeTNA, and NTYO have is our annual July 4th conference that brings all Tamils, young and old, from all parts of America together for three days of exciting activities and captivating seminars. However, this year many of you might be aware that TNF and FeTNA are planning to have TWO SEPARATE conferences, one in Chicago , IL and the other in the Washington DC Area on the same July 4th weekend. This actions succeeds in only splitting the already small Tamil community. NTYO considers both TNF and FeTNA as parent organizations. Last year, the situation was similar and there were also two separate conventions. We decided to go with FeTNA, having the understanding that we would alternate between TNF and FeTNA in the years to come if there were going to be dual conferenes. However, this year, we reversed our decision from last year and have decided to also stick with FeTNA, and we feel that you, our members, deserve an explanation. We were unable to go with TNF this year for several reasons. First, we just recently had our convention in Chicago in 2002 and having it there again would not attract such a large crowd. Secondly, we feel that TNF is centered towards only a Tamil Nadu population, whereas FeTNA is more explicit in their objective to attract all Tamils. Finally, FeTNA is a larger organization and would lead to a better turnout, a necessity for the survival of NTYO. Whether we will ever go with TNF remains to be seen. We are continuously hopeful for a joint conference to once again take place. When that happens all of us are the winners. But for now we have to pick our best possible option."

குற்றச்சாட்டு 5: பார்ப்பன எதிர்ப்பு, மொழி வெறி, புலிகள் ஆதரவு
பார்ப்பன எதிர்ப்பு, மொழி வெறி, புலிகள் ஆதரவு போன்றவற்றை கடந்த மூன்று ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் நான் உணராவிட்டாலும், ஒவ்வொரு ஆண்டும் அனானிகளின் கிசுகிசுப்புகளில் அறிகிறேன். கொஞ்சம் தெளிவான ஆதாரங்களுடன் எழுதினால், அது அனானிகளின் கூற்று என்றாலும் ஏற்றுக்கொள்ளலாம். நந்தன் கதை நாடகத்தையும், ஈழத்தமிழர்களின் கலைநிகழ்ச்சிகளையும் இப்படி ஒரு பார்வையில் பார்க்கமாட்டீர்களென்று நம்புகிறேன்.

6. பொறுக்கிகளுக்காக பொறுக்கிகளால் நடத்தப்படும் அமைப்பு பெட்னா என்று சொன்ன அனானிக்கு:
பெட்னாவில் கிட்டத்தட்ட 30 தமிழ்ச் சங்கங்கள்/தமிழ் அமைப்புகள் உறுப்பினாராக இருக்கின்றன. இந்தச் சங்கங்கள்/அமைப்புகளைச் சேர்ந்த அனைத்துத் தமிழர்களும் உங்களைப் பொறுத்தவரை பொறுக்கிகள், குற்றவாளிகள். அப்படித்தானே? புரியாமல் கேட்கிறேன்...ஆயிரக்கணக்கான பொறுக்கிகளுக்கு பணமும் நேரமும் இருந்தால் என்ன செய்வார்கள்? சும்மா குடித்துவிட்டு கூத்தடிக்காமல், சிரமப்பட்டு தமிழையா வளர்த்துக்கொண்டிருப்பார்கள்? நீங்கள் சொல்லும் இந்தப் பொறுக்கிகளின் அமைப்பை புனித ஆத்மாக்களின் அமைப்பாக மாற்ற உங்கள் பங்களிப்பு என்ன? சும்மா அவதூரான பின்னூட்டங்கள் எழுதுவது மட்டுமே என்றால், மன்னிக்கவும்...இங்கே யார் பொறுக்கி? நல்ல மாற்றங்கள் ஏற்படவேண்டுமென்றால் ஏதாவது உறுப்படியாகச் செய்யுங்கள். ஏன்?! நீங்களெல்லாம் சேர்ந்து "அனானிகள் சங்கம்" அல்லது "பெட்னா எதிர்ப்புச் சங்கம்" என்று ஒரு அமைப்பைத் தொடங்கினால் கூட, உங்களுக்கு வரும் பிரச்சினைகளையும், உங்களைப் போல் உண்மையை உணராமல் வெளியில் உள்ளவர்கள் அவதூறு பேசுவதையும் உங்களால் தடுக்க முடியாது.

Tuesday, July 10, 2007

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை(FeTNA)விழா 2007 - ஒரு கண்ணோட்டம்

இது ஒரு நீண்ட பதிவு. எதை எடுப்பது எதை விடுப்பது என்று தெரியாததால், வள வளவென்று எழுதியிருக்கிறேன். மன்னிக்கவும்!

வருடா வருடம் இந்த பெட்னா (FeTNA)விழா எங்கள் நாட்குறிப்பில் இடம் பெருவது வழக்கமாகிவிட்டது. அமெரிக்காவில் தமிழர்கள் அதிகமாக ஒன்று கூடக்கூடிய ஒரே விழா இது என்பதால் ஆர்வமாகப் போய் பங்கு பெறத் தோன்றுகிறது.

சென்ற ஆண்டும் பெட்னா விழாவைப் பற்றி நான் பதிவு எழுதியிருந்தேன். அந்த விழாவில் நிர்வாகிகளின் கவனக்குறைவினால் ஏற்பட்ட சில தவறுகளைச் சுட்டிக்காட்டி, "இந்த விழாவில் பல பாடங்களைக் கற்ற பெட்னா நிர்வாகிகள், அடுத்த விழாவில் பிழைகளைத் திருத்தி சிறப்பாக நடத்துவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது" என்று எழுதியிருந்தேன். அதற்கு "சூப்பர் ஜோக்" என்று நண்பர் ஸ்ரீகாந்த் மீனாட்சி பின்னூட்டம் இட்டிருந்தார். நான் இதை அவருக்காகச் சொல்லவில்லை, ஆனால் என் நம்பிக்கை வீண் போகவில்லை! என்னுடைய பார்வையில், கடந்த ஆண்டு நியூயார்க்கில் நடந்த விழாவை விட பல மடங்கு இந்த வருட விழா சிறப்பாக இருந்தது. எந்த விதமான குழப்பமோ, பதட்டமோ, சலனமோ இல்லாமல் அமைதியாக, ஆனால் சுவாரசியமாக மூன்று நாட்களும் சென்றன. ஒரு குறிப்பிடத்தக்க விசயம், கடந்த ஆண்டு பெட்னா விழாக்கள், சிகாகோ, பால்டிமோர், டாலஸ், நியூஜெர்சி, நியூயார்க் போன்ற தமிழர்கள் ஏராளமாக இருக்கக்கூடிய பெரிய, பிரபலமான நகரங்களிலேயே நடைபற்றது. இந்த நகரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், வட கரோலினாவில் உள்ள ராலே(Raleigh, NC) ஒரு சிறிய நகரமே. அங்கே சுற்று வட்டாரத்தில் வசிக்கும் தமிழர்களின் எண்ணிக்கையும் குறைவாகத் தான் இருக்கவேண்டும். அதிலும் தமிழ்ச் சங்கம், பேரவை போன்றவற்றில் ஆர்வமிருப்பவர்கள் குறைவே. ஒரு சிறிய குழுவை வைத்து ஒரு பிரம்மாண்டமான விழாவை எடுப்பது என்றால் அது சாதாரண காரியம் அல்ல! ஆனால், தமிழால் இனைந்து தமிழராய் வென்றிருக்கிறார்கள் நமது வட கரோலினா நண்பர்கள்!!! "தமிழால் இணைவோம், தமிழராய் வெல்வோம்" என்பதே இவ்வாண்டு விழாவின் மையக் கருத்து. இன்னொரு பாராட்டப்படவேண்டிய விசயம், இந்த விழாவில் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கான கால அளவு, நேரம் - சரியாகக் கடைப்பிடிக்கப்பட்டது. இவ்விழாவின் ஒருங்கிணைப்பாளர் மிகவும் கண்டிப்பானவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவருக்குப் பயந்தே, எல்லாக் கலைஞர்களும் அறிஞர்களும் தமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் தம் உரையையும், நிகழ்ச்சியையும் முடித்துக்கொண்டுவிட்டார்கள் என்று நினைக்கிறேன் :-)

வெள்ளிக்கிழமை(ஜூலை 6)

மாலை சுமார் 5 மணியளவில் நண்பர்கள் பட்டாளத்துடன் ராலேயில்(Raleigh, NC) downtown பகுதியில் இருக்கும் ஷெரட்டன் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். விடுதியிலிருந்து 5 நிமிட நடையில் இருந்தது விழா நடக்கும் அரங்கம். சீவி சிங்காரித்துக்கொண்டு 7 மணியளவில் அரங்கத்திற்குச் சென்றோம். வாசலிலேயே ஒரு கூடாரம் அமைத்து, இரவு உணவு பறிமாறப்பட்டது. சாப்பிட்டுக்கொண்டே மற்ற ஊர்களிலிருந்து வந்திருந்த நண்பர்களைச் சந்தித்து சற்று நேரம் அலவலாவி விட்டு, அரங்கத்தினுள் நுழைந்தபோது, நடிகர் சிவக்குமார் மேடையில் பேசிக்கொண்டிருந்தார். அவர் ஒரு திறமையான ஓவியக் கலைஞர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவருடைய சில ஓவியங்களும், அவர் நடித்த திரைப்படங்களிலிருந்து சில காட்சிகளும் திரையில் காண்பிக்கப்பட்டது. பிறகு தன் திரைப்பட அனுபவங்களைப் பற்றி சில நிமிடங்கள் சிவக்குமார் பேசினார். பார்வையாளர் ஒருவர் சிவக்குமாரிடம் ஒரு கேள்விக் கேட்டார். "நீங்கள் ஒரு நல்ல ஓவியர், மற்றும் திரைப்பட நடிகர். உங்களுக்கு மிகுந்த மன நிறைவைத் தருவது ஓவியம் வரைவதா? நடிப்பதா?". இதற்கு சிவக்குமாரின் பதில் எனக்குப் பிடித்திருந்தது. "நான் ஒரு ஓவியம் வரையும் போது அது முழுக்க முழுக்க என்னுடைய உழைப்பு, படைப்பு. என்னைத் தவிர வேறு யாரும் அதில் சம்பந்தப்படவில்லை. நானே அங்கே ராஜா. ஆனால், நான் ஒரு நல்ல நடிகனாக இருக்க, ஒரு பாலச்சந்தர் தேவைப்படுகிறார். ஒரு இளையராஜா தேவைப்படுகிறார். பாலசந்தரும் இளையராஜாவும் இல்லையென்றால் சிந்துபைரவி சிவக்குமார் இல்லை. ஆனால் நான் நடிகனாக இல்லாது ஒரு சாதாரண ஓவியனாக இருந்திருந்தால் இன்று பெட்னா மேடையில் நின்று பேசும் வாய்ப்பு கிடைத்திருக்காது. அதனால் மன நிறைவைத் தருவது ஓவியம் வரைவது. புற நிறைவைத் தருவது நடிப்பு" என்றார்.

சிவக்குமாரின் மகன் "பருத்தி வீரன்" கார்த்தி அப்பாவைப் போலவே எளிமை, அமைதி. அவர் பேசும் போது, "நான்கு வருடங்கள் அமெரிக்காவில் படித்துவிட்டு பின் ஊருக்கு நடிப்பதற்காகச் சென்றேன். அமெரிக்காவில் மரியாதையாக, தன்னடக்கமாகப் பேசிப் பழகிய நான், முதல் படத்திலேயே(பருத்தி வீரன்) காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு, ஏய், டேய் என்று பேசியது வேடிக்கையாக இருந்தது" என்றார். அடுத்து வந்த இரண்டு நாட்களிலும், கார்த்தி இரண்டொரு நிமிடங்கள் மேடையில் சுருக்கமாகப் பேசினார். மற்றபடி எதுவும் சிறப்பு நிகழ்ச்சியோ, கலந்துரையாடலோ அவரை வைத்துச் செய்யவில்லை. அவரை விழாவுக்கு அழைத்திருக்க வேண்டாம் என்பது என் கருத்து. தனிப்பட்ட முறையில் நான் கார்த்தியின் ரசிகையாக இருப்பது வேறு விசயம். ஆனால், சும்மா ஒரு நடிகரின் சில நிமிட மேடைத் தோற்றத்தில் மயங்கிவிடுகிற கூட்டம் அல்ல பெட்னாவுக்கு வரும் கூட்டம்.

விழாவுக்கு தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த பிரமுகர்கள் - மருத்துவர் N.சேதுராமன், நீதியரசர் சன்முகம், தமிழறிஞர் இளங்குமரனார், பட்டிமன்றம் புகழ் முல்லை நடவரசு, கலைமாமனி நித்யஸ்ரீ மஹாதேவன் இவர்களெல்லாம் 5 நிமிடங்கள் தம்மைத் தாமே அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினார்கள்.

N.சேதுராமன், சன்முகம் ஆகியோரின் உரைகளை நான் சரிவரக் கேட்கவில்லை.

இளங்குமரனார் - எழுபத்தியெட்டு வயதிலும் தமிழை தன் உயிர் மூச்சாக நினைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் இவரது தமிழ்ப் பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது. இவருக்கு விழாவின் கடைசி நாளன்று, பெட்னா வாழ் நாள் சாதனையாளர் விருதளிக்கப்பட்டது.

முல்லை நடவரசு - திண்டுக்கல் லியோனி விழாவுக்கு வராத குறையை இவர் நிறைவு செய்தார். கணீரென்ற குரல், எழுச்சிமிக்க தமிழ்ப் பாடல்களைப் பாடி கூட்டத்தை நன்றாக மகிழ்வித்தார்.

நித்யஸ்ரீ மஹாதேவன் - இவர் பேசுவதே பாடுவது போல் அவ்வளவு இனிமையான குரல். என்ன ஒரு தன்னடக்கம்!

வெள்ளி இரவு நிகழ்ச்சிகள் முடிகையில் அரங்கத்தை நோட்டமிட்டபோது ஆச்சரியமாக இருந்தது. ஓரளவு நல்ல கூட்டம், அதுவும் வெள்ளி இரவுக்கு! பொதுவாக சனி காலை தான் வெளியூரிலிருப்பவர்கள் வருவார்கள்.

சனிக்கிழமை(ஜூலை 7)

காலை 10 மணியளவில் அரங்கத்தை நோக்கி நடக்கையில், ஏதோ ஒன்று missing போல் தெரிகிறதே, என்ன என்று யோசித்துக்கொண்டே நடந்தேன். ஆம்! வழக்கமாக நம்மை வரவேற்கும் மங்களகரமான நாதஸ்வர இசை missing! நாதஸ்வரக் கலைஞர்களை அழைத்து வர முடியாவிட்டாலும், ஒலிநாடாவிலாவது நாதஸ்வர இசையைப் போட்டிருக்கலாம்.

சனிக்கிழமை பகல் முழுவதும் நிறைய பயனுள்ள உரைகள் - "சமூக நீதியும் தனி மனித சுதந்திரமும்", "பாரதியும் பாரதிதாசனும்", "தமிழகப் பள்ளியில் அமெரிக்க மாணவரின் பங்கு", "கணினியில் தமிழ்" போன்ற தலைப்புகளில். நடு நடுவே நடனம், நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகள். நியூயார்க் விழாவில் அதிகப்படியாக திகட்டும்படி தினிக்கப்பட்டிருந்த பரதநாட்டியங்கள் குறைக்கப்பட்டு, அனைத்து வித நடனங்களும் அளவாகப் புகுத்தப்பட்டிருந்தன. இளங்குமரனார் தலைமையில் நடந்த கவியரங்கத்திற்கு அருமையான தலைப்பு "நிலமென்னும் நல்லாள்". பேசவந்தவர்களெல்லாம், தமிழ் இலக்கியத்தில் பிய்த்து உதறுபவர்கள். ஆனால் நான் கவியரங்கம் நடக்கும் போது "எஸ்கேப்". ஏனென்றால், ஒரு கவியரங்கத்தை பார்த்து பாராட்டும் அளவு எனக்கு தமிழ் கவிதையிலோ, இலக்கியத்திலோ ஞானம் கிடையாது.

மதியம் சற்று இளைபாறிவிட்டு வரலாம் என்று விடுதிக்குச் சென்று வந்த இடைவெளியில், NTYO(National Tamil Youth Organization) அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் அளித்த சிறப்புரையையும் நடன நிகழ்ச்சியையும் தவறவிட்டேன். அற்புதமாக இருந்தது என்று நண்பர்கள் சொன்னார்கள். மாலை நிகழ்ச்சிகள் அனைத்துமே கூட்டத்தை இருக்கையில் கட்டிப்போட்டு உட்கார வைத்துவிட்டன.

முல்லை நடவரசுவின் "இசை இன்பத் தேனையும் வெல்லும்" என்கிற உரை, பல மறக்கப்பட்ட நல்ல தமிழ்ப் பாடல்களை நம் நினைவுக்குக் கொண்டுவந்து நிறுத்தியது. இவருக்கு ஒதுக்கப்பட்ட அரை மணி நேரம் முடிந்தபோது, கூட்டம் "இன்னும் பேசுங்கள்" என்று ஆர்ப்பரித்தது.

கரோலினா தமிழ்ச் சங்கம் வழங்கிய சிறப்புக் கலை நிகழ்ச்சிதான் இந்த வருட பேரவை விழாவிற்கே மகுடம் சூட்டி, அனைவரையும் வியப்பிலும், குதூகலத்திலும் ஆழ்த்திய நிகழ்ச்சி என்று சொல்லலாம்! காவடியாட்டம், கும்மிப்பாட்டு, ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்க்கால் குதிரை ஆட்டம், கரகாட்டம், குறத்தி நடனம், புலியாட்டம் என்று ஒன்றன் பின் ஒன்று ஆடி கலக்கு கலக்கென்று கலக்கி, அரங்கத்தை கரகோஷத்தில் அதிர வைத்தனர் கரோலினா தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள். சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் நடந்த "சென்னை சங்கமம்" நிகழ்ச்சியைப் பார்க்கமுடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு இருந்தது. ஆனால் இன்று இங்கே பேரவை விழா மேடையில் ஒரு தமிழ்த் திருவிழாவையே நடத்தி சென்னை சங்கமத்தின் அமெரிக்க வார்ப்பினை படைத்துவிட்டார்கள்! இதில் பங்குபெற்றவர்களில் பலர் விழா ஒருங்கிணைப்பாளர்கள்! விழா வேலையையும் செய்துகொண்டு, நடனத்திற்கும் பயிற்சி எடுத்துக்கொண்டு...அப்பப்பா இவர்களது கடின உழைப்பைப் பாராட்ட என்னிடம் வார்த்தைகள் இல்லை!

அடுத்து நடிகர் சிவக்குமார் "தமிழ்த் திரைப்படங்களில் தமிழ்" என்கிற தலைப்பில் உரையாற்றினார். அவருடைய குரல், தமிழ் உச்சரிப்பு, தமிழ் இலக்கியத்தில் அவருக்கு இருக்கும் ஞானம் என்னை அசரவைத்தது. தமிழ்த் திரைப்படங்களில் வந்த புகழ்பெற்ற வசனங்கள், பாடல்கள் - உதாரணத்திற்கு, திருவிளையாடலில் சிவனுக்கும் நக்கீரணுக்கும் இடையே நடக்கும் உரையாடல், ஆறுபடை வீடு கண்ட திருமுருகா என்கிற பாடல், போன்றவற்றைப் பற்றிப் சொன்னார். ஆனால் அதிகம் முருகன் - சிவன் பற்றிய பாடல்/வசனங்களையே பேசியதால் சற்று அலுப்பாக இருந்தது. பல சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்களிலெள்ளாம் சமூகக் கருத்துள்ள பிரமாதமான வசனங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றிலும் சிலவற்றைச் சொல்லியிருக்கலாம்.

பிரபலமாகிவரும் தமிழ் வலைப்பதிவுகளைப் பற்றியும், இன்று ஆயிரக்கணக்கில் இணையத்தில் எழுதப்படும் தமிழ்ப் பதிவுகளைத் திரட்டிவரும் தமிழ்மணத்தைப் பற்றியும், அதனை நடத்திவரும் TMI நிறுவனத்தினர் ஒரு அருமையான பவர் பாயிண்ட் ப்ரசன்டேஷனை வழங்கினார்கள். மேலும், அடுத்த நாள் ஷெரட்டன் விடுதியில் உள்ள கான்பரன்ஸ் அறையில் வலைப்பதிவர்கள் பயிற்சி முகாம் ஒன்றையும் நடத்தினார்கள். கிட்டத்தட்ட 20 பேர் வந்திருந்தார்கள். அவர்களுக்கு ஒரு வலைப்பதிவை எப்படி தொடங்கவேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்கள் ஆர்வத்தோடு கேள்வி கேட்டதையும், குறிப்பு எடுத்துக்கொண்டதையும் பார்க்கும் போது, கூடிய சீக்கிரம் தமிழ்மணத்தில் சேரும் வலைப்பதிவுகளின் எண்ணிக்கை வெகு வேகமாக அதிகரிக்கப் போகிறது!

இரவு 9 மணிக்கு அனைவரும் விரும்பி எதிர்பார்த்துக்கொண்டிருந்த நித்யஸ்ரீ மஹாதேவனின் கச்சேரி ஆரம்பமானது. மிருந்தங்கம் வாசித்தவர் நித்யஸ்ரீயின் தந்தை திரு சிவக்குமார். ஒரு வயலின் வித்வான். மூவர் மட்டுமே கொண்ட எளிமையான கச்சேரி அணி. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கினார். அவரது இனிமையானக் குரலில் மயங்கிக் கட்டுண்டது அரங்கம். நான்கு பாடல்கள் கேட்டு ரசித்த பிறகு களைப்பு மிகுதியால் விடுதிக்குச் செல்லவேண்டியதாகிவிட்டது. ஆனால் அதற்குப் பின்னர் தான் கச்சேரி களைகட்டி, குறவஞ்சி, சிலப்பதிகாரம் பாடல்கள் பாடினார் என்று பின்னர் கேள்விப்பட்டேன். கர்நாடக இசைக் கச்சேரி என்றால் அறவே பிடிக்காத ஒரு நண்பர் கூட கச்சேரி முடியும் வரை இருந்து எல்லாப் பாடல்களையும் கேட்டுவிட்டு வந்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 8)

ஞாயிறு காலை கண்விழித்தபோது சற்று படபடப்பாக இருந்தது எனக்கு. காரணம் நான் பங்குபெறும் ஒரு இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சி அன்று மதியம் ஒரு மணிக்கு இருந்தது. நிகழ்ச்சியை நடத்துபவரிடம், கடந்த பல நாட்களாக "என்னை விட்டுவிடுங்கள், மேடை என்றாலே எனக்கு கால்கள் பின்னிக்கொள்ளும், பேசவும் குரல் வராது, இலக்கியத்திலும் நான் பூஜ்ஜியம்" என்றெல்லாம் மன்றாடிப் பார்த்தேன். அவர் செவி சாய்க்கவில்லை. சரி எப்படியும் மேடையில் மானம் போகப் போகிறது, முடிந்தவரை படிப்போம் என்று, ஞாயிறு காலை விடுதி அறையில் மடிக்கணினியை வைத்துக்கொண்டு Tamil Virtual University போன்ற சில வலைதளங்களில் சென்று இலக்கியக் கேள்வி பதில்கள் சிலவற்றைத் தேடிப் படித்தேன். அரங்கத்திற்கு போனபின்பு என் அணியில் உள்ளவர்களுடன் சேர்ந்து கொஞ்ச நேரம் மண்டையை உடைத்துக்கொண்டு, சரி இதற்கப்பறம் ஆனது ஆகட்டும் என்று மனதைத் தேற்றிக்கொண்டு, நிகழ்ச்சிகளை பார்க்க அரங்கத்தினுள் நுழைந்தேன்.

மீண்டும் மேடையில் நடிகர் சிவக்குமார்! "பெண்களுக்கு மார்புப் பகுதி, தலை எந்த அளவு உடலிலிருந்து நீண்டு இருக்கிறதோ, அந்த நீளத்திற்கு உட்பட்டு இருக்கவேண்டும். சில பெண்களுக்கு பிருஷ்டம் குறைவாக இருக்கும். மேல் உதட்டை விட கீழ் உதடு பெரிதாக இருக்கும்" என்று அவரிடம் இருந்து வந்த வார்த்தைளைக் கேட்டு புரியாமல் குழம்பினேன்! அப்புறம் தான் புரிந்தது, அவருக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு "அழகு". ஒரு ஓவியன் ஒரு பெண்ணையோ ஆணையோ வரையும் போது, உறுப்புக்களின் அமைப்பு, அளவு போன்ற நுணுக்கங்கள் மிகவும் முக்கியம். அந்தக் கண்ணோட்டத்தில் தான் பேசிக்கொண்டிருந்தார். அவர் பார்த்த பெண்களிலேயே எல்லா உறுப்புக்களின் அளவும் அமைப்பும் கணக் கச்சிதமாக அமையப் பெற்றப் பெண் நடிகை வைஜெயந்திமாலா என்றார்!

மதிய உணவுக்குப் பின் எங்கள் வினாடி வினா நிகழ்ச்சி! உணவு சரியாக இறங்கவில்லை. சரியாக ஒரு மணிக்கு மேடையில் போட்டிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தோம். எங்கள் அணியின் பெயர் "தொல்காப்பியர்". எதிர் அணியின் பெயர் "ஒளவையார்". அரங்கத்தில் கூட்டமே இல்லை. மானம் போவதைப் பார்ப்பதற்கு யாரும் இல்லை என்று சற்று ஆறுதலாக இருந்தாலும், உற்சாகப்படுத்துவதற்கும் யாரும் இல்லை என்று வருத்தமாக இருந்தது. தூரத்தில் உட்கார்ந்து "நான் இருக்கிறேன்" என்று கையாட்டிய என் கணவரைப் பார்த்ததும் சற்று நிம்மதியாக இருந்தது. நிகழ்ச்சி முடிந்தது! எங்கள் அணி வெற்றி பெற்றது!!! நம்பவே முடியலை!!! இப்பொழுது எனக்கு இலக்கியங்களைப் பற்றி நிறைய படிக்கனும் என்கிற ஆர்வம் எழுந்திருக்கிறது.

இன்றும் பல நல்ல பயனுள்ள உரைகள் - "வள்ளுவம் காட்டும் வாழ்க்கை", "தமிழ்நாட்டில் கல்வி வழி மேம்பாடு", "தாய்த் தமிழ் பள்ளி" போன்ற தலைப்புகளில்.

மாலை முல்லை நடவரசு தலைமையில் பட்டிமன்றம். தலைப்பு "புலம் பெயர்ந்த தமிழர்கள் கான்பது இன்னலா? இன்பமா?". பாட்டுக்கும், கிண்டலுக்கும், நகைச்சுவைக்கும் பஞ்சமேயில்லை! சாப்பாடு, சுத்தம், வசதிகள் போன்ற விசயங்களைப் பற்றியே இரு அணிகளும் விவாதித்துக்கொண்டிருக்க, "இன்பம்" அணியில் பேச வந்த இளம் ஈழத்துப் பெண், "இலங்கையில் அடிப்படை தேவகளான உணவு, உடை, தங்கும் இடம் கூட இல்லாமல், சுதந்திரமும் பறிக்கப்பட்டு, பல வித கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டு, துரத்தப்பட்டு புலம் பெயரும் தமிழர்கள் தாம் புலம் பெயர்ந்த நாடுகளில் உணவு, உடை, பாதுகாப்பு என்று எந்த பிரச்சினையும் இல்லாமல் சுதந்திர வாழ்க்கை வாழமுடிவது இன்பமே" என்று சொன்னார். அந்தப் பெண் அப்படிச் சொன்ன பிறகு, அதை மறுத்து எப்படிப் பேசுவது? என்னத்தைப் பேசுவது? அந்த ஒரு உண்மைக்கு முன் எல்லா விவாதங்களும் தோற்றுவிடுமே? என்று நான் யோசித்துக்கொண்டிருக்கையில், எதிர் அணியிலிருந்து பேச வந்தவர் "ஈழத்தில் இன்று நடப்பது துன்பம் என்று நான் ஒற்றுக்கொள்ள மாட்டேன்" என்றார். பல புருவங்கள் உயர்ந்தன... கூட்டத்தில் சல சலப்பு...அவர் தொடர்ந்து "அது ஒரு தவம்! அதைத் துன்பம் என்று சொல்லி கொச்சைப்படுத்தாதீர்கள்" என்றார். "தவம்" என்கிற இந்த அழகான விவரிப்பைக் கூட்டம் கரகோஷம் செய்து ஆமோதித்தது. புலம் பெயர்ந்தவர்கள் அனுபவிப்பது இன்னலே என்கிற அணியின் தலைவர் தம் அணியின் கருத்துக்களைத் தொகுத்தளிக்கும் போதும், "என்னதான் ஈழத் தமிழர்கள் இங்கே சுதந்திரமாக, இன்பமாக இருந்தாலும், தாயகத்தில் அவர்களுடைய உறவினர்கள் துன்பப்படுதும், அவர்களை விட்டு தாம் பிரிந்திருக்க நேர்கிறதே என்கிற நினைப்பும் அவர்களுக்கு இன்னல் இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். ஆனால் அந்த ஈழத்துப் பெண்ணின் சோகத்தில் துவைத்தெடுத்த தீர்க்கமான கருத்துக்கள்அவளுடைய அணியை வெற்றியடையச் செய்தது.

இரவு 9 மணிக்கு பரத்வாஜின் இன்னிசை நிகழ்ச்சி! முதல் பாடல் "ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே". கூட்டம் ரசித்துக் கேட்டது. தொடர்ந்து அவர் இசையமைத்த பிரபலமான பாடல்களான "ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே" மற்றும் "அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்". பின்னர் பாடகர் ஸ்ரீநிவாஸ் "மின்சாரக் கண்ணா", "ஆப்பிள் பெண்ணே", "வெள்ளி வெள்ளி நிலவே" போன்ற பாடல்களைப் பாடினார். பாப் இசைப் பாடகி ஷாலினி "ஊ லா லா லா", "ரண்டக்க ரண்டக்க" பாடல்கள் பாடியபோது, குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை நிறைய பேர் எழுந்து நடனமாடினார்கள். சிவாஜி படத்திலிருந்து பாடல் வேண்டும் என்று ரசிகர்கள் கேடுக்கொண்டதற்கிணங்கி, "தீ தீ" பாடல் பாடப்பட்டது. கடைசி பாடலான "வாள மீனுக்கும் விளங்கு மீனுக்கும்" பாட்டுக்கு பாதி கூட்டம் இருக்கையிலேயே இல்லை! அப்படி ஒரு குதூகலத்துடன் அனுபவித்து நடனமாடினார்கள்.

நேற்று தான் ராலே வந்தது போல் இருந்தது...அதற்குள் விழா முடிந்து விட்டது. திங்கள் காலை இலக்கியக் கூட்டம் இருந்தது. ஆனால் சில வேலைகள் காரணமாக திங்கள் அதிகாலையில் நானும் கணவரும் வாசிங்டன் டிசி திரும்பவேண்டியதாகிவிட்டது. இலக்கியக் கூட்டத்திற்கும் நல்ல வரவேற்பு என்று நண்பர்கள் சொன்னார்கள்.

அலட்டலில்லை...ஆர்பாட்டமில்லை...பெரிதாக எந்த ஏமாற்றமும் இல்லை...யார் மீதும் வருத்தம் ஏற்படவில்லை...மொத்தத்தில் இது ஒரு அமைதியான, அருமையான தமிழர் விழா!

அடுத்த ஆண்டு விழா ஆர்லாண்டோவில்!!! இப்பொழுதே திட்டமிடத் தொடங்கிவிட்டொம்!!!