Monday, September 11, 2006

ஒன்பது பதினொன்று! (9/11)

இன்றோடு நியூயார்க்கில் உலக வர்த்தக மைய கோபுரங்களின் மீது தீவிரவாத தாக்குதல் நடந்து 5 வருடங்களாகிவிட்டன. இன்று காலை Washington Post Radio கேட்டுக்கொண்டே காரில் செல்கையில் "9/11 அன்று தீவிரவாத தாக்குதல் நடந்த போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்? உங்களின் கதையை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்" என்று அறிவித்து தொலைபேசி எண் கொடுத்தார்கள். பலரின் கதைகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன். நடுவில் இந்தியர் ஒருவர் பேசினார். "உலகத்திலேயே அமெரிக்கா தான் பாதுகாப்பான நாடு என்று நினைத்திருந்தேன். நான் இங்கே நன்றாக கால் ஊன்றியவுடன் என் குடும்பத்தை இங்கே அழைத்து வந்துவிடவேண்டுமென்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த தீவிரவாத தாக்குதலினால் என் நம்பிக்கை குலைந்துவிட்டது. என் எதிர்காலத்தை நினைத்து பயந்தேன்" என்றார்.

என் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன...அப்போது நான் எங்கே இருந்தேன்? எப்படி உணர்ந்தேன்?

2001 ஆண்டு பாதி கடந்தவுடன் நான் வேலையில் இருந்த நிறுவனத்தில் என்னுடைய ஒப்பந்தம் முடிந்தது. அதற்கு முன் நான் அமெரிக்காவில் வேலை பார்த்த நான்கு வருடங்களில், ஒவ்வொரு ஒப்பந்தமும் முடியும் முன்பே அடுத்த வேலை கிடைத்துவிடும். அந்த கர்வத்தினாலும் நான்கு வருடங்கள் உழைத்துவிட்ட சலிப்பினாலும், சற்று ஓய்வெடுக்கலாமென்று ஒரு மாதமாக எந்த வேலைக்கும் விண்ணப்பிக்கவே இல்லை. இரண்டாவது மாதத்திலிருந்த மெதுவாக விண்ணப்பிக்கத் தொடங்கினேன். எங்கிருந்தும் அழைப்பு வரவேயில்லை! சில நாட்கள் கழித்து என் கணவருக்கும் வேலை முடிந்துவிட்டது. லேசாக பதட்டமும் பயமும் தொற்றிக்கொண்டது. கொஞ்சம் வெளியுலகைப் பார்த்தபோது தான் நிலைமை புரியத்தொடங்கியது. 2001 ஆண்டின் அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சி அப்போதுதான் நிகழ்ந்துகொண்டிருந்தது. 'Tech bubble' உடைந்தது...Dot.com நிறுவனங்கள் சரிந்தன...Enron, Worldcom போன்ற நிறுவனங்களின் மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்தன...

நானும் கணவரும் விடாமல் வேலைக்கு விண்ணப்பித்துக்கொண்டிருந்தோம். சேமிப்பில் இருந்த பணமும் கொஞ்ச கொஞ்சமாகக் கரையத் தொடங்கியிருந்தது. தூக்கமும் நிம்மதியும் எங்களை விட்டு தொலைதூரம் சென்றுவிட்டிருந்தது. இப்படியிருக்கும் போது தான் செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி வாசிங்டனில் ஒரு பெரிய 'job fair' நடக்கவிருந்தது. அதற்குச் செல்வதற்காக ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் காத்திருந்தேன். செப்டம்பர் 10 அன்று பின்னிரவில் வழக்கம் போல் இணையத்தில் வேலை வாய்ப்புகள் தேடி களைத்த பின் படுக்கைக்குச் சென்றேன். மறு நாள் காலை (செப்டம்பர் 11) 9:30 மணியளவில் தொலைபேசி மணி எங்களை எழுப்பியது. கணவரின் நண்பர் பதட்டத்துடன், "சீக்கிரம் தொலைகாட்ச்சியை போட்டுப் பார்! நியூயார்க்கில் தீவிரவாதத் தாக்குதல் நடந்திருக்கிறது" என்றார். தூக்கக் கலக்கத்தில் ஒன்று புரியாமல் எழுந்து சென்று தொலைக்காட்சியைப் போட்டுப் பார்த்தோம். விமானங்கள் உலக வர்த்தக மைய கோபுரங்களின் மேல் ஒன்றன் பின் ஒன்றாக மோதி வெடித்த காட்சியை காட்டிக்கொண்டிருந்தார்கள்.

நிலைமையின் தீவிரம் புரிகையில் அதிர்ச்சியாக இருந்தது. இரட்டை கோபுரங்கள் உடைந்து சரிந்த போது, கூடவே என்னுடைய எதிர்காலமும், வாழ்க்கையும் உடைந்து சிதறியது போல் உணர்ந்தேன். ஏற்கனவே அமெரிக்கப் பொருளாதாரம் நொடிந்து போயிருக்கையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் இந்தத் தீவிரவாதத் தாக்குதல்! இதிலிருந்து எப்போது அமெரிக்கா வெளியே வருவது? எப்போது பொருளாதார நிலை சீராவது? எப்போது எனக்கு வேலை கிடைப்பது? கவலை தோய்ந்த முகத்துடன் அன்று முழுவதும் தொலைக்காட்சியின் முன்பு அமர்ந்திருந்தோம் இருவரும். தன்னிரக்கத்திலேயே மூழ்கிப்போயிருந்த எங்களுக்கு, அந்தத் தீவிரவாத தாக்குதலினால் உயிரிழந்தவர்களுக்காக அனுதாபப்படுவதற்கு கூட சில நாட்கள் ஆனது! தாக்குதல் நடந்த இடத்திலிருந்து அமெரிக்க அதிபர் புஷ் பேசுகையில் "We will rebuild New York City!" என்று முழங்கினார். பின் வந்த மாதங்களில் நாங்களும் கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு எங்கள் வாழ்க்கையை "rebuild" செய்தது ஒரு தனி கதை!

7 comments:

தாரா said...

உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி

தாரா.

யாத்ரீகன் said...

அப்போது, கல்லூரி இரண்டாம் வருடம், விடுதியில் " Air force One " படம் பார்த்துட்டு, அதுல இறுதியில் வரும் விமானம் கடலில் விழுந்து நொருங்கும் காட்சியை பார்த்துட்டு இருக்கையில், பசங்க 9/11 செய்தியோட வர எங்களுக்கு அதிர்ச்சி, அடுத்த நாள் கல்லூரி இன்டெரா நெட்டில் நிமிடத்துக்கு நிமிடம் செய்திகளும், படங்களும், மேலதிக தகவல்களும் என உப்டடெ செய்துகொண்டு அதன் முழுமையான சீரிய்ஸ்னஸ் தெரியாம பேசிக்கொண்டிருந்தது நியாபகம் வருது..

தாரா said...

நன்றி யாத்ரீகன்!

தாரா.

கால்கரி சிவா said...

எனக்கும் அதே. கனடா செல்ல மெடிகல் அப்பாய்ண்ட்மெண்ட் செப் 13, 2001. செப் 11 ல் நடந்தது கோரம்.

அதனால் இரண்டு வருடம் தாமதமானது என் பயணம்

கால்கரி சிவா said...

மேலும் ஒன்று.

என் தம்பிக்கு அந்த நேரத்தில் அமெரிக்காவிற்கு வேலை மாற்றம் ஆகியிருந்தது சிங்கபூரிலிருந்து. அவருடைய சிங்கபூர் பாஸ் வேலைகளை முடித்துவிட்டு அக்டோபரில் போ என்று தடுத்தார்.

அவரின் அலுவலகம் WTC tower 2 வில் இருந்தது.
(என் தம்பியும் ஒரு அவசரக் குடுக்கை தினமும் காலையில் 8 மணிக்கு ஆபிஸ் போய்விடுவார்)

அந்த பாஸை எங்கள் குடும்பமே என் தம்பியை காத்த தெய்வமாக பார்க்கிறது

தாரா said...

கால்கரி சிவா, ரவி - அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி!

சிவா, நிங்கள் தேடித் தேடி பொருட்கள் வாங்கி "ஜிகிர்தண்டா" தயாரித்த பதிவை மிகவும் ரசித்துப் படித்தேன்.

தாரா.

Syam said...

நல்லா எழுதி இருக்கீங்க உங்க அனுபவத்தை...அந்த சம்பவத்தால் இந்தியாவில இருந்துகொண்டே பாதிக்க பட்டவன் நான்...இங்க வரதுக்கு கிளம்பி வேலை எல்லாம் விட்டுட்டு பெட்டி படுக்கை எல்லாம் கட்டி வெச்சிட்டு எல்லோருக்கும் டாடா சொல்லீட்டு இருந்த சமயம் இந்த நிகழ்ச்சி...கம்பெனில இருந்து கூப்பிட்டு நாங்க சொல்ற வரைக்கும் வரவேண்டாம்னு சொல்லீட்டாங்க...உங்கள மாதிரியே உரைந்து போயிருந்த எனக்கு 2 நாட்கள் ஆனது உயிரிழந்தவர்களுக்கு அனுதாப பட...