Thursday, February 23, 2006

பெண்களின் பார்வையில் தொழில்நுட்பம்(Technology Through Women's Eyes)

ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவியான ராபின் ஆப்ராம்ஸ், ஐ.நா சபையில் சில வருடங்களுக்கு முன் நடந்த பெண்களுக்கான ஒரு கருத்தரங்கில் ஆற்றிய உரையிலிருந்து சில துளிகள் இங்கே...

பெண்கள் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் பல முக்கிய சாதனைகளை பல வருடங்களாகச் செய்து வந்தாலும், அவையெல்லாம் இன்றும் வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்ட ரகசியங்களாகவே இருக்கின்றன. உதாரணத்திற்கு, Charles Babbage என்பவர் யாரென்று சுலபமாக சொல்லிவிடலாம். கணிணி இயந்திரத்தை வடிவமைக்க வழிகாட்டியாக இருந்தவர். ஆனால் அவருடனேயே பணியாற்றிய Ada Byron King என்கிற பெண் தான் உலகின் முதல் கம்பூட்டர் ப்ரொக்ராமர் என்பது எத்தனைப் பேருக்கு தெரியும்? அதே போல் 19ஆம் நூற்றாண்டில் நவீன கம்பைலர்கள் மூலம் மென்பொருள் தயாரிப்பதற்கான மகத்தான முயற்சிகளுக்காக Grace Hopper என்கிற பெண்மணிக்கு பல விருதுகள் கிடைத்தன, "Man of the Year" விருது உட்பட!!!

அமெரிக்காவில் ஆண்களும் பெண்களும் எப்படி வெவ்வேறு விதமாக தொழில் நுட்பத்தைப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி நிறைய ஆராய்ச்சி நடந்திருக்கின்றன. ஆண்கள் எப்பொழுதும் தமது கணிணிகளின் ஹார்ட் டிஸ்க்கின்(hard disk) அளவு பற்றியும் மைக்ரோ ப்ராஸஸர்களின்(micro proccessor) வேகத்தையும் பற்றியே பெருமையயடித்துக்கொண்டிருப்பார்கள். பெண்கள், கணிணிப் பெட்டியின் உள்ளே என்ன இருக்கிறதென்பதைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படுவதில்லை. உபயோகிக்க எளிதாக இருக்கவேண்டும், வேலை முடியவேண்டும் - இதுதான் அவர்களின் எதிர்ப்பார்ப்பு. ஒர் ஆராய்ச்சியில் எதிர்காலத்தில் கணிணிகள் எப்படி இருக்கவேண்டும் என்று ஆண்களையும் பெண்களையும் கற்பனைச் செய்யச் சொன்னபோது, உலகம் முழுவதையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உதவும் கருவிகளாக எதிர்கால கணிணிகளை ஆண்கள் கற்பனைச் செய்தார்கள். பெண்களோ, மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கருவிகளாக எதிர்கால கணிணிகளை கற்பனைச் செய்தார்கள். பெண்கள் ஒரு பிரச்சினைக்குத் தீர்வாகவும் முடிவாகவும் கணிணிகளைப் பார்க்கிறார்கள். ஆண்கள் தம் உடல் சக்திக்கு அப்பாற்பட்ட சாதனைகளைச் செய்யும் கருவியாக கணிணிகளைப் பார்க்கிறார்கள்.

இந்த தொழில் நுட்பப் பார்வை வித்தியாசம், அமெரிக்காவில் சிறு வயதிலேயே தொடங்கிவிடுகிறது. 10 வயது முதல் ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் கணிணிகளின் மேல் சம அளவு ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள். 10 வயதிற்கு மேல், பெண் குழந்தைகளின் ஈடுபாடு வெகுவாகக் குறைந்துவிடுகிறது. குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் மென்பொருள் விளையாட்டுக்கள் பெரும்பான்மையாக ஆண்களால் தயாரிக்கப்படுகின்றன. இந்த விளையாட்டுக்களின் கரு பெரும்பான்மையாக போர், சண்டை, துப்பாக்கி சூடு, அழித்தல், க்ரைம், ஏதாவது ஒன்றை மீட்டெடுப்பது போன்றவையாகவே இருக்கின்றன. பெண்கள் இதுபோன்ற விளையாட்டுகளை விரும்புவதில்லை. பெண்களுக்கு பொதுவாக தனியாக விளையாடாமல் இரண்டு மூன்று பேருடன் சேர்ந்து குழுவாக விளையாடுவது பிடிக்கும். மேலும் பெண்களுக்கு யாரையும் அழிப்பதோ, யாரும் இறந்துபோவதோ பிடிக்காது. இந்தக் காரணங்களினால், 10 வயதிற்குமேல் பெண் குழந்தைகளின் கணிணி ஈடுபாடு குறைகிறது. "Game Boy" என்று தானே அந்த விளையாட்டுக்களுக்கு பெயர் கூட வைக்கிறார்கள்?

சிறு வயதில் ஏற்படுத்தப்படும் இந்த பால்நிலை பாகுபாடுதான்(gender discrimination) பிற்காலத்தில் பெண்கள் தொழில்நுட்பத்துறைகளில் நுழைவதா வேண்டாமா என்கிற முடிவை பாதிக்கிறது. ஆனால் இந்தப் பாகுபாடு இப்போது வெகு வேகமாக மாறி வருகிறது. கணிணிகளின் சக்திக்கும் வேகத்திற்கும் இணையாக அதன் உபயோகத்தன்மையும் மதிப்பிடப்படுகிறது. கோடிக்கணக்கான மக்களின் கையிலே கணிணிகளைத் தினிக்கவேண்டும் என்று ஆசைப்படும் நிறுவனங்கள், அந்த மக்கள் தொகையில் பெண்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, அவர்களுக்கு ஏற்றார்போல் கணிணிகளையும் மென்பொருள்களையும் தயாரித்து வருகின்றன. பெண்களுக்கு ஏற்றது போல் என்றால் கணிணிகளை பிங்க் நிறத்தில் உருவாக்கவேண்டும் என்று அர்த்தமில்லை!

பெண்களுக்கு மற்றத் துறைகளில் முன்னேற என்னென்ன சிரமங்கள் இருக்கின்றனவோ, அதே சிரமங்கள் தொழில் நுட்பத் துறைகளிலும் இருக்கின்றன - உதாரணமாக பால்நிலை பாகுபாடு, சிறந்த உதாரணங்களோ, வழிகாட்டிகளோ இல்லாமை, குடும்பப் பொறுப்புகள். இவை இல்லாமல் தொழில்நுட்பத் துறைக்கென்று ஒரு தனித்துவம் மிக்க கலாசாரம் உண்டு. உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால், இரவு நேரங்களில் வேலை செய்வது, அளவுக்கு அதிகமாக caffeine உட்கொள்வது, கணிணிகளின் மேல் அதீத மோகம் கொண்டிருப்பதும் அதன் தொடர்பாகவே பேசிக்கொண்டிருப்பது, உடைகள் மற்றும் சுத்த பத்தத்தில் நாட்டம் இல்லாமை ஆகியவை. பெண்கள் இந்தக் கலாசாரத்தில் கலந்துகொள்ளத் தயங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

பொறியியல் மற்றும் கணிணித்துறையில் கல்வி பயிலும் பெண்கள் பெரும்பான்மையானோர் இளநிலையிலேயே தம் படிப்பை நிறுத்துக்கொள்கிறார்கள். முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களுக்கு படிப்பைத் தொடரும் பெண்கள் மிகவும் குறைவு. கணிணித் துறையில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் போன்ற பதவிகளில் பெண்கள் இருப்பதும் மிக அறிதே.

தொழில் நுட்பத் துறையில் பெண்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த, தொழில்நுட்பத் துறையில் பெண்கள் நுழைவதற்காக மறுக்கமுடியாத காரணங்களை உருவாக்க நாம் என்ன செய்யவேண்டும்? குறைந்தபட்சம் மூன்று வழிமுறைகளில் கவனம் செலுத்தலாம்;

1. பால்நிலை பாகுபாட்டிற்கு எல்லா சூழ்நிலைகளிலும், எல்லா வழிகளிலும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டேயிருக்க வேண்டும். ஒரு சமூக அமைப்போ ஒரு நிறுவனமோ பெண்களை எப்படி மதிக்கிறது என்பதை அந்த அமைப்பில் மற்றும் நிறுவனத்தில் செயல்படும் பெண்களின் எண்ணிக்கையைக்கொண்டு தீர்மானிக்கலாம். பெண் குழந்தைகளும் பயன்பெறும்படி கல்வி மற்றும் விளையாட்டு மென்பொருட்கள் உருவாக்கப்படவேண்டும்.

2. ஆசான்களாக, எடுத்துக்காட்டுகளாக விளங்கும் பெண் சாதனையாளர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும். உயர் பதவியில் இருக்கும் பெண்கள் பிற பெண்களின் பார்வையில் படவேண்டும். தொழிநுட்பத் துறையில் வெற்றிகரமான பாதை பெண்களுக்குச் சாத்தியம் என்பதை பெண் சாதனையாளர்களால்தான் நிரூபிக்க முடியும். அப்படி நிரூபிக்கப்படாவிட்டால், பெண்கள் தொழிநுட்பக் கல்வியில் ஆர்வம் இல்லாமல் தம் படிப்பை சீக்கிரமே முடித்துக்கொள்வார்கள் தவறான காரணத்திற்காக.

3. பெண்கள் குடும்பப் பொறுப்பையும், அலுவலகப் பொறுப்பையும் சீராக, திறமையாகக் கையாளுவதில் உள்ள சிரமங்களுக்குத் தீர்வு காணவேண்டும். குழந்தைகள் காப்பகங்கள், குழந்தைப் பேற்றின் போது விடுமுறை, வீட்டில் இருந்தே அலுவலக வேலையைச் செய்வது போன்ற வசதிகளை மேம்படுத்தினால் அது பெண்களுக்கு உற்சாகத்தைத் தரும். பெண்களை வேலைக்கு நியமித்தால் வேலைகள் தடைபடும் என்ற தவறான பார்வை விலகவேண்டும். நிறுவனங்கள் மற்றும் கல்வி அமைப்புகளின் திட்டங்களையும் செயல்முறைகளையும் சற்றே மாற்றியமைப்பதன் மூலம் தொழில்நுட்பத் துறையில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

கணிணிகளால் எந்தப் புரட்சியையும் செய்யமுடியாது. கணிணியைக் கொண்டு மக்களால் என்ன செய்யமுடியும் என்பது தான் மகத்தான புரட்சி!.

என்னுடைய கருத்து: அமெரிக்காவை அப்படியே ஓரமாக வைத்துவிட்டு, தமிழ்நாட்டை எடுத்துக்கொள்வோம். அங்கே பெண்களின் பார்வையில் தொழிநுட்பம் எப்படியிருக்கிறது? அமெரிக்காவை விட நம் ஊரில் தொழில்நுட்பத் துறையில், குறிப்பாக கணிணித்துறையில் இருக்கும் பெண்கள் அதிகம் என்று நினைக்கிறேன். ஆனால் அந்தத் துறையில் அவர்களுடைய முன்னேற்றம் ஒரு நிலையில் தேங்கிவிடுகிறது. நிறைய பெண்கள் கணிணிப் பொறியியல் துறையில் இளநிலைக் கல்வியில் நுழைகிறார்கள். படிப்பை முடித்துவிட்டு IT நிறுவனங்களில் இந்தியாவிலோ அல்லது அமெரிக்காவிலோ வேலைக்கும் போகிறார்கள். ஆனால் அதில் எத்தனைப் பேர் தம் துறையில் சிறந்து விளங்கவேண்டும் என்றோ சாதனைப் படைக்கவேண்டுமென்றோ நினைக்கிறார்கள்? ஒரு சிலர் மட்டுமே. அப்படி நினைக்காதவர்களில் நானும் ஒருத்தி! இங்கே வாசிங்டனில் உள்ள எனது நண்பர்கள் வட்டாரத்தை ஒரு சர்வே(survey) க்கு எடுத்துக்கொண்டால், 20 குடும்பங்களில் உள்ள மனைவிமார்கள் அத்தனைப் பேருமே IT துறையில் வேலை செய்கிறார்கள். எனக்குத் தெரிந்து அதில் ஒன்றிரண்டு பெண்களைத் தவிர மற்றவர்கள் எல்லாமே (நான் உட்பட) கூடுதல் சம்பாத்தியம் இருந்தால் வசதியாக வாழலாம், எதிர்காலத் திட்டங்களுக்கு சேமிக்கலாம் என்கிற ஒரே காரணத்திற்காகத் தான் வேலைக்குச் செல்கிறார்கள். அதற்குக் காரணம், குடும்பப் பொறுப்பு பெண்களின் சுய ஆர்வத்தை விழுங்கிவிகிறது என்பது என் கருத்து. இதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் ராபின் ஆப்ராம்ஸ் முன் வைத்த அந்த மூன்று வழிமுறைகளையும் நம் ஊரில் அமல்படுத்தினால் இந்த நிலை மாறுமா?

No comments: