Friday, January 21, 2005

மாமியாரைத் தோழியாக்க உத்திகள் தேவை!

மாமியாருடன் ஒரு நல்ல நட்பான உறவு முறையை உருவாக்கிக் கொள்வது எந்த ஒரு பெண்ணுக்குமே ஒரு பெரிய சவால் தான். பல பெண்கள் இந்த சவாலை சமாளிக்க பல உத்திகளைக் கையாண்டிருப்பார்கள். நான் கையாண்டு பயன் கிடைத்த ஒரு உத்தியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். எனக்குத் திருமணம் ஆன புதிதில் மாமியார் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தேன். அப்போது எங்களுக்கிடையில் உரையாடல்கள் இடர்பாடாகத் தான் இருந்தது. எங்களுடைய எண்ண அலைகள் முற்றிலும் வெவ்வேறு அளவில் இருந்தன. என்ன பேசி மாமியாரை என் பக்கம் திருப்பலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஒரு முறை என் கணவரின் குழந்தைப் பருவ புகைப்படம் ஒன்றைப் பார்த்த நான், என் மாமியாரிடம் "அவர் சின்ன வயசில் எப்படி இருப்பார், என்னென்ன குறும்புகளெல்லாம் செய்வார்?" என்று கேட்டேன். உடனே என் மாமியாரின் முகத்தில் பளிச்சென்று ஒரு பிரகாசம். என் அருகில் வந்து உட்கார்ந்துக் கொண்டார். "அதையேன் கேட்கிற? அவன் இருக்கானே..." என்று ஆரம்பித்தவர் ஆர்வத்துடன் என் கணவருடைய பல சுவாரஸ்யமான சிறு வயது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். எனாக்கு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்ததது. ஒரு வாரமாக என்னிடம் பாராமுகமாக இருந்த மாமியார், ஒரே நாளில் சற்று நெருங்கி வந்துவிட்டார். ஒரு தாய் நினைத்து நினத்து பெருமையும் மகிழ்ச்சியும் அடையக் கூடிய ஒரு விஷயம் அவள் தன் குழந்தையை சீராட்டி, தாலாட்டி வளர்த்து ஆளாக்கிய அனுபவம் இல்லையா? இதை புரிந்து கொண்ட நான், அவ்வப்போது இதைப் பற்றி என் மாமியாரிடம் பேசினேன். இது எங்களிடையே உள்ள இடைவெளியைக் குறைக்க வெகுவாக உதவியது.

ஆனால் எத்தனை நாள் அதையே பேசிக்கொண்டிருக்க முடியும்? வெவ்வேறு உத்திகளை அவ்வப்போது கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. அமெரிக்காவிலிருந்து இரண்டான்டுகளுக்கு ஒரு முறை விடுமுறைக்குச் சென்று சில நாட்கள் மாமியாருடன் தங்கியிக்கும் போதே இப்படி யோசித்து, திட்டமிட்டு நடந்துகொள்ள வேண்டியிருக்கிறதே? மாமியாருடனேயே நிரந்தரமாக தங்கியிருக்கும் பெண்களை உண்மையிலேயே பாராட்டத்தான் வேண்டும். வேறு ஏதாவது உத்திகள் யாருக்காவது தெரிந்தால் எழுதவும், அடுத்த விடுமுறைக்குச் செல்லும் போது உபயோகமாக இருக்கும்

3 comments:

Mookku Sundar said...

நல்ல உத்திதான்...

எப்போது உங்கள் கணவரைப் பற்றி உங்கள் மாமியாரிடம் பேசினாலும், அவர்களைவிட உங்கள் கணவரைப் பற்றி உங்களுக்கு கொஞ்சம் தான் தெரியும் என்கிற தொனி தெரியும்படியாக பார்த்துக் கொள்ளுங்கள். தன் அம்மாவைப் பற்றி உங்கள் கணவர் நினைவுகூர்வதை ( உதாரணம் : சமையல்) நிறைய சொல்லுங்கள்.

மற்றதை துணைத்தலைவர் பார்த்துக் கொள்வார். :-)

SnackDragon said...

http://karthikramas.blogspot.com/2005/01/5.html :) :)

தாரா said...

Jsri: உங்க மாமியார் கிட்ட சண்டை பிடித்துதான் ஆவேன் என்கிற முடிவில் இருக்கிறீர்கள் போலிருக்கு. மருமகளைத் தோழியாக்கும் உத்திகள் உங்க மாமியாருக்கு உபயோகமாக இருக்குமென்று நினைக்கிறேன். :)

மூர்த்தி: மாஸ்டர் கார்டைக் கொடுத்து மாமியாரைத் தோழியாக்கி, நான் கடனாளியாகிவிட்டால்???

தாரா.